மிலோவின் வீனசு
மிலோவின் வீனசு (Venus de Milo) எனப் பரவலாக அறியப்படும் மிலோவின் ஆஃப்ரோடைட்டு (Aphrodite of Milos) ஒரு பண்டைய கிரேக்கச் சிலையும், பண்டைய கிரேக்கச் சிற்பக்கலையின் மிகவும் பெயர் பெற்ற படைப்பும் ஆகும். முதலில் இது பிராக்சிடெலெசு என்னும் சிற்பி உருவாக்கியதாகக் கருதப்பட்டது. பின்னர், அச்சிலையின் பீடத்தில் காணப்பட்ட கல்வெட்டிலிருந்து இது ஆன்டியோச்சின் அலெக்சாண்ட்ரொசு என்பவருடைய ஆக்கம் என நம்பப்படுகிறது. கிமு 130 க்கும் 100 க்கும் இடையில் உருவாக்கப்பட்ட இச்சிலை காதலுக்கும் அழகுக்குமான கிரேக்கப் பெண் தெய்வம் ஆஃப்ரோடைட்டைக் (உரோமரின் வீனசு) குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. சலவைக் கல்லால் செய்யப்பட்ட இச்சிலை இயல்பான மனித அளவிலும் சற்றுப் பெரியதான 203 சமீ (6 அடி 8 அங்) உயரமானது. கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இதன் கையின் ஒரு பகுதியும், முன்னைய பீடமும் தொலைந்துவிட்டன. இது தற்போது பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் நிரந்தரமான காட்சியில் உள்ளது. இச்சிலை இது கண்டுபிடிக்கப்பட்ட கிரேக்கத் தீவான மிலோசு (Milos) என்பதைத் தழுவிப் பெயரிடப்பட்டது.
மிலோவின் வீனசு | |
---|---|
ஓவியர் | ஆன்டியோச்சின் அலெக்சான்ட்ரோசு |
ஆண்டு | கிமு 130 - 100 |
வகை | சலவைக்கல் |
பரிமானங்கள் | 203 cm (80 அங்) |
இடம் | லூவர் அருங்காட்சியகம், பாரிசு, பிரான்சு |
மிலோவின் ஆஃப்ரோடைட்டு அதன் காணமல்போன கையின் மர்மம் தொடர்பில் பெயர் பெற்றது.[1] சிலையின் வலது மார்பகத்துக்குச் சற்றுக் கீழே ஒரு துளை உள்ளது. இந்தத் துளைக்குள் முன்னர் உலோகக் கழுந்து ஒன்று இருந்திருக்கக்கூடும். இக்கழுந்து தனியாக உருவாக்கப்பட்ட வலது கையை தாங்குவதற்காகப் பயன்பட்டிருக்கலாம்.
கண்டுபிடிப்பும் வரலாறும்
தொகு"மிலோவின் ஆஃப்ரோடைட்டு" சிலை 1820 ஏப்ரல் 8 ஆம் தேதி யோர்கோசு கென்ட்ரோட்டாசு (Yorgos Kentrotas) என்னும் உழவர் ஒருவரால், பழைய மிலோசு நகரத்தின் அழிபாடுகளுக்குள் புதையுண்டிருந்த மாடக்குழி ஒன்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொதுவாக உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்விடம் முன்னர் ஓட்டோமான் பேரரசின் பகுதியாக இருந்த ஏஜியனின் மிலோசுத் தீவில் உள்ளது.[2] இவ்விடம் தற்காலத்தில் திரிப்பிட்டி என அழைக்கப்படும் ஒரு ஊர் ஆகும். பிற இடங்களில் இச்சிலையைக் கண்டுபிடித்தவர்கள் யோர்கோசு பொட்டோனிசுவும் அவரது மகன் அந்தோனியோவும் என அடையாளம் காணப்படுகின்றது. பால் காரசு (Paul Carus) இச்சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடம் ஒரு பழைய நாடக அரங்கம் என்றும், அது தீவின் தலைநகரான காசுட்ரோவுக்கு அண்மையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பொட்டோனிசும் அவரது மகனும் பாரமான கற்பலகை ஒன்றால் மூடப்பட்டிருந்த சிறிய நிலக்கீழ் குகை ஒன்றைத் தற்செயலாகக் கண்டனர் என்றும், அதற்குள் இரண்டு துண்டுகளாகக் காணப்பட்ட சலவைக்கற் சிலையும், மேலும் பல உடைந்த சலவைக்கற் துண்டுகளும் இருந்ததாகவும், இது 1820 பெப்ரவரியில் நடந்ததாகவும் அவர் கூறுகிறார். இவரது இக்கூற்று "செஞ்சுரி சஞ்சிகை" யில் வெளியாகியிருந்த கட்டுரை ஒன்றை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது.[3]
ஆசுத்திரேலிய வரலாற்றாளர் எட்வார்டு டுயிக்கர் (Edward Duyker) 1820 இல் பிரான்சுத் தூதுவராக மிலோசில் இருந்த லூயிசு பிரெசுட் (Louis Brest) என்பவர் எழுதிய கடிதம் ஒன்றைச் சான்று காட்டி, சிலையைக் கண்டுபிடித்தவர் தியோடோரசு கென்ரோட்டாசு என்றும், பின்னர் கண்டுபிடிப்புக்கு உரிமை கோரிய தியோடோரசின் இளைய மகன் "ஜோர்ஜஸ்" (யோர்கசு என்று ஒலிக்கப்படும்) என்பவனோடு தான் குழப்பிக்கொண்டதாகவும் கூறுகிறார். டுயிக்கரின் கூற்றுப்படி, முன்னர் உரோம உடற்பயிற்சிக் கூடத்தின் ஒரு பகுதியாக இருந்த அழிந்துபோன சிற்றாலயம் ஒன்றிலிருந்து கல் ஒன்றை கென்ட்ரோட்டாசு அகற்றியபோது, அதன் கீழ் ஒரு நிலக்கீழ் வெளியிடம் இருந்ததாகவும் இந்த வெளியிடத்துக்கு உள்ளேயே கென்ட்ரோட்டாசு முதலில் சிலையின் மேற்பகுதியைக் கண்டதாகவும் தெரிகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Curtis 2003.
- ↑ பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் மிலோவின் வீனசு
- ↑ Carus, Paul (1916). The Venus of Milo: An Archeological Study of the Goddess of Womanhood. Open Court Publishing Company. p. 2. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.
- ↑ Duyker 2014, ப. 61–62.
உசாத்துணைகள்
தொகு- Curtis, Gregory (2003). Disarmed: The Story of the Venus de Milo. New York: Alfred A. Knopf. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0375415234. இணையக் கணினி நூலக மைய எண் 51937203.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Duyker, Edward (2014). Dumont d’Urville: Explorer and Polymath. Dunedin, New Zealand: Otago University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1877578700.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)