முருக வழிபாடு
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி கௌமாரம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
முருக வழிபாடு தொன்மை மிக்கது. சிவனின் மகனான முருகனுக்கும் தமிழர்களுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு என்பது வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டதாகும். தமிழர்களின் பண்பாட்டோடும் மொழியோடும் தத்துவத்தோடும் பழக்க வழக்கங்களோடும் இம்முருக வழிபாடு பின்னிப் பிணைந்திருந்த தன்மையைச் சங்ககால இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, பரிபாடல் என்பன மிகச் சிறப்பாகக் கூறி நிற்கின்றன.
சூரிய வணக்கமும் முருக வழிபாடும்
தொகுஇயற்கை வழிபாட்டின் ஒரு கூறான சூரிய வணக்கமே பின்னர் முருக வழிபாடானது என்பர். இதனைப் 'பரிபாடற்திறன்' எனும் நூலில் செவ்வேள் வணக்கம் பற்றி எழுதிய "சாரங்கபாணி" பின்வருமாறு விவரித்துள்ளார். "மாக்கடலினின்று நிவர்தெழுந்த இளஞாயிற்றின் இயற்கை அழகில் உள்ளந் தோய்ந்த அன்பர்கள் அதனையே இறையென வழிபட்டு வணங்கினர். அதுவே பின்னர் நீலமயில் மீது வீற்றிருக்கும் செவ்வேள் வழிபாடாக மலர்ந்தது".
இதிலிருந்து மலைவாழ் மக்களுக்குப் பெரும் துன்பத்தை உண்டாக்கியது "இருள்" என்றும் அந்த இருளாகிய துன்பத்தை அகற்ற இளஞாயிறாகிய முருகனை வழிபட்டனர் என்பதும் பெறப்படுகின்றது. இதனையே மறைமலை அடிகளும் குறிப்பிட்டுள்ளார். பழந்தமிழ் நிலம் "நானிலம்" என வழங்கப்பட்டிருந்தது. அதிலே குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாக 'முருகன்' போற்றப்பட்டிருக்கின்றான். "சேயோன் மேய மைவரை உலகமும்" என்ற தொல்காப்பியப் பாடலடி இதனை விளக்கி நிற்கின்றது.
முருக வழிபாட்டின் தன்மை
தொகுஇதனடிப்படையில் முருக வழிபாட்டின் தன்மையை இரண்டு விதங்களில் பார்க்க முடியும்.
1. முருகன் மலைக்கடவுள்
2. முருகன் தமிழ்க்கடவுள்
மக்களின் வாழ்வு முதன்முதற் தொடங்கப்பட்ட இடம் மலை என்பது அறிஞர் கருத்து. ஆதிகால மனிதர் குன்று சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் முருகன் கடவுளாகப் படைக்கப்பட்டிருக்கலாம் என்பர். இதனையே "விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ" என்று திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் குறிப்பிடுகின்றார். மானுடவியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி முருகன் ஒரு குழுமத்தின் தலைவனாக இருந்து பெரும் வெற்றிகளையீட்டித் தெய்வத்தன்மைக்கு உயர்த்தப்பட்டு நாளடைவில் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டிருக்கலாம். சமூக அடிப்படையில் மலையைத் தெய்வமாகவும் முருகனை மலைவாழ் இறையாகவும் வழிபட்டிருக்கலாம் என்று கூறமுடிகின்றது.
ஆதிகால மக்கள் தமக்கு விளங்காத சக்திகளைப் பார்த்து அஞ்சினர். தங்களை விட அதிசக்தி வாய்ந்தவர்களைக் கௌரவித்தனர். அக்கௌரவம் அச்சம் பக்தியானது. "சிக்மன் பிராய்ட்" என்ற அறிஞரின் மானுடவியற் கொள்கைப்படி தெய்வவழிபாடு என்பது தனி மனிதனின் உள்மனப் போராட்டத்தின் எதிரொலியாகும் என்கின்றார். இதனடிப்படையில் தங்களுக்குள் ஒரு தலைவனை உருவாக்கிக் கொண்ட ஆதிகால மக்கள் அவனை "முருகன்" என்றழைத்தனர். ஒரு தலைவனுக்குரிய அழகு, கம்பீரம், வலிமை, கடமையுணர்வு, ஒரு கூட்டத்தை வழிநடத்தும் ஒழுங்குமுறை என்பன அத்தலைவனுக்கு இருந்தன. இதிலிருந்து சங்க காலத்தில் முருக வழிபாடு இருந்தது தெரிய வருகிறது.
முருகவழிபாடு குறித்துத் தார்பர் கூறும் போது தமிழர்கள் முருகனைப் போர் நிலத் தெய்வமான கொற்றவையின் மகன் என்று போற்றியதோடு தங்கள் போர்த் தெய்வமாகவும் வணங்கினர் என்று குறிப்பிடுகின்றார்.
மலை வாழ் குறவர்கள் வேட்டையாடும் போது வேலைக் கொண்டு செல்வர். அதே வேளை தம் குலக் கடவுளின் ஆயுதமாகவும் 'வேல்' ஆயுதத்தையே கொண்டனர். அந்த வேலவன் பகைவர்களை அழித்துச் சங்காரம் செய்வான் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.
மனித வடிவில் முருகனைக் காண தமிழர் மிகவும் விரிவான தத்துவத்தை உள்ளடக்கி இருக்க வேண்டும். இத் தத்துவம் ஒரு சமத்துவ அடிப்படையில் வளர்ந்திருக்கின்றது என்பதனை அது காட்டுகின்றது. 'அமரர் இடர் தீர்த்தே அவக்கருளும் வெற்றிக் குமரனடி சிந்திப்பாய் சடர்ந்து' என்கின்றது சைவநெறி. "என்னிருளை நீக்கம் இமையோக் கிடர்க்கடியும் பன்னிரு தோட் பாலன் பாதம்" என்கின்றது சங்கற்ப நிராகரணம். முருகனுக்கும் தமிழர்களுக்கும் இருந்த இறுக்கமான பிணைப்பினை முருகன், 'கந்தன்' என்றும் 'வேலன்' என்றும் 'குகன்' என்றும் அழைக்கப்படுவதில் இருந்து அறிந்து கொள்ளமுடியும்.
தமிழ்க் கடவுள்
தொகுதமிழர் தொன்மையின் வெளிப்பாடு என்பதற்கும் தமிழ் மொழியின் வெளிப்பாடு என்பதற்கும் முருகவழிபாடு முகாமையானதாகும். பன்னிருதோள்களும் பன்னிரு உயிர்கள் பதினெட்டுக் கரங்களும் பதினெட்டு மெய்கள். ஆறு முகங்களும் ஆறு இன எழுத்துக்கள். அவனது வேலே ஆயுத எழுத்து "முருகு" என்ற சொல்லில் 'மு' மெல்லினம் 'ரு' இடையினம் 'கு' வல்லினம் என்று சொல்கின்றனர் தமிழறிஞர்கள்.
முருகன் வள்ளியைக் காதற்திருமணம் செய்வது, அவன் மனிதக் கடவுளாகக் கொள்ளப்பட்டு வழிபடப்பட்ட மக்கள் தலைவன் என்பதனைக் காட்டி நிற்கின்றது. சாதாரண மானுடர்களைச் செய்து கொள்கின்றான் முருகன். ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழர் பண்பாட்டில் இத்தத்துவம் பல விமர்சனங்களை உள்வாங்கி நிற்பதனைக் காணமுடிகின்றது. அதாவது தேவயானை புறத்துறையையும் வள்ளி அகத்துறையையும் குறிப்பதாக வாதிப்போரும் உண்டு. குறப்பெண்ணான வள்ளியுடன் குறிஞ்சித் தலைவனுக்கு உண்டான உறவு இயற்கையானது, என்றும் அதனைப் பிராமணியத்தின் எதிர்ப்பு, சாதியத்தின் எதிர்ப்பு என்று கொள்வாரும் உண்டு. இயற்கையோடு தொடர்புபடுத்துவோர் "கடம்பத்திற்படர்ந்த கொடி" என்று இவர்கள் உறவைக் காண்கின்றனர். ஐம்புல வேடரிடை அகப்பட்ட மனமெனும் வள்ளியை மீட்டு தனதாக்கிக் கொள்ளுகின்ற தத்துவமாகவும் இதனை மெய்ஞானிகள் காண்பர். இலங்கையில் வாழும் ஆதிக்குடிகளான வேடுவர்கள் குறப்பெண்ணான வள்ளியின் காதல் கதையை வைத்துக் கொண்டு, முருகனைத் தங்கள் மைத்துனன் என்று கூறி வழிபடுவதனைக் குறிப்பிடலாம்.
முருக வழிபாட்டின் பல கூறுகள்
தொகுதமிழரது முருக வழிபாட்டின் பல கூறுகள் அதாவது பூஜைமுறைகள், நம்பிக்கைகள், வள்ளி-முருகன் பற்றிய காதற்கதை, முருகனின் வீரம், அழகை விவரிக்கும் முறை இவையனைத்தும் முருகனை வழிபட்ட சமுதாயத்தின் மனநிலையை உணர்த்துகின்றது. மேலும் சாதியமைப்பற்ற நிலையும் பெண்டிரையும் காதலையும் தமிழர் மதித்துக் கௌரவித்ததையும் காட்டுகின்றது. குறிப்பாக மந்திர தந்திரமற்ற வழிபாட்டு முறை இங்கு முக்கியம் பெற்றது. காடு, வெறியாடுகளம், சோலை, மரத்தடி, அம்பலம் போன்ற இடங்களில் முருகன் உறைவதாகக் கருதப்பட்டு அங்கு அவனுக்கான பூஜைகள் நிகழ்ந்தன. வேலன் வெறியாடல், குன்றக்குரவை, வெறியாட்டு என்பன சிறப்பிடம் பெற்றன. இவ்விழாக்களின் போது ஆட்டைப் பலியிட்டுத் தேன், திணைமா போன்றவற்றைப் படைத்து ஆடிப்பாடி வழிபட்டனர். இவற்றை மரபு சார் வழிபாட்டு முறைமைகளின் மிச்ச சொச்சங்கள் எனலாம்.
சர்வதேசக் கடவுள் தமிழ்க் கடவுள் முருகன்
தொகுஆகவே இன்றைய காலத்தில் முருகன் என்பவன் மலை நிலத்துக்குரிய தெய்வமாகவும் தமிழ்த் தெய்வமாகவும் வழிபடப்பட்டுள்ளான். அதே பண்புகளுடன் இன்றைய கலியுகத்திலும் சர்வதேசக் கடவுளாகத் தமிழ்க் கடவுளாக முருகன் திகழ்கின்றான்.
இதனையும் வாசிக்க
தொகுஉசாத்துணைகள்
தொகு- இந்து தர்மக்குரல், கிழக்கு தினக்குரல், இலங்கை