மூன்றாம் உதயன்

மூன்றாம் உதயன் என்பவன், அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களில் ஒருவன். மூன்றாம் சேனன் இறந்த பின்னர் துணை அரசனாக இருந்த இவன் அரியணையில் அமர்ந்தான். கி.பி. 946 இல் முடி சூட்டிக்கொண்ட மூன்றாம் உதயன் கி.பி. 954 வரை ஆட்சியில் இருந்தான்.

இயல்புகள்

தொகு

ஆட்சிபீடம் ஏறிய பின்னர் இவன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாகவும், சோம்பேறித்தனம் கொண்டவனாக ஆகிவிட்டதாகவும் தெரிகிறது. [1] இந்த நிலைமை சோழருக்குச் சாதகமாக அமைந்தது. இதனால் இலங்கைமீது அவர்கள் தமது கவனத்தைத் திருப்பினர்.

சோழர் படையெடுப்பு

தொகு

முன்னர் பாண்டிய மன்னன் தன் நாட்டிலிருந்து தப்பி இலங்கைக்கு வந்திருந்தபோது கொண்டுவந்திருந்த தனது முடியையும் பிற பொருட்களையும் இலங்கையிலேயே விட்டுச் சென்றிருந்தான். பாண்டிய நாட்டை ஏற்கெனவே கைப்பற்றியிருந்த சோழர் அப்பொருட்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை மன்னனிடம் கோரினர். இலங்கை மன்னன் அதற்கு மறுக்கவே, அக்காலத்தில் மிகப் பலம் வாய்ந்தவர்களாக இருந்த சோழர் இலங்கைமேல் படையெடுத்தனர். எதிர்த் தாக்குதல் நடத்தச் சென்ற சிங்களப் படைகளும் அதன் தளபதியும் அழிந்துபட்டனர். சோழர் அனுராதபுரத்தைச் சூறையாடி பாண்டியனின் மணிமுடியையும் பாண்டியனின் ஏனைய உடைமைகளையும் கைப்பற்றினர். [2] அரசனின் மாளிகையும் எரிக்கப்பட்டது. ரோகணம் வரை படை நடத்திச் சென்ற சோழர் பின்னர் நாட்டுக்குத் திரும்பிச் சென்றனர்.

சோழர் நாடு திரும்பிய பின்னர், அரசன் மகா விகாரையில் உள்ள புத்தர் சிலைக்குப் பெறுமதியான இரத்தினக் கற்கள் இழைத்த முடியொன்றை வழங்கினான். தன்னுடைய எரிந்த மாளிகையை மீளக் கட்டிக்கொண்டிருந்த காலத்தில், தனது எட்டாம் ஆட்சியாண்டில் மூன்றாம் உதயன் இவ்வுலக வாழ்வை நீத்தான்.

மேற்கோள்கள்

தொகு
  1. The Mahavansa, translated in to Eglish by L. G. Wijesinha, Part II, Asian Educational Services, New Delhi, 1996 (First Published 1889), p. 84
  2. The Mahavansa, 1996, p. 84

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_உதயன்&oldid=2994497" இலிருந்து மீள்விக்கப்பட்டது