பத்தாம் பயஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் (இலத்தீன்: Pius PP. X, 2 சூன் 1835 – 20 ஆகத்து 1914, இயற்பெயர்: குயிசெபே மெல்கொரி சார்தோ), 1903 முதல் 1914 வரை கத்தோலிக்க திருச்சபையின் 257-ஆவது திருத்தந்தையாக இருந்தவர். இவர் ஐந்தாம் பயஸுக்கு பின் புனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தையாவார். இவர் திருச்சபையின் கொள்கைகளுக்கு நவீனத்துவ விளக்கம் அளிப்பதை எதிர்த்தார். பாரம்பரிய விளக்கங்களையே ஊக்குவித்தார். இவரின் மிகமுக்கிய செயல்பாடாக கருதப்படுவது, இவர் வெளியிட்ட திருச்சபை சட்ட தொகுப்பாகும். இவ்வாறு வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாம். இவர் கிறித்துவ ஒழுக்கங்களை தனிமனித வாழ்விலும் கடைபிடிப்பதில் ஊக்குவித்தார். இவர் பிறந்த ஊரான ரெய்சி, இவரின் பொருட்டு பின்நாளின் ரெய்சி பியோ X (இதாலிய ஒளி பெயர்ப்பில் இவரின் பெயர்) என பெயர் மற்றம் செய்யப்பட்டது.

புனித பத்தாம் பயஸ்
ஆட்சி துவக்கம்4 ஆகஸ்ட் 1903
ஆட்சி முடிவு20 ஆகஸ்ட் 1914 (11 ஆண்டுகள், 16 நாட்கள்)
முன்னிருந்தவர்பதின்மூன்றாம் லியோ
பின்வந்தவர்பதினைந்தாம் பெனடிக்ட்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு18 செப்டம்பர் 1858
கியோவானி அன்டோனியோ ஃபாரினா-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு20 நவம்பர் 1884
லூசிதோ மரிய பரோசி-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது12 ஜூன் 1893
பிற தகவல்கள்
இயற்பெயர்குயிசெபே மெல்கொரி சார்தோ
பிறப்பு(1835-06-02)2 சூன் 1835
ரெய்சி, லம்பர்டி-வெனிடா, ஆஸ்திய பேரரசு
இறப்பு20 ஆகத்து 1914(1914-08-20) (அகவை 79)
அப்போஸ்தலர் மாளிகை, உரோம்
கையொப்பம்பத்தாம் பயஸ் (திருத்தந்தை)-இன் கையொப்பம்
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா21 ஆகஸ்ட்
3 செப்டம்பர் (கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி 1955–1969)
முத்திப்பேறு3 ஜூன் 1951
பன்னிரண்டாம் பயஸ்-ஆல்
புனிதர் பட்டம்29 மே 1954
பன்னிரண்டாம் பயஸ்-ஆல்
பாதுகாவல்அட்லான்டா உயர் மறைமாநிலம்; தேஸ் மொயின்ஸ், ஐயோவா மறைமாநிலம்; புது நன்மை வாங்குவோர்; கிரேட் பால்ஸ்-பில்லிங்ஸ் மறைமாநிலம்; [கோட்டயம், இந்தியா மறைமாநிலம்; திருப்பயணிகள்; சான்டா லுசிஜா, மால்டா; ஸ்பிரிங் பீல்டு, மிசூரி மறைமாநிலம்; சம்போஙா, பிலிப்பைன்சு மறைமாநிலம்
பயஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

இவர் மரியாளிடம் பக்தி கொண்டவராக விளங்கினார். இவர் Ad Diem Illum என்னும் தனது சுற்றறிக்கையில், "மரியாளின் வழியாக கிறித்துவில் யாவற்றையும் புதுப்படைப்பாக்க" என்னும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். இதையே தனது ஆட்சியின் குறிக்கோளுரையாகக் கொண்டார்[1]. 20-ஆம் நூற்றாண்டில் திருத்தந்தையாக இருந்தவரில் பத்தாம் பயஸ் மட்டுமே அதிக தளப்பணி செய்தவராவார்[சான்று தேவை]. இந்த அனுபவத்தாலேயே அவரவரின் சொந்த மொழியிலேயே மறைபரப்ப தூண்டினார்.

இவரின் தொண்டு உள்ளம் வியக்கத்தக்கது. 1908-இல் நடந்த மெசினா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை, இத்தாலிய அரசு உதவி புரிய ஆரம்பிக்கும் முன்பே, தாமாகவே முன்வந்து திருத்தூதரக அரண்மனையில் தங்க வைத்தார்[2]. தம் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் பெறவில்லை. இவரின் மிகவிருப்பமான உடன் பிறந்தவரின் மகன் கடைசிவரை கிராமத்தில் பங்கு குருவாகவே இருந்தார். மற்ற மூன்று சகோதரிகளும் ஏழ்மையிலேயே வாழ்வைக் கழித்தனர்[2]. 'நான் ஏழையாக பிறந்தேன், ஏழையாக வாழ்ந்தேன், ஏழையாகவே சாக விரும்புகிறேன்' என அடிக்கடி சொல்வார்[3]. பலர் இவரின் இறப்புக்கு பின் இவரை புனிதரெனக் கொன்டாடி வெளிப்படையான வணக்கம் செலுத்தினர். இதனாலேயே இவரின் புனிதர் பட்ட நிகழ்வு விரைவில் நடந்தேறியது[3].

துவக்க வாழ்க்கையும் பணியும் தொகு

 
சர்தோ குடும்பத்தில் சமையல் அறை

குயிசெபே மெல்கொரி சார்தோவின், பிறப்பிடம் ரெய்சி, லம்பர்டி-வெனிடா, ஆஸ்திய பேரரசு (இப்போது இத்தாலியில் உள்ளது). இவர் கோவானி பதிஸ்தா சார்தோ (1792–1852) மற்றும் மார்கரிடா சான்சன் (1813–1894) என்னும் தம்பதியரின் பத்து பிள்ளைகளில் இரண்டாவதாவார். இவர் 3 ஜூன் 1835-இல் திருமுழுக்கு பெற்றார். குயிசெபேவின் இளமைக்காலம் ஏழ்மையிலேயே ஓடியது. இவரின் பெற்றோர் கல்விக்கு முக்கியத்துவம் தந்தனர். ஒவ்வொரு நாளும் குயிசெபே 6 கி.மி தொலைவு நடந்து பள்ளிக்குச் சென்றார்.

குயிசெபேவுக்கு மூன்று சகோதரரும், ஆறு சகோதரிகளும்: குயிசெபே சார்தோ, 1834 (ஆறுநாட்களில் மரித்தது குழந்தை); ஆஞ்சலோ சார்தோ, 1837–1916; தேரேசா பரோலின்-சார்தோ, 1839–1920; ரோசா சார்தோ, 1841–1913; அன்டோனியா தேயி பேயி-சார்தோ, 1843–1917; மரிய சார்தோ, 1846–1930; லூசியா போஸ்சின்-சார்தோ, 1848–1924; அன்னா சார்தோ, 1850–1926; பியிட்ரோ சார்தோ, 1852 (ஆறுமாதங்களில் மரித்தது குழந்தை).[4]

இளம் குயிசெபே, தன் கிராம குருவிடம் இலத்தீன் பயின்றார். மறைமாநில ஊக்கத்தொகை பெற்று பதுவா குருமடம் சேர்ந்து, இறையியல், மெய்யியல், படிப்புகளை முடித்தார்[5]

 
இளம் குயிசெபே சார்தோ

18 செப்டம்பர் 1858-இல், சார்தோ குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு, டொம்போலோவின் ஆன்ம குருவானார். அங்கே இருந்த பங்கு குரு உடல்நலம் குன்றி இருந்ததால், இவர் அவரின் பணியையும் செய்து வந்தார். அங்கே தாமஸ் அக்குவைனஸுவினுடைய இறையியல் மற்றும் கத்தோலிக்க திருச்சபை சட்டங்கள் முதலியவற்றைக் கற்று தேர்ந்தார்.

1867-இல் சலென்சோவின் ஆலய அதிபராக (Archpriest) பொறுப்பேற்றார். அங்கே கோயிலை புனரமைத்தார். மருத்துவமனையை விரிவாக்கினார். இவற்றையெல்லாம் செய்ய நிதியை தன் சொந்த செலவிலே, தன் உழைப்பின் கூலியையோ அல்லது பிறரிடம் வேண்டிப்பெற்றோ செய்தார். 1870களில் வடக்கு இத்தாலியில் பரவிய காலரா தொற்றிய நோயளிகளுக்கு இவர் பணிவிடை செய்தார்.

மறைமாவட்டப் பேராலய உயர்நிலைக் குருக்கள் பேரவையின் உறுப்பினராகவும், மறைமாவட்ட செயலகத் தலைமைச் செயலராகவும், திரிவிசோ குருத்துவ கல்லூரி முகவராகவும், அக்கல்லூரியின் ஆன்மகுருவாகவும், மறைமாவட்டப் குருக்கள் மேற்பார்வையாளராகவும் இருந்தார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணாக்கருக்கு மறைகல்வி வழங்க ஏற்பாடு செய்தார்.

1878-இல் மறைமாவட்ட ஆயர் சனாலியின் மரணத்திற்குப் பின், மறைமாவட்டப் பேராலய உயர்நிலைக் குருக்கள் பேரவை இவரை (மற்றொரு ஆயர் நியமிக்கப் படும் வரை) அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. 1878 டிசம்பர் முதல் ஜூன் 1880 வரை இப்பொறுப்பில் அவர் இருந்தார்.

1880-க்கு பின் திரிவிசோ குருமடத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.

கர்தினாலாகவும் மூப்பராகவும் தொகு

 
கர்தினால் சார்தோ

பதின்மூன்றாம் லியோ இவரை கத்தோலிக்க கர்தினாலாக 12 ஜூன் 1893-இல் உயர்த்தினார். சான் பெர்னாதோ அலே தெர்மியின் (பட்டம் சார்ந்த) கர்தினால் குருவாகவும், மூன்று நாட்களுக்கு பின் வெனிசின் மூப்பராகவும் திருத்தந்தை அறிவித்தார். இத்தாலிய அரசுடன் திருச்சபைக்கு இருந்த மனக்கசப்பால் 1894-ஆம் ஆண்டு வரை பொறுப்பேற்க இயலவில்லை.

திருப்பீட தேர்வு தொகு

 
பத்தாம் பயஸ், அக்டோபர் 1903

20 ஜூலை 1903-அன்று பதின்மூன்றாம் லியோ காலமானார். அதன் பின் கூடிய திருப்பீடத்தேர்வில் (Papal Election) கர்தினால் சார்தோ 4 ஆகஸ்ட் 1903 அன்று திருத்தந்தையாக தேர்த்தெடுக்கப்பட்டார். இவர் தன் ஆட்சிப்பெயராக பத்தாம் பயஸை தெரிவு செய்தார். 9 ஆகஸ்ட் 1903 அன்று முடிசூட்டு விழா நடந்தது.

திருப்பீட ஆட்சி தொகு

இவர் கிறித்தவதின் அடிப்படைவாத கொள்கையையுடையவர். இதனையே தம் ஆட்சிக்காலத்திலேயும் கையாண்டார். இவர் முடி சூட்டப்பட்ட தினத்தன்று இவரின் கழுத்தில் இருந்த சிலுவை முலாம் பூசப்பட்டது என்பதை அறிந்த பணியாளர்கள் அதிர்ந்தனர். ஆனால் இவர் அமைதியாக தன்னிடம் வேறு சிலுவை இல்லை எனக்கூறி அதனையே அணிந்து வந்தார்.[6] திருத்தந்தை எட்டாம் அர்பனால் கொண்டுவரப்பட்ட பழக்கமான, திருத்தந்தை தனியாக உணவருந்துதலை இவர் அழித்தார். இவர் தன் நண்பர்களைத் தன்னோடு உணவருந்த அழைப்பு விடுத்தார்.

இவர் சிறுவர்களிடம் தனிப்பட்ட அன்பு செலுத்தினார். சிறுவர்களைக் கவர எப்போதும் தன்னுடன் இனிப்புகளை எடுத்துச் செல்வார். இவர் பங்குகளில் சிறுவர்களுக்கான மறைக்கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, சிறுவர்களை ஆன்மிக இருளிலிருந்து வெளிக்கொணர முயன்றார்.[6]

திருச்சபை சீர்திருத்தங்களும் இறையியலும் தொகு

கிறிஸ்தியல் மற்றும் மரியாலியலில் தொகு

பத்தாம் பயஸ் தினசரி நற்கருணை வாங்குவதை ஊக்குவித்தார். 1904 வெளியிட்ட சுற்றுமடலில் ( encyclical), "கிறித்துவில் எல்லாவற்றையும் புனிதமாக்குவதில்" மரியாளுக்கு இருக்கும் பங்கினை எடுத்தியம்பினார். நாம் அனைவரும் மரியாளின் ஆன்மிகப்பிள்ளைகளாயிருப்பதால் அவருக்கு அன்னைக்குரிய வணக்கம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.[7] வாக்கு மனிதர் ஆனார் என கிறித்துவைப்பற்றி விவிலியம் கூறுகின்றது. ஆனால் மனு உருவான அவ்வாக்கிற்கு உடல் கொடுத்ததால் அவர் கிறித்துவின் அன்னையாகிறார். கிறித்துவின் மறைஉடலான திருச்சபை, கிறித்துவின் மனித உடலிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க இயலாது, ஆகவே மரியாள் திருச்சபையின் ஆன்மீக அன்னை மட்டுமல்ல, அவள் உண்மையான அன்னையும் கூட என்றார்.[8][9]

திருச்சபை சட்டங்களில் சீர்திருத்தம் தொகு

19 மார்ச் 1904 திருச்சபையின் சட்டத்தொகுப்பை உலகம் முழுமைக்கும் ஒரே சட்டத்தொகுப்பாக்கும்படி கர்தினால் குழாமின் ஆணையம் ஒன்றை வடிவமைத்தார். இவருக்கு முன் உலகம் முழுமைக்கும் ஒரே திருச்சபை சட்டத்தொகுப்பு இருந்ததில்லை. இவருக்குப் பின் திருத்தந்தையானவர்களுள் இருவர் (பதினைந்தாம் பெனடிக்ட் மற்றும் பன்னிரண்டாம் பயஸ்) இவ்வாணையத்தில் இருந்தனர். இவ்வாணையம் தன் பணியை பதினைந்தாம் பெனடிக்டின் ஆட்சியில் 27 மே 1917 அன்று நிறைவு செய்தது. அவை 19 மே 1918 அன்று துவங்கி 1983 ஆண்டின் திருவருகை காலம் வரை நடைமுறையில் இருந்தது.

திருச்சபை சட்டத்தில் சீர்திருத்தம் தொகு

பத்தாம் பயஸ் திருத்தந்தையின் திருப்பீடத்தின் கீழ் வரும் ஆட்சித்துறைகளை சீரமைத்தார். குறிப்பாக குருத்துவக் கல்லூரிகளை மேல்பார்வையிடும் ஆயர்களின் பணியைப் புதிய சட்டங்களால் Pieni L'Animo-என்னும் சுற்றுமடலின் மூலமாக திருத்தினார். பல சிறிய குருத்துவக்கல்லூரிகளை ஒன்றிணைத்து பெரிய குருமடம் உருவாக செய்தார். புதிய குருத்துவ கல்வி முறையை உருவாக்கினார். பொதுப்பணித்துறை நிறுவனங்களை குருக்கள் தலைமை தாங்கி நடத்த தடை விதித்தார்.

வாழ்நாளில் செய்ததாக கூறப்படும் புதுமைகள் தொகு

பத்தாம் பயஸ் தன் வாழ்நாளிலேயே பல புதுமைகளை செய்துள்ளார் என்பர். முடக்கு வாதம் உற்ற குழந்தை இவர் தூக்கியதால் நலம் பெற்றது என்பர். மூளைக் காய்ச்சல் உடைய இரண்டு வயது குழந்தையின் பெற்றோர் இவரை செபிக்கும் படி கடிதம் எழுதினர். இரண்டு நாட்களில் குழந்தை குணமானது என்பர்.[6]

காச நோயுற்றிருந்த எர்னஸ்தோ ருபின் (பின்நாளின் பலேர்மோவின் பேராயர்) இவரைக்கண்ட போது, ருபின் குணமடைந்து விடப்போவதாகவும், அதனால் குருத்துவக் கல்வியை தொடர மீண்டும் குரு மடத்திற்கு செல்ல அறிவுறுத்தியதாக குறியுள்ளார்.[6]

பிற செயல்கள் தொகு

பத்தாம் பயஸ் 10 பேருக்கு முக்திபேரு பட்டமும், 4 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார்.

பத்தாம் பயஸ் 16 திருத்தூது மடல்களை வரைந்துள்ளார்; அவற்றுள் Vehementer nos என்னும் மடல் பெப்ரவரி 11, 1906, அன்று வெளியிடப்பட்டதில் 1905-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் அரசும் சமயமும் பிரிதல் சட்டத்தைக் கண்டித்தார்.

இறப்பும் அடக்கமும் தொகு

 
ம்ரணப்படுக்கையில் பத்தாம் பயஸ்

1913-இல் புகைப்பவரான பத்தாம் பயஸ், மாரடைப்பால் உடல் நலம் குன்றினார். 1914-இல் வின்னேர்ப்பு அன்னை திருவிழாவன்று(15 ஆகஸ்ட்) இவர் திரும்பவும் நோய்வாய்பட்டார். முதலாம் உலகப் போர் துவங்கியதால் மனம் பாதிக்கப்பட அவர், 20 ஆகஸ்ட் 1914 அன்று இயற்கை எய்தினார்.

பின்பு இவர் புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

இவருக்கு முன்பு வரை திருத்தந்தையரை அடக்கம் செய்யும் முன், உடல் பதனிடும் போது உள் உறுப்புகளை நீக்குவர். ஆனால் இவர் இதை தடை செய்தார். இன்றுவரை இத்தடை உள்ளது.

புனிதர் பட்டமளிப்பு தொகு

 
பத்தாம் பயஸின் உடல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருக்கின்றது, 21–22 ஆகஸ்ட் 1914

திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸால் 3 ஜூன் 1951 அன்று முத்திப்பேறு பெற்ற பட்டமும், 29 மே 1954 அன்று புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது.

குல மரபுச்சின்னம் தொகு

 
பத்தாம் பயஸின் குல மரபுச்சின்னம்

மற்ற திருத்தந்தையரைப் போலவே இவரின் குல மரபுச்சின்னத்திலும் தங்க மும்முடி மற்றும் தங்கம் மற்றும் வெள்ளியாலான இரு சாவிகள் இருக்கும்.

கேடயத்தின் மேல் பகுதியில், 1893–1903 வரை வகித்த பதவியான வெனிசு மூப்பர்களின் குல மரபுச்சின்னத்தில் காணப்படும், நற்செய்தியாளரான புனித மாற்குவின் சிங்கமும், அதன் கையில் இருக்கும் புத்தகத்தில் இலத்தீன் மொழியில் இடப்பக்கம் PAX TIBI MARCE மற்றும் வலப்பக்கம் EVANGELISTA MEU என்றும் பொறிக்கப்பட்டிருக்கும். இதற்கு பொருள், "மாற்குவே, என் நற்செய்தியாளரே, உமக்கு அமைதி உண்டாகுக" என்பதாகும்.

அதன் கீழ் பகுதியில், எபிரேயர் 6:19-இன் படி புயலடிக்கும் கடலில் எறியப்பட்ட நங்கூரமும், 6 முனைகளையுடைய விண்மீனும் இருக்கும்.

ஆதாரங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

 1. Ad diem illum 5 (http://www.vatican.va/holy_father/pius_x/encyclicals/documents/hf_p-x_enc_02021904_ad-diem-illum-laetissimum_en.html)
 2. 2.0 2.1 Kühner 183
 3. 3.0 3.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-03-26.
 4. http://www.greenspun.com/bboard/q-and-a-fetch-msg.tcl?msg_id=00055r
 5.    "Pope Pius X". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
 6. 6.0 6.1 6.2 6.3 Steven M. Avella and Jeffrey Zalar. Sanctity in the Era of Catholic Action: The Case of St. Pius X. U.S. Catholic Historian, Vol. 15, No. 4, Spirituality and Devotionalism (Fall, 1997), pp.57-80
 7. Ad diem illum 10
 8. (Ephes. v., 30),
 9. Ad diem illum laetissimum 10

துணைநூல் பட்டியல் தொகு

 • F. A. Forbes, Pope St. Pius X, London: Burns Oates & Washbourne Ltd 1918/TAN Books and Publishers, Inc (revised 1954)
 • J.O. Smit & G. dal Gal. Beato Pio X, Amsterdam: N.V. Drukkerij De Tijd 1951 (translated by J.H. van der Veldt as St. Pius X Pope, Boston, Mass.: Daughters of St. Paul 1965)
 • G.A. Bavoux, Le porteur de lumière, Paris: Pygmalion 1996
 • Chiron, Yves, Pope Saint Pius X: Restorer of The Church, Angelus Press, Kansas City-MI, 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1892331101

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pope Pius X
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
கியோவானி பெரின்கோ
மாந்துவா ஆயர்
1884 – 1893
பின்னர்
பாவுலோ ஒரிகோ
முன்னர்
தொமினிக்கோ அகுஸ்தினி
வேனிசின் மறைமுதுவர்

1893 – 1903
பின்னர்
அரிஸ்டைட் கவலாரி
முன்னர் திருத்தந்தை
1903–1914
பின்னர்