முதலாம் ஜான் பால் (திருத்தந்தை)

(முதலாம் யோவான் பவுல் (திருத்தந்தை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருத்தந்தை முதலாம் ஜான் பால் (தமிழ்: முதலாம் அருள் சின்னப்பர், முதலாம் யோவான் பவுல்), அதிகாரபூர்வமாக இலத்தீன் மொழியில் இயோன்னெஸ் பாவுலுஸ் I, உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 263வது திருத்தந்தை (பாப்பரசர்) ஆவார். இவர் பாப்பரசராகவும் வத்திக்கன் நகரின் தலைவராகவும் ஆகஸ்டு 26, 1978 முதல் செப்டம்பர் 28, 1978 வரை 33 நாட்கள் பணியாற்றினார். இவரது ஆட்சிக்காலம், திருத்தந்தையரின் மிகச்சிறிய ஆட்சிக்காலங்களில் ஒன்றாகும். இவர் பாப்பரசராக மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு முன்னரே இறந்துவிட்டார். இருப்பின்னும் இவரது தோழமையும் மனிதநேயமும் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். இவரே தனது பாப்பரசுப் பெயரில் இரட்டைப்பெயரை கொண்ட முதல் பாப்பரசராவார் மேலும் தனது பாப்பரசுப் பெயரில் "முதலாவது" என்ற பயன்படுத்திய முதல் பாப்பரசரும் இவரேயாவார்.

முதலாம் ஜான் பால்
John Paul I
263ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்ஆகஸ்டு 26, 1978
ஆட்சி முடிவுசெப்டம்பர் 28, 1978 (33 days)
முன்னிருந்தவர்ஆறாம் பவுல்
பின்வந்தவர்திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடுஜூலை 7, 1935
பென்னியாமினோ பிசியோல்-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவுடிசம்பர் 27, 1958
இருபத்திமூன்றாம் யோவான்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டதுமார்சு 5, 1973
பிற தகவல்கள்
இயற்பெயர்அல்பினோ லுசியானி
பிறப்பு(1912-10-17)17 அக்டோபர் 1912
இறப்பு28 செப்டம்பர் 1978(1978-09-28) (அகவை 65)
அருள் சின்னப்பர் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

தொடக்க காலம்

தொகு

1912ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வெனிஸ் நகரில் அல்பினோ லூச்சியானி என்ற இயற்பெயருடன் பிறந்த இவர், ஓர் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். மறைமாவட்ட குருமடத்தில் இணைந்த இவர், உயர் குருமடத்தில் பயின்று கொண்டிருந்த போது இயேசு சபையில் இணைய விரும்பினார். ஆனால் அக்குருமட அதிபரோ அதற்கு அனுமதி தர மறுத்ததால், மறைமாவட்ட குருத்துவப் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு 1935ல் குருவானார்.

தான் படித்த அதே குருமடத்தில் பேராசிரியராகவும் துணை அதிபராகவும் பணியில் இணைந்த இவர், உரோம் நகரின் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற விரும்பி அங்கு படிக்கச் செல்ல விரும்பினார். ஆனால் இவர் படிக்கும்போதே கல்வி கற்பிக்கவும் வேண்டுமென குருமட அதிகாரிகள் விரும்பினர். கிரகோரியன் பல்கலைக்கழகமோ, இவர் உரோம் நகரில் வந்து ஓர் ஆண்டாவது கல்லூரியில் படிக்க வேண்டும் என்றது. இவ்வளவு முக்கிய பேராசிரியரை இழக்க விரும்பாத வெனிஸ் குருமடத்திற்காக இந்தச் சிக்கலில் நேரடியாக தலையிட்டு, அங்கேயிருந்தே முனைவர் பட்டப்படிப்பை உரோம் பல்கலைக்கழகத்தில் தொடர சிறப்பு அனுமதி அளித்தார் திருத்தந்தை 12ம் பயஸ்.

திருத்தந்தையாக

தொகு

1958ம் ஆண்டு திருத்தந்தை 23ம் ஜான், குரு லூச்சியானியை ஆயராக அறிவித்து அவரை திருநிலைப்படுத்தினார். அதே திருத்தந்தை கூட்டிய இரண்டாம் வத்திக்கான் பொது அவையின் அனைத்துக் கூட்டங்களிலும் ஆயர் லூச்சியானி கலந்து கொண்டார். 1970ல் வெனிஸ் பேராயராகவும் முதுபெரும் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்ட இவரை, 1973ல் திருத்தந்தை 6ம் பால் கர்தினாலாக உயர்த்தினார்.

1978ல் இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தன்னை ஆயராக திருநிலைப்படுத்திய திருத்தந்தை 23ம் ஜான் மற்றும் கர்தினாலாக உயர்த்திய திருத்தந்தை 6ம் பால் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக முதலாம் ஜான் பால் என்ற பெயரை எடுத்துக்கொண்டார். வெனிஸ் நகரோடு நெருங்கிய தொடர்புடைய திருத்தந்தையர் பத்தாம் பயஸ், அருளாளர் 23ம் ஜான், முதலாம் ஜான் பால் ஆகியோர் வெனிஸ் மறைமாவட்ட பெருந்தந்தையாய் இருந்தபோது பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அம்சங்கள்

தொகு

திருத்தந்தை முதலாம் ஜான் பால் தன் எளிமையான நடவடிக்கைகளாலும், புன்னகையாலும், அனைவரையும் கை நீட்டி வரவேற்கும் பண்பாலும் உலகையே கவர்ந்தார். எளிமையின் அடையாளமாக திருத்தந்தையாக பதவியேற்கும் நிகழ்ச்சியில் மும்முடி அணிதலைத் தவிர்த்தார். உலகின் ஒவ்வொரு கத்தோலிக்க ஆலயத்தின் வருமானத்திலும் ஒரு விழுக்காடு மூன்றாம் உலக நாடுகளின் ஏழைத் திருச்சபைகளுக்கு வழங்கப்படவேண்டும் என்ற விதியைத் துவக்கியவர் இவரே.

எதைக் கூறினாலும் திருச்சபையின் சார்பாக பேசுவதாக 'நாம்' என்ற பதத்தையே அனைத்துத் திருத்தந்தையர்களும் பயன்படுத்திக் கொண்டிருக்க, அதனை 'நான்' என்று முதன் முதலில் மாற்றி பயன்படுத்தியவர் இவரே. திருத்தந்தையர்களின் பெயரில் முதலில் இரட்டைப் பெயரைப் பயன்படுத்தியவர் இவரே. பல்வேறு சீர்திருத்தங்களை திருச்சபையில் கொணர்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவர் இந்த எளிமையான திருத்தந்தை.

பாப்பரசரின் மரணம்

தொகு

புன்னகையின் திருத்தந்தை என்று அழைக்கப்பட்ட முதலாம் ஜான் பால், தான் திருத்தந்தையாக பதவியேற்ற 33 நாட்களில் அதாவது 1978ம் ஆண்டு செப்டம்பர் 28ந்தேதி மாரடைப்பால் காலமானார். இவரது உடல் வத்திக்கான் குகையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.