முவாரா தாக்கூசு, சுமாத்திரா
முரா டாகஸ் கோயில் (Muara Takus) ( இந்தோனேசிய மொழி: Candi Muara Takus) என்பது ஒரு புத்த கோயில் வளாகமாகும், இது ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்திற்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது. [1] இது இந்தோனேசியாவின் சுமத்ராவின் ரியாவ் மாகாணத்தில் கம்பர் ரீஜென்சியில் அமைந்துள்ளது. [2] அதன் எஞ்சியிருக்கும் கோயில்கள் மற்றும் பிற தொல்பொருள் எச்சங்கள் கி.பி பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இது சுமத்ராவில் உள்ள மிகப்பெரிய மற்றும் சிறந்த பாதுகாக்கப்பட்ட பழங்கால கோயில் வளாகங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. [3]
வரலாறு
தொகுமுரா டாகஸ் கோயிலானது பதினொன்றாம் நூற்றாண்டில் கடல் சார்ந்த ஸ்ரீவிஜய பேரரசால் கட்டப்பட்ட கோயிலாகும். கோயில்களின் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பினை நோக்கும்போது அவை மகாயான பௌத்தத்தைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் முரா டாகஸ் கோயில் பெரிய புனரமைப்புக்கு உட்பட்டிருக்கலாம் என்று ஷ்னிட்கர் கருதுகிறார். இந்தப் பகுதியானது ஸ்ரீவிஜயாவால் ஒரு மதம் சார்ந்த மையமாவும், வர்த்தகம் சார்ந்த மையமாகவும் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. [4]
இந்த தளம் பல நூற்றாண்டுகளாக கைவிடப்பட்டு எவரும் காணாத வகையில் இருந்தது. இதனை 1860 ஆம் ஆண்டில் கார்னெட் டி க்ரூட் என்பவர் கண்டுபிடித்து வெளிவுலகிற்குத் தெரியப்படுத்தினார். [3] டபள்யூ.பி. க்ரோன்வெல்ட் என்பவர் இந்த இடத்தில் 1880 ஆம் ஆண்டில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அப்பகுதியில் அகழ்வாராய்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வந்தன. முரா டாகஸ் தொல்பொருள் தளம் குறித்த ஆய்வானது 1983 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது, இதன் விளைவாக பண்டைய கட்டட எச்சங்கள், மஹ்லிகாய் கோயில் வளாகம் மற்றும் பிற பழங்கால கட்டட அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. [2] இந்த தளம் தற்போது ஒரு தேசிய நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
வடிவமைப்பு
தொகுமுரா டாகஸ் கோயில் வளாகம் 1 மீட்டர் உயர கல் சுற்றளவு சுவரால் சூழப்பட்டு காணப்படுகிறது. இது 74 x 74 மீட்டர் அளவினைக் கொண்டு அமைந்துள்ளது. வெளிப்புற சுவர் வடக்கு பக்கத்தில் ஒரு நுழைவாயில் மூலம் ஊடுருவி செல்லும் வகையில் உள்ளது. சுவர்களுக்குள் நான்கு புத்தர் கோயில்களின் (கண்டி) எச்சங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் அசாதாரணமான நிலையில் உள்ளது மஹ்லிகாய் கோயில் ஆகும்.. இந்த தாமரை வடிவ பௌத்த ஸ்தூபம் இந்தோனேசியாவில் தனித்துவமான தன்மையினைக் கொண்டதாகும்.இருப்பினும் தாய்லாந்து மற்றும் மியான்மரில் இதனைப் போன்ற ஏராளமான பண்டைய கட்டட அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்பு ஒரு எண்கோண அடித்தளத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் உயரம் 14.30 மீட்டர் ஆகும். ஸ்தூபியின் மேல் நிலை சிங்கம் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, அவற்றை கீழே இருந்து தெளிவாகக் காண முடியவில்லை.
சிறப்பு
தொகுஇக்கோயில் வளாகமானது பெகன்பாருவிலிருந்து 135 கி.மீ. தொலைவில் புகிட்டிங்கி முதன்மைச்சாலைக்கு எதிர்ப்புறத்தில் உள்ளது. முரா டாகஸ் கிராமத்தின் மையப் பகுதியிலிருந்து 2.5 கி.மீ. தொலைவில் உள்ள கோயிலின் வளாகம் சுமத்ராவின் மழைக் காடுகளின் நடுவில் அமைந்துள்ள சிறப்பைப் பெற்றதாகும். அதனைச் சுற்றி 1.5 x 1.5 கி.மீ. அளவிலான சுவர் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்திற்குள் மேலும் நான்கு கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமான வகையில் காணப்படுகின்றன. அங்கு மேலும் ஆறு கட்டட அமைப்புகள் காணப்படுகின்றன. [5]
- முதல் கட்டட அமைப்பு: ஒரு மணற்குவியல், இரு துவாரங்களைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் தகனம் செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
- இரண்டாவது கட்டட அமைப்பு: செவ்வக வடிவில் உள்ள கட்டடம். அடித்தளம் மண்ணால் ஆனது. கட்டடத்தின் செயல்பாடு பற்றி அறிய முடியவில்லை.
- மூன்றாவது கட்டட அமைப்பு: செவ்வக வடிவில் உள்ள கட்டடம். 3 மீ. x 2.4 மீ. அளவில் உள்ளது. சுவர்ப்பகுதிக்கு வெளிப்புறம் அமைந்துள்ளது.
- நான்காவது கட்டட அமைப்பு: டர்ட் அமைப்பின் அடித்தளம். நடுப்பகுதியில் பெரிய கல் உள்ளது. கட்டடத்தின் செயல்பாடு பற்றி அறிய முடியவில்லை.
- ஐந்தாவது கட்டட அமைப்பு: இந்தக் கட்டட அமைப்பானது அடித்தளத்தை மட்டுமே கொண்டு அமைந்துள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ "Candi Muara Takus, Jejak Kerajaan Sriwijaya di Provinsi Riau". www.jpnn.com (in இந்தோனேஷியன்). 2014-11-02. பார்க்கப்பட்ட நாள் 2019-01-08.
- ↑ 2.0 2.1 Centre, UNESCO World Heritage. "Muara Takus Compound Site". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-08.
- ↑ 3.0 3.1 "Candi Muara Takus (Sumatra) - Kepustakaan Candi". candi.perpusnas.go.id (in இந்தோனேஷியன்). Archived from the original on 2019-01-08. பார்க்கப்பட்ட நாள் 2019-01-08.
- ↑ Farhan, Afif. "Candi Muara Takus, Warisan dari Kerajaan Sriwijaya". detikTravel (in இந்தோனேஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-08.
- ↑ Muara Takus