முடிசூடிய மரியா (ஜியோட்டோ)
முடிசூடிய மரியா (Madonna Enthroned அல்லது Ognissanti Madonna) என்பது நடுக்கால இறுதியில் வாழ்ந்த ஜியோட்டோ டி போண்டோனே (Giotto di Bondone) (1266/7 - 1337) என்னும் இத்தாலிய கலைஞர் வரைந்த ஓர் ஓவியம் ஆகும். இது இத்தாலியின் புளோரன்சு நகரில் உஃப்ஃபீசி கலைக்கூடத்தில் காக்கப்பட்டு வருகிறது.
முடிசூடிய மரியா Ognissanti Madonna | |
---|---|
ஓவியர் | ஜியோட்டோ Giotto |
ஆண்டு | சுமார் 1310 |
வகை | பலகைமேல் பசைக்கலவை |
இடம் | உஃப்ஃபீசி கலைக்கூடம் (Uffizi Gallery), புளோரன்சு, இத்தாலியா |
இந்த ஓவியம் சுமார் 1310ஆம் ஆண்டின் வரையப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த ஓவியத்தில், கிறித்தவ கலைமரபைப் பின்பற்றி, இயேவின் தாயாகிய மரியா தம் மடியில் குழந்தை இயேசுவை வைத்துக்கொண்டு, அரியணையில் அரசியாக வீற்றிருக்கின்றார். அவர்களைச் சூழ்ந்து வானதூதர்களும் புனிதர்களும் உள்ளனர்.
இந்த ஓவியம் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின் முதல் ஓவியமாகப் போற்றப்படுகிறது. இறுக்கமான விதிகளுக்கு உட்பட்டிருந்த பிசான்சிய ஓவியக் கலைப் பாணியிலிருந்து வேறுபட்டு, இயல்பான விதத்தில் வரையப்பட்ட ஓவியம் இது.
ஓவியத்தை வரைந்தவர்
தொகுஜியோட்டோ எந்தெந்த ஓவியங்களை வரைந்தார் என்பது பற்றிய விவாதம் இன்னும் தொடர்ந்தாலும், "முடிசூடிய மரியா" என்னும் இந்த ஓவியம் ஜியோட்டோவின் கையால் வரையப்பட்டதே என நிறுவுவதற்கு பல ஆவணங்கள் உள்ளன. 1447இல் லொரேன்சோ கிபேர்ட்டி என்பவர் தம் நூலில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.[1]
இந்த ஓவியம் ஜியோட்டோவின் பிற்காலப் படைப்புகளுள் ஒன்று. அதை அவர் புளோரன்சு நகரில் வரைந்து முடித்தார். புளோரன்சு நகரில் பிரான்சிஸ்கு சபைக் கோவிலாகிய "அனைத்துப் புனிதர் ஆலயத்தின்" பெரிய பீடத்தின் மேல் பக்கம் வைப்பதற்காக இந்த ஓவியம் படைக்கப்பட்டது.
அன்னை மரியா தம் மகனான இயேசுவைத் தம் மடியில் வைத்திருக்கிறார். அரியணையில் அரசியாக அமர்ந்திருக்கிறார். அவர்களைச் சுற்றி வானதூதர்களும் புனிதர்களும் நிற்பதைக் காணலாம். இவ்விதத்தில் அன்னை மரியாவையும் இயேசுவையும் சித்தரிக்கும் ஓவியப் பாணி Maestà (Majesty) என்று இத்தாலிய மொழியில் அழைக்கப்பட்டது. அதைத் தமிழில் "முடிசூடிய மரியா" எனலாம்.
ஜியோட்டோவின் முன்னோடிகள்
தொகுகிறித்தவ பிசான்சியக் கலையின் கூறுகள் ஜியோட்டோவின் ஓவியத்தில் உள்ளன. திருவோவியம் என்னும் அந்தக் கலைப்பாணியில் தங்க நிறப் பின்புலம், ஆடைகளில் தங்க நிறம் போன்றவை உண்டு. அதை ஜியோட்டோவின் இந்த ஓவியத்திலும் காணலாம். பிசான்சியக் கலை இத்தாலியில் சில புதிய அம்சங்களைப் பெற்றது. அவற்றையும் ஜியோட்டோ தம் ஓவியத்தில் காட்டுகிறார்.
எனவே இந்த ஓவியத்தில் பிசான்சியக் கலையின் இறுக்கம் சிறிது உண்டு. குழந்தை இயேசுவை மடியில் தாங்கி, நடுவில் அமர்ந்திருக்கின்ற மரியா, சூழ்ந்திருக்கின்ற வானதூதர்களையும் புனிதர்களையும் விட பெரிய உருவில் காண்பிக்கப்படுகிறார்.
அதே நேரத்தில், பிசான்சியக் கலையில் சித்தரிக்கப்படும் நபர்களைப் போல் அல்லாமல், ஜியோட்டோவின் ஓவியத்தில் வருவோர் முப்பரிமாணத் தோற்றம் கொண்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள். அளவிலும் பெரியவர்களாய் உள்ளார்கள்.
மரியா அமர்ந்திருக்கின்ற அரியணை இத்தாலிய-பிசான்சியப் பாணியில் உள்ளது. அதை அணிசெய்கின்ற பன்னிறப் பளிங்குக் கற்கள் ஒரு புதுமையான சேர்க்கை. கிறித்தவக் கலையின் தொடக்க காலத்தில் பளிங்குக் கற்கள் பயன்படுத்தப்பட்டதை ஜியோட்டோ இங்கே புகுத்துவது தெரிகிறது.[2]
ஜியோட்டோவின் ஆசிரியராகக் கருதப்படுகின்ற சீமாபூவே (Cimabue) என்பவரின் கலைத் தாக்கத்தை ஜியோட்டோவின் ஓவியத்தில் காணலாம். "முடிசூடும் மரியாவும் இயேசுவும்" என்றொரு ஓவியத்தை சீமாபூவே 1280இல் வரைந்திருந்தார். அது ஜியோட்டோவின் ஓவியத்திற்கு ஒரு முன்னோடியாக அமைந்தது. இரு ஓவியங்களுமே பெரும்பாலும் இத்தாலிய-பிசான்சிய கலைப்பாணியில் அமைந்தவை என்றாலும் அக்கலைப்பாணி சீமாபூவே ஓவியத்தில் அதிக அழுத்தமாக உள்ளது.[3]
வானதூதர்களின் இறகுகளை வரைந்துள்ள பாணியிலும் ஜியோட்டோவுக்கும் சீமாபூவேக்கும் இடையே ஒப்புமை உள்ளது. இடம், உருவ அளவு போன்றவற்றின் முக்கியத்துவத்தை அவர்களுடைய ஓவியங்களில் காணலாம்.
ஜியோட்டோ சித்தரிக்கின்ற மரியா, இயேசு, வானதூதர்கள், புனிதர்கள் முகத்தில் ஓர் அமைதி தவழ்கிறது. அவர்கள் படம் என்றிராமல் சிலை போன்று தோற்றம் தருகிறார்கள். [4]
சில சிறப்புகள்
தொகுமுப்பரிமாண முறையில் ஆள் உருவங்களைச் சித்திரமாக எழுதிய முதல் மேற்கு ஐரோப்பியர் ஜியோட்டோ என்று கருதப்படுகிறது. ஆள் உருவங்களின் உடலுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார். பிசான்சியக் கலை தட்டையாக வரைந்ததை ஜியோட்டோ முப்பரிமாணத்துக்குக் கொணர்ந்தார்.
ஜியோட்டோவின் ஓவியத்தில் மரியாவும் பிறரும் அணிந்திருக்கின்ற ஆடைகளும் அவற்றின் மடிப்புகளும் அதிக அளவு இயல்பாக உள்ளன. இதையும் உடல் அளவையும் வரைகளால் காட்டாமல் ஒளியும் நிழலும் முறையில் (chiaroscuro) காட்டுகிறார். உடை மடிப்புகளின் உள்ளே காட்டுவதும் தெரிகிறது. இதைக் குறிப்பாக மரியாவின் முழங்கால் பகுதி, மார்புப் பகுதி ஆகியவற்றில் காணலாம். இயேசுவின் முகத்திலும் இது தோன்றுகிறது.
ஜியோட்டோ ஓவியத்தின் இன்னொரு சிறப்பு, அவர் பார்வையாளர்களை ஓவியத்தின் பகுதியாகக் கொணர்வது ஆகும். ஜியோட்டோவுக்கு முந்திய கலைஞர்கள் வரைந்த "முடிசூடிய மரியா" ஓவியங்களில் வானதூதர்களும் புனிதர்களும் காட்டப்படுவதுண்டு. ஆனால் ஜியோட்டோவின் ஓவியத்தில் இருபுறமும், சாளரங்கள் வழியாக சாட்சிகள் போல இருவர் நிற்கின்றனர். அவர்கள் ஓவியத்தின் பார்வையாளர்களாகவும், மரியா மற்றும் இயேசு குறிப்பிட்டு நிற்கின்ற தெய்விக உலகில் மண்ணுலகோர் பங்கேற்பதைக் காட்டுவதாகவும் உள்ளார்கள்.
வெளி ஒளிதங்கள் | |
---|---|
Giotto, The Ognissanti Madonna (Madonna Enthroned), Smarthistory[5] |
குறிப்புகள்
தொகு- ↑ Turner, 676
- ↑ Greenspun, 370
- ↑ Stokstad, 603
- ↑ Turner, 686
- ↑ "Giotto, The Ognissanti Madonna (Madonna Enthroned)". Smarthistory at Khan Academy. Archived from the original on நவம்பர் 10, 2014. பார்க்கப்பட்ட நாள் January 24, 2013.
ஆதாரங்கள்
தொகு- Beckett, Sister Wendy and Patricia Wright. Sister Wendy’s 1000 Masterpieces: Sister Wendy Beckett’s Selection of the Greatest Paintings in Western Art. New York: Dorling Kindersley, 1999. Print.
- Greenspun, Joanne, ed. History of Art. Abrams: New York, 1997. Print.
- Turner, Jane, ed. The Encyclopedia of Italian Renaissance and Mannerist Art, Vol. 1. London: Macmillan Reference, 2000. Print.