மினர்வா மிரபல் ரேய்ஸ்

டொமினிக் வழக்கறிஞர், அரசியல் செயற்பாட்டாளர்

மரியா அர்ஜென்டினா மினர்வா மிரபல் ரெய்ஸ், அல்லது மினர்வா (María Argentina Minerva Mirabal Reyes, or Minerva) என்பவர் மிரபல் சகோதரிளில் மூன்றாவதாவார். இவர் 12, மார்ச், 1926 அன்று பிறந்தார்.[1] இவரது பெற்றோர் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த மெர்சிடிஸ் ரெய்ஸ் காமிலோ மற்றும் என்ரிக் மிரபல் ஆகியோராவர்.[2] தனது அக்காக்களைப் போலவே, மினெர்வாவும் தன் தாயார் மெர்சிடிஸ் மிரபலின் வற்புறுத்தலின் பேரில் எல் கோல்ஜியோ இன்மாகுலாடா கான்செப்சியனில் கல்வி பெற்றார்.[2] தங்களின் கல்வியின் மூலம், மினெர்வாவும் இவரது சகோதரிகளும் ஜெனரலிசிமோ ரஃபேல் லியோனிடாஸ் டிருஜிலோவின் அடக்குமுறை சர்வாதிகாரத்தை அடையாளம் கண்டு அதை எதிர்த்துப் பேசத் தொடங்கினர்.

கல்வியும் ஆரம்பகால செயல்பாடுகளும்

தொகு

இவருக்கு 22 வயதாக இருந்தபோது, தன்மீது அதிபர் ட்ருஜிலோவா கண்வைத்துள்ளதை உணர்ந்தார். இவரும் இவரது குடும்பத்தினரும் தனி விருந்துக்கு ட்ருஜிலோவால் வற்புருத்தி அழைக்கப்பட்டனர். அவரின் பாலியல் நோக்கத்தை மினர்வா நிராகரித்தார்.[3] இதனால் இவர் சிறையில் அடைக்கப்பட்டார். சட்டப் படிப்பையும் முடித்து பட்டம் பெற முட்டுக்கட்டைகள் போடப்பட்டன.[2] இவர் அரசியலில் ஈடுபட்டதாலும், குறிப்பாக அவர் டிருஜிலோவை நிராகரித்ததும் இவரது உயிருக்கு ஆபத்தாக முடியம் என்று அஞ்சிய மினெர்வாவின் பெற்றோர் இவரை சட்டக் கல்லூரியில் மேற்கொண்டு பயில அனுமதிக்கவில்லை. இவருக்கு நேர்ந்த அச்சுறுத்தலுக்கு அஞ்சி இவரது பெற்றோர் இவரை வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. அங்கு இவர் தனது நாட்டில் சுரண்டல், சர்வாதிகாரம் காரணமாக தான் அனுபவித்த அநீதிகள் குறித்து ஓவியங்களையும் கவிதைகளையும் வரைந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மினெர்வாவின் வருத்தத்தை உணர்ந்த பிறகு இவரது பெற்றோர் தங்கள் மனதை மாற்றிக்கொண்டனர், சாண்டோ டொமிங்கோ பல்கலைக்கழகத்தில் இவர் பயில வழிவகுத்ததனர். அங்கு இவர் சும்மா கம் லாட் பட்டம் பெற்றார். டொமினிகன் குடியரசில் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.[2]

செயற்பாடு

தொகு

டிருஜிலோ ஆட்சியில், டொமினிகன் குடியரசுக்குள்ளும், வெளிநாட்டில் வாழ்ந்த டொமினிகன்களுக்குள்ளும் எதிர்ப்புக் குழுக்கள் உருவாகின. எதிர்ப்பு இயக்கத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆண்களாக இருந்தபோதிலும், மிராபல் சகோதரிகள் உட்பட பல பெண்கள் அதில் இணைந்தனர். மினெர்வாவும் அவரது கணவர் மனோலோவும் ட்ருஜிலோவுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தில் முன்னணியில் இருந்தனர். 60 களின் முற்பகுதியில் அவர்கள் இணைந்து ஜூன் 14 இயக்கத்தை உருவாக்கினர்.[4] டிருஜிலோவினால் நாடுகடத்தப்பட்ட டொமினிகன்களை வைத்து மினர்வா குடும்பததினர் ஒரு திட்டததை செயல்படுத்த நினைத்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

எதிர்ப்பு இயக்கம் உருவானதைத் தொடர்ந்து, டிருஜிலோவின் ஆட்சியில் பல எதிர்ப்பாளர்கள், அவர்களது குடும்பத்தினர் என ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். டிருஜிலோவின் கொடுங்கோலாட்சிக்கு உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்புகள் எழுந்ததானால், சிறையில் அடைக்கப்பட்டிருந்த மிராபல் சகோதரிகள் உட்பட பெண்கள் விடுவிக்கப்பட்டனர்.[4] இருப்பினும், இவர்களின் கணவர்கள் சிறையிலேயே இருந்தனர்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

மினெர்வா தன் தோழரான மானுவல் ஆரேலியோ தவாரெஸ் ஜஸ்டோ அல்லது மனோவா என்பவரை மணந்தார். இவர்கள் 1954 இல் ஜராபகோவாவில் விடுமுறையில் இருந்தபோது சந்தித்தார்.[5][4] மனோலோ ஒரு சட்டக் கல்லூரி மாணவருமாவார். இருவரும் புரட்சிக் குழுவில் இருந்தனர். இவர்கள் திருமணம் செய்துகொண்டு, நவம்பர் 1955 இல் மினெர்வா ஜோசஃபினா மற்றும் ஜனவரி 1960 இல் மானுவல் என்ரிக் என்ற இரு குழந்தைகளைப் பெற்றனர்.[5]

படுகொலை

தொகு

1960, நவம்பர், 25 அன்று மினெர்வாவும் அவரது இரண்டு சகோதரிகளான, பேட்ரியா மற்றும் மரியா தெரசா ஆகியோர் தங்கள் கணவர்களைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் அவர்களின் ஓட்டுநருடன், டிருஜிலோவின் இரகசிய காவல்துறையினரால் கொல்லப்பட்டனர்.[6] அப்போது அவர்களைப் பிடித்து, அடித்து, கழுத்தை நெரித்துக் கொன்றனர்.[7] பின்னர் படுகொலையை மறைக்க அதை ஒரு மகிழுந்து விபத்தாக காவல்துறையினர் சித்தரித்தனர். சிறையில் உள்ள நான்காவது மீராபால் சகோதரி தேத்தே அந்த நேரத்தில் அவர்களுடன் இல்லாததால் அவர் தப்பித்தார். மக்களால் வண்ணத்துப்பூச்சிகள் என்றும் அழைக்கப்பட்ட மிராபல் சகோதரிகளின் படுகொலைகள் நாட்டையே உலுக்கியது. அது டிருஜிலோவின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிகள் வலுக்க காரணமாயிற்று. அவர்களின் இறப்புக்கு ஒரு ஆண்டு கழித்து கொடுங்கோலாட்சி முடிவுக்கு வந்தது.[8] டிருஜிலோ சர்வாதிகார ஆட்சியின் போது செய்யப்பட்ட மிகக் கொடூரமான செயல்களில் ஒன்றாக இவர்களின் மரணங்கள் கருதப்பட்டன.

மரபு

தொகு

1981 ஆம் ஆண்டில், இவர்கள் இறந்த நாளை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாக அனுசரிக்கபட்டது.[9] பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாளாக ஐக்கிய நாடுகள் சபை இவர்கள் கொல்லபட்ட நவம்பர் 25 ஐ நினைவுகூர வேண்டும் என்று அறிவித்தது.

இவர்களின் கதையை அடிப்படையாக கொண்டு 1994 இல் ஜூலியா அல்வாரெசால் இன் தி டைம் ஆஃப் தி பட்டர்ஃபிளைஸ் என்ற புதினமாக எழுதப்பட்டது. 2001 இல் அது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "NACE LA ERA MODERNA", Las ideas políticas en la historia (Political ideas in history), Universidad del Externado de Colombia, pp. 175–186, 2013-08-02, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/j.ctv31zqggn.10, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-958-710-993-1, பார்க்கப்பட்ட நாள் 2023-06-20 {{citation}}: Unknown parameter |trans_title= ignored (help).
  2. 2.0 2.1 2.2 2.3 "Mirabal Sisters | Encyclopedia.com". www.encyclopedia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-07.
  3. "Violence and discrimination against women, a very serious problem in the Dominican Republic". Archived from the original on 2013-12-03.
  4. 4.0 4.1 4.2 Pruitt, Sarah. "How the Mirabal Sisters Helped Topple a Dictator". HISTORY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  5. 5.0 5.1 Castillo, Altagracia (2017-11-22). "Biografía de Minerva Mirabal | El Día Nacionales" [Biography of Minerva Mirabal | National Day]. El Día (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
  6. 6.0 6.1 "In the Time of the Butterflies: The Mirabal Sisters". everythingsoulful.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  7. Tapalaga, Andrei (2020-09-04). "The Mirabal Sisters: A Global Symbol of Violence Against Women". Medium (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
  8. Roorda, Eric Paul (2019-06-25). "The Murder of the Mirabal Sisters in the Dominican Republic". Oxford Research Encyclopedia of Latin American History (in ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acrefore/9780199366439.013.487. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199366439. பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
  9. Tapalaga, Andrei (2020-09-04). "The Mirabal Sisters: A Global Symbol of Violence Against Women". Medium (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினர்வா_மிரபல்_ரேய்ஸ்&oldid=4056579" இலிருந்து மீள்விக்கப்பட்டது