மின்சாரப்பணி மேற்பார்வையாளர்

தமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியம் மின்சாரப் பணிகளை மேற்பார்வை செய்வதற்கான தகுதிச் சான்றுகளை வழங்குகிறது. மின்னியல் கல்வித் தகுதிகள் இருந்தாலும் இத்தகுதிச் சான்று பெற்றவர்கள் மட்டுமே மின்சாரப்பணி மேற்பார்வையாளராகத் தொழிற்சாலைகளில் பணியாற்ற முடியும். மேலும் உயர் அழுத்த மின்சாரப் பணிகளில் வேலை செய்ய முடியும்.

தகுதிச்சான்று

தொகு

மின்சாரப் பணி மேற்பார்வையாளர்களுக்கான தகுதிச் சான்றுகள் கீழ்காணும் கல்வித் தகுதியுடையவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

  • மின்சாரப் பொறியியல் பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்கள் ஏதாவது ஒரு உயர் மின்னழுத்தம் கொண்ட நிறுவனத்தில் குறைந்தது இரண்டு வருடம் பணியாற்றி இருக்க வேண்டும்

(அல்லது)

மின்சாரப் பொறியியல் பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்கள் ஏதாவது ஒரு உயர் மின்னழுத்தம் கொண்ட மின்மாற்றி அமைப்புப் பணியினைச் செய்து ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

மின்சாரப் பணி மேற்பார்வையாளர் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

மின்சாரப்பணி மேற்பார்வையாளர் தேர்வு

தொகு

மின்சாரப்பணி மேற்பார்வையாளர் தேர்வுகள் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான விளம்பரம் தமிழ் நாளிதழ்களில் வெளியிடப்படும். இத்தேர்வில் மின்சாரக் கருத்தியல் ஒரு பாடமாகவும், மின்சாரம் குறித்த விருப்பப் பாடம் ஒரு பாடமாகவும், வாய்மொழிக் கேள்வி மற்றும் செயல்முறைத் தேர்வு ஒரு பாடமாகவும் தேர்வு நடத்தப்படுகிறது. செயல்முறைத் தேர்விற்கு மொத்தம் 100 மதிப்பெண்களும் அதில் தேர்ச்சி பெற குறைந்தது 40 மதிப்பெண்களும், இரண்டு எழுத்து வழியிலான தேர்வுகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் 50 மதிப்பெண்களும் அதில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் 20 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். செயல்முறைத் தேர்வில் வாய்மொழியாகக் கேட்கப்படும் கேள்விகளில் அவர்கள் பணிபுரிந்த உயர் அழுத்த மின்சாரப் பணிகள் குறித்த கேள்விகள் அதிக அளவில் இடம்பெறும். இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மின்சாரப் பணி மேற்பார்வையாளர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்.

தகுதிகள்

தொகு

மின்சாரப்பணி மேற்பார்வையாளர் தேர்வு எழுத விரும்புபவர்கள் கீழ்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

  1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மின்சாரப் பணியில் குறைந்தது ஐந்து ஆண்டுகளும் அதில் உயர் அழுத்த மின்சாரப் பணிகளில் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது பணி புரிந்திருக்க வேண்டும்.
  3. உயர் அழுத்த மின்சாரப் பணிகளில் வேலை செய்த அனுபவம் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கோட்ட செயற்பொறியாளரிடம் சான்றிதழ் ஒன்று பெற வேண்டும்.