மின்சார மணி
மின்சார மணி (Electric bell) என்பது ஒரு மின் காந்த சாதனம் ஆகும். இது பள்ளிகளிலும், நிறுவனங்களிலும் அறிவிப்பு செய்யவோ, யாரையாவது அழைக்கவோ பயன்படுத்தப்படும் சாதனம் ஆகும். இது புகைவண்டிப்பாதை கடக்கும் பாதைகளிலும், தொலைபேசிகளிலும் தீ மற்றும் திருட்டு தொடா்பான அறிவிப்பான்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போதைய நிலையில் மின்சார மணியானது மின்னணுவியல் சாதனங்களால் இடப்பெயா்ச்சி செய்யப்பட்டுள்ளது.
வேலை செய்யும் விதம்
தொகுமின்சார மணியானது, இலாட வடிவ மின் காந்தம், அதைச்சுற்றிய கம்பிச்சுருள், ஒரு சாவி, மின்கல அடுக்கு, இரும்புப்பட்டை, மின்காந்தம், சுத்தியல், மணி இவற்றைக் கொண்டுள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள மின்சார மணியின் மின் சுற்றில், சாவி மூடப்பட்டிருக்கும் போது கம்பிச்சுருளின் வழியே மின்னோட்டம் பாய்கிறது. இதன் காரணமாக இலாட வடிவச் சட்டம் மின்காந்தமாகிறது. அது இரும்புப்பட்டையை இழுக்கிறது. இச்செயலின் காரணமாக இரும்புப்பட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் சுத்தியல் இழுக்கப்பட்டு அது மணியைத் தாக்கி ஒலியை உண்டாக்கும். இப்போது மின்சாரமானது துண்டிக்கப்படுவதால், கம்பிச்சுருளில் மின்னோட்டம் துண்டிக்கப்படுகிறது. மின்னோட்டம் துண்டிக்கப்பட்டதால் கம்பிச்சுருளில் மின்னோட்டம் செல்லாததால் இலாட வடிவச் சட்டம் காந்தத்தன்மையை இழக்கும். இதன் காரணமாக இரும்புப்பட்டை பழைய நிலைக்குச் செல்லும். தற்போதுள்ள நிலையில் மின்சுற்று முழுமையடைகிறது. சுற்றில் மீண்டும் மின்னோட்டம் செல்லும். இரும்புப்பட்டை இழுக்கப்படும். அதைத் தொடா்ந்து சுத்தி இழுக்கப்படும். மணியானது சுத்தியால் தாக்கப்பட்டால் ஒலியைத் தரும். இச்செயல் மீண்டும் மீண்டும் நடந்து மணி தொடா்ந்து ஒலி எழுப்பும். இவ்வாறாக மின்சார மணியானது செயல்படுகிறது.[1]
வரலாறு
தொகு1823 ஆம் ஆண்டில் வில்லியம் ஸ்டா்ஜன் என்பவரால் மின்காந்தமானது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடா்ந்து பல்வேறு விதமான மின்பொறியியல் சாா்ந்த அமைப்புகள் இத்தகைய மின்சார மணிகள் உருவமைக்கப்பட்டன. அப்படிப்பட்ட அலைவுறும் மின் கம்பியைத் தலையாய பகுதியாகக் கொண்ட மின்சார மணி ஜேம்ஸ் மாா்ஷ் என்பவரால் 1824 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய மின்சார மணியின் வடிவமைப்பானது துாண்டல் சுருள்களில் உள்ள முதன்மை மின்னிணைப்பைத் துண்டிக்கும் அதிா்வுறக்கூடிய “தொடா்பு நீக்குதல் சாதனம்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தவை ஆகும். இவ்வகை அதிா்வுறும் சுத்தியல் அமைப்பைக் கொண்ட மின்சார மணியானது ஜோஹன் பிலிப் வேக்னா் (1839) மற்றும் கிறிஸ்டியன் எா்ன்ஸ்ட் நீஃப் (1847) ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டன.[2]