மெரினா புரட்சி (திரைப்படம்)

மெரினா புரட்சி என்பது 2018-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 2019-ஆம் ஆண்டு திரையிடத் திட்டமிட்டிருக்கும் ஒரு திரைப்படம் ஆகும்.

மெரினா புரட்சி
இயக்கம்எம். எஸ் ராஜ்
தயாரிப்புநாச்சியாள் பிலிம்ஸ்
இசைஅல்ரூஃபியான்
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புதீபக்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

2017-ஆம் ஆண்டு சனவரித் திங்களில் தமிழகமெங்கும் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம் உலகளவில் பேசப்பட்டது. அதை மையமாக வைத்து ஆவணப்பட வடிவில் உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் `மெரினா புரட்சி'.

திரைப்படமாக்கியதன் பின்னணி

தொகு

இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடந்த மாபெரும் போராட்டம், 2017-ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம். இந்த அளவு மக்கள் எழுச்சி எப்படி நடந்தது, உண்மையாவே இது தலைவன் இல்லாத கூட்டமா என்பதைக் கண்டுபிடிக்கும் ஆவலுடனும், இந்த வரலாற்று நிகழ்வைப் பதிவு செய்யும் நோக்கத்துடனும் உதித்தது இந்தப் படத்திற்கான முயற்சி.[1]

கதையும் கருவும்

தொகு

இத்திரைப்படத்தில் மெரினாப் போராட்டம் உருவானது எப்படி என்பது முதல் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறை வரை பதியப்பட்டுள்ளது. இக்கதையின் படி, ஜல்லிக்கட்டுத் தடையின்பின் ஒரு பெரிய அரசியல் நோக்கம் இருப்பதாகவும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்குப் பின் 18 பேர் இருப்பதாகவும் ஆவணமாக்கப்பட்டுள்ளது.

தணிக்கைக்கான போராட்டம்

தொகு

மெரினா புரட்சி படம் தணிக்கைக் குழுவுக்கு, சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், எவ்விதக் காரணமும் சொல்லாமல்[2], மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவின் மறுசீராய்வுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடிகை கவுதமி தலைமையிலான குழுவினர் இப்படத்தைப் பார்த்தனர். அவர்களும் எவ்விதக் காரணமும் சொல்லாமல், படத்திற்கு மீண்டும் தடை விதித்தனர். இந்தியன் சினிமோடோகிராப் சட்டம் 1983 (Indian Cinematograph Act 1983) விதியின்படி மறுசீராய்வுக் குழு (Revising Committee) மறுப்புத் தெரிவித்தால், எப்.சி.ஏ.டி. (FCAT) எனப்படும் தீர்ப்பாயம் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு இரண்டாவது மறுசீராய்வுக் குழுவிற்கு (Second Revising Committee) இப்படம் அனுப்பப்பட்டது.[3] [3] [4] என்றாலும் தணிக்கைத் துறையில் போராடி வென்று படத்துக்கு யு சான்றிதழ் பெற்றனர்.

சட்டப் போராட்டம்

தொகு

"தணிக்கைச் சான்றிதழுக்காக விண்ணப்பித்து 80 நாட்கள் ஆகியும் சான்றிதழும் வழங்கவில்லை, ஏன் வழங்கவில்லை என்பதற்கான காரணமும் சொல்லவில்லை. மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் தடுக்கிறார்கள்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ராஜ் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுப்பிரமணி, மெரினா புரட்சி படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக 7 நாட்களுக்குள் தகுந்த பதில்கள் அளிக்குமாறு தணிக்கைக் குழுவிற்கு உத்தரவிட்டார்.[5]

வெளிநாடுகளில்

தொகு

தணிக்கைக்குழுவிற்கு, தணிக்கை செய்யும் கடமையும் அதிகாரமும் உள்ளபோதிலும், படைப்பாளியின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிட உரிமையில்லை என்னும் கருத்தை நிலைநாட்ட வெளிநாடுகளில் தணிக்கைக்கு முயற்சி செய்ததாகக் கூறுகிறார் ராஜ். மேலும், இப்படத்தை இந்திய அளவில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டபோதிலும், இத்திரைப்படம் மக்கள் காண வேண்டிய ஒன்று என்பதை நிரூபணம் செய்யவே வெளிநாடுகளில் திரையிட்டதாகக் கூறுகிறார் இதன் இயக்குநர் ராஜ்.[6] நார்வே, கனடா, சிங்கப்பூர், அமேரிக்கா போன்ற வெளிநாடுகளில் அங்கு வாழும் தமிழர்களின் உதவியுடன் திரையிடப்பட்டுள்ளது.[7]

விருதுகள்

தொகு

கனடா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளில் இப்படம் திரையிடப்பட்டது. தென் கொரியாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் பெற்றது.[8] 'மெரினா புரட்சி' நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, விருதும் வாங்கியுள்ளது. அங்கு வாழும் தமிழர்கள் மத்தியில், இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு