முப்பேட்டுச் செய்யுள்

முப்பேட்டுச் செய்யுள் என்பது உரைநூலால் தெரியவரும் நூல்களில் ஒன்று. யாப்பருங்கல விருத்தி என்னும் உரைநூலில் 40 ஆம் சூத்திர உரையில் இது குறிப்பிடப்பட்டடுள்ளது. [1] இந்த நூலின் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ள மூன்று பாடல்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வாழ்த்துவனவாக உள்ளன. இதனால் இந்த நூல் முத்தொள்ளாயிரம் போன்று மூவேந்தர்களைப் போற்றுப் நூல் எனக் கொள்வது பொருத்தமாகும். [2]

மூவேந்தரையும் வாழ்த்தும் மரபு தொகு

மூவேந்தரையும் வாழ்த்தும் மரபு சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. [3] இந்த நூல் இந்த மரபினைப் பின்பற்றியுள்ளது.

பாடல் [4] தொகு
1

கல்லினைக் கதிர்மணிக் கவண் பெய்து கானவர்
கொல்லையில் களிறு எறி வெற்பே யாதே
கொல்லையில் களிறு எறி வெற்பன் இவ் வியன் நாட்டார்
பல்புகழ் வானவன் தாளே யாதே
பல்புகழ் வானவன் தாளே சேரா மன்னர்க்கு
நல்ல படாஅ பறையே யாதே (வானவன் = சேரன்)

2

ஈர் இதழ் இணர் நீலம் இடை தெரியாது அரிந்திடூஉம்
ஆய் கதிர் அழல் செந் நெல் அரியே யாதே
ஆய் கதிர் அழல் செந் நெல் அகன் செறுவில் அரிந்திடூஉம்
காவிரி வளநாடன் கழலே யாதே
காவிரி வளநாடன் கழல் செர்ந்த மன்னர்க்கு
ஆல் அரண் நிற்றல் அரிதே யாதே (காவிரி வளநாடன் = சோழன்)

3

நித்திலம் கழலாக நரைதொடி மட நல்லார்
எக்கர் வான் இடு மணல் இணரே யாதே
எக்கர் வான் இடு மணல் இணர் புணர்ந்து இசைந்து ஆடும்
கொற்கையார் கோமானே கொடியே யாதே
கொற்கையார் கோமானே கொடித் திண் தேர் மாறற்குச்
செற்று அரண் நிற்றல் அரிதே யாதே (திண்தேர் மாறன் = பாண்டியன்)

அடிக்குறிப்பு தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 311. 
  2. பேடு என்பது பேழை என்னும் பெட்டியை உணர்த்தும் போலும்
  3. சோழனை வாழ்த்தியது

    தீம் கரும்பு நல் உலக்கை ஆக, செழு முத்தம்
    பூங் காஞ்சி நீழல், அவைப்பார் புகார் மகளிர்;
    ஆழிக் கொடித் திண் தேர்ச் செம்பியன் வம்பு அலர் தார்ப்
    பாழித் தட வரைத் தோள் பாடலே பாடல்;
    பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல்.

    பாண்டியனை வாழ்த்தியது

    பாடல்சால் முத்தம் பவழ உலக்கையான்
    மாட மதுரை மகளிர் குறுவரே;
    வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன்
    மீனக் கொடி பாடும் பாடலே பாடல்;
    வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல்

    சேரனை வாழ்த்தியது

    சந்து உரல் பெய்து, தகைசால் அணி முத்தம்,
    வஞ்சி மகளிர் குறுவரே, வான் கோட்டால்:
    கடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை
    படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல்:
    பனந்தோடு உளம் கவரும் பாடலே பாடல். (சிலப்பதிகாரம், வாழ்த்துக் காதை)

  4. பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ள பாடல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பேட்டுச்_செய்யுள்&oldid=3176413" இலிருந்து மீள்விக்கப்பட்டது