முதலாம் நரசிம்மவர்மன் (630-668)

(முதலாம் நரசிம்மவர்மன்(630-668): இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முதலாம் நரசிம்மவர்மன் (630-668) புகழ் பெற்ற பல்லவ மன்னன் ஆவர். மகேந்திர வர்மனுக்குப் பின்னர் அவன் மகன் நரசிம்மவர்மன் பொ.ஊ. 630 ல் என்னும் பெயருடன் ஆட்சிக்கு வந்தான். இவரது காலத்திலேயே பல்லவர் குலம் மிகவும் சிறப்புற்று விளங்கியது. இவரது ஆட்சி காலத்தில் பல்லவ அரசு வடக்கில் கிருஷ்ணா ஆறு முதல் தெற்கில் மதுரை வரை பரந்து காணப்பட்டது. நரசிம்ம பல்லவரின் ஆட்சி காலத்திலேயே அப்பர், திருஞானசம்பந்தர், சிறு தொண்டர் போன்ற சைவ நாயன்மார்கள் வாழ்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகின்றன. அவருடைய ஆட்சியின் போது, பொ.ஊ. 640 ல் சீனப்பயணி யுவாங் சுவாங் காஞ்சிபுரத்திற்கு விஜயம் செய்தார்.[1]

இவன் சிறந்த மல்யுத்த வீரனாய் திகழ்ந்ததால் மாமல்லன் என்ற பட்டம் பெற்றான். இவன் நினைவாகவே மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டது. மாமல்லபுரத்தில் மகேந்திரவர்மனால் தொடங்கப்பட்ட வேலைகளை நிறைவு செய்தார். அரசியல், கலை போன்ற துறைகளில் இவனது சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை. இலங்கை மன்னன் மானவர்மனுக்கு உதவிசெய்தார்.

சாளுக்கியர்களுடன் போர்

தொகு

பல்லவர்களின் எதிரிகளாக விளங்கிய சாளுக்கியரை வெற்றிகொண்டு அவர்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கியவன் இவன். மகேந்திரவர்மனின் ஆட்சி காலத்தில் சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசி காஞ்சி மீது படையெடுத்து, காஞ்சி நகரை முற்றுகையிட்டான். இப்போரில் மகேந்திரவர்மன் இறக்க நேரிட்டது. இதற்கு பழி வாங்கும் முகமாக அவரது மகன் நரசிம்மவர்மன் பொ.ஊ. 642ல் வாதாபி நகர் மீது படையெடுத்தான் நரசிம்மவர்மனின் படை படைத்தளபதி பரஞ்சோதி தலைமையில் வாதாபி மீது படையெடுத்தது. இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும், ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும், பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன. சாளுக்கியரின் தலைநகரமான வாதாபி நகரம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து அவரது தந்தையின் தோல்விக்கு நரசிம்மவர்மன் பழிவாங்கினார். மேலும் போர்க்களத்திலேயே இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்டார். பல்லவப்படைகள் காஞ்சிபுரத்துக்கு வெற்றிகரமாக திரும்பினர். இதனால் நரசிம்மவர்மன் வாதாபிகொண்டான் என்று அழைக்கப்பட்டார். இந்த வெற்றிக்குப் பிறகு படைத்தளபதி பரஞ்சோதி 63 நாயன்மார்களில் ஒருவராக மாறி சைவசமயத்திற்கு அரும்பணி புரிந்தார்.[2]

இலக்கியத்தில் நரசிம்மவர்மன்

தொகு

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய சிவகாமியின் சபதம், மகேந்திரவர்மன் மற்றும் நரசிம்மவர்மன் ஆகியோரின் ஆரம்ப காலத்தையும் சாளுக்கியர்களுடன் அவரது போரையும் அடிப்படையாகக் கொண்டது. மேலும் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பார்த்திபன் கனவு, நரசிம்மவர்மனின் ஆட்சியின் பின்னணியை அடிப்படையாகக் கொண்டது .

மேற்கோள்கள்

தொகு
  1. "நரசிம்மவர்மன் வரலாறு".
  2. Ganga Ram Garg (General Editor) (1992). Encyclopedia of the Hindu World. Volume 1 (A-Aj): Concept Publishing Company, New Delhi. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7022-374-1. {{cite book}}: |author= has generic name (help)CS1 maint: location (link)