முதுமொழிக்காஞ்சி (இலக்கணம்)

புறநானூற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒன்று
(முதுமொழிக்காஞ்சி, இலக்கணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முதுமொழிக் காஞ்சி என்னும் துறையைச் சேர்ந்த பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் நான்கு உள்ளன. [1] இந்தத் துறை புறநானூற்றில் புறத்திணையில் ஒன்றான பொதுவியல் என்னும் பகுதியில் வருகிறது.

புறநானூறு

தொகு

இதில் வரும் பாடல்கள் தனி ஒருவனுக்குக் கூறும் அறிவுரைகள்.

  • மக்களுக்கெல்லாம் உணவுதான் உயிர். எனவே உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். உணவு எனப்படுவது நிலத்தில் விளைவனவும் நீரும். நிலத்தில் நீர் பாய்ந்தால் விளைச்சல் பெருகும். நீர் பாய நீரை நிலத்தில் தடுத்துத் தந்தவர் புகழ் உலகில் நிலைக்கும். [2]
  • புலவர் பாடிய பாட்டு உடையோர் புகழ் நிலைத்திருக்கும். எனவே வல்லவரோ, வல்லமை இல்லாதவரோ யாவராயினும் வருந்தி வந்தவருக்கெல்லாம் அருள வேண்டும். [3]
  • செல்வத்தால் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றும் ஆற்றுக.[4]
  • சுற்றத்தாரோடு சேர்ந்து இன்முகம் காட்டுங்கள். கூத்தாடுவோரைப் பார்க்க வந்த கூட்டம் போல் நீங்கும் செல்வத்தைப் பலரும் புகழும்படி பயன்படுத்துங்கள்.[5]
  • வயிற்றுக்காக மானம் போக வாழவேண்டாம்.[6]

அறநூல்

தொகு
  • பொதுமக்களுக்குக் கூறும் அறிவுரை

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று முதுமொழிக்காஞ்சி. இது வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டிய நன்னெறிகளைப் பத்துப்பத்தாக ஒருவரிப் பாடலில் அடுக்கிக் கூறுகிறது.

அடிக்குறிப்பு

தொகு
  1. புறநானூறு 18, 27, 28, 29, 74
  2. நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
    உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
    உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
    உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
    நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
    உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
    ---
    நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
    தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
    தள்ளா தோர்இவண் தள்ளா தோரே

    (பாண்டியன் நெடுஞ்செழியனை, குடபுலவியனார், புறநானூறு 18)
  3. வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
    வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
    அருள வல்லை ஆகுமதி; (சோழன் நலங்கிள்ளியை, உறையூர் முதுகண்ணன் சாத்தனார் புறநானூறு 27)
  4. அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றும், பெரும! நின்செல்வம்;
    ஆற்றாமை நின் போற்றா மையே. (சோழன் நலங்கிள்ளியை, உறையூர் முதுகண்ணன் சாத்தனார், புறநானூறு 28)
  5. கோடியர் நீர்மை போல முறை முறை
    ஆடுநர் கழியும்இவ் உலகத்துக், கூடிய
    நகைப் புறனாக, நின் சுற்றம்!
    இசைப்புற னாக, நீ ஓம்பிய பொருளே! (சோழன் நலங்கிள்ளியை, உறையூர் முதுகண்ணன் சாத்தனார், புறநானூறு 29)
  6. வயிற்றுத் தீத் தணியத்,
    தாம் இரந்து உண்ணும் அளவை
    ஈன்ம ரோ, இவ் உலகத் தானே? (சேரமான் கணைக்கால் இரும்பொறை பாட்டு, புறநானூறு 74