மேகா ராஜகோபாலன்

மேகா ராஜகோபாலன் (Megha Rajagopalan) ஐக்கிய அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியினரான இவர் பஸ்ஃபீட் நியூஸ் (BuzzFeed News) எனும் செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளராக, வெளிநாடுகளில் செய்தி சேகரிக்கும் பணி செய்கிறார். சீனா நாட்டின் சிஞ்சியாங் மாகாணத்தின் முகாம்களில் கைதிகளாக இருந்த இரண்டு டஜன் உய்குர் இசுலாமிய பழங்குடி மக்களைக் கண்டுபிடித்து, அவர்களின் நம்பிக்கையை வென்று, அவர்களின் கனவுக் கணக்குகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும்படி அவர்களை சமாதானப்படுத்தினார். உய்குர் இசுலாமியப் பழங்குடி இன மக்களுக்கு எதிராக சீன அரசு மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை நேரில் கண்ட இவர் எழுதிய தொடர் கட்டுரைகள் மூலமாக இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது. இந்த அவலத்தை வெளிஉலகுக்கு கொண்டுவந்த மேகா ராஜகோபாலனைப் பாராட்டி இவருக்கு, இரண்டு பங்களிப்பாளர்களுடன் 2021-ஆம் ஆண்டில் புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.[1][2][3][4]

வரலாறு

தொகு

சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் இசுலாமியப் பழங்குடி இன மக்களுக்கு பல்லாண்டுகளாக சீன மக்கள் குடியரசு தொடர்ந்து கட்டாய கருத்தடை செய்வதாகவும், தொழிலாளர் சட்டத்தை மீறி அவர்களிடம் அதிக வேலை வாங்குவதாகவும், பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளை பிரித்து, தடுப்பு முகாம்களில் தங்க வைத்து சீன முறையிலான கல்வி வழங்குவதாகவும், இசுலாமிய வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகவும் மேகா ராஜகோபாலன் தனது கட்டுரையில் தொடர்ந்து எழுதி வந்தார். மேலும் கட்டிடக்கலை மற்றும் கட்டிடங்களின் செயற்கைக்கோள் படங்களின் தடயவியல் பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்ற கட்டிடக் கலைஞர் அலிசன் கில்லிங் மற்றும் தரவு பத்திரிகையாளர்களுக்கு ஏற்றவாறு கருவிகளை உருவாக்கும் புரோகிராமர் கிறிஸ்டோ புஷெக் ஆகியவர்களின் உதவியுடன், சிஞ்சியாங் மாகாணத்தில் உய்குர் மக்களை அடைத்து வைக்கப்படும் தடுப்பு முகாம்கள் குறித்தான செயற்கைக் கோள் புகைப்படங்களை ஆதாரமாக வெளியிட்டார். இதனையடுத்து ஐக்கிய நாடுகள் அவை சிஞ்சியாங் மாகாணத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டது. சீனா இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தாலும் ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்க நாடு, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் சீனாவின் இந்த மனித உரிமை மீறலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும் உய்குர் பழங்குடி இன மக்கள் தயாரிப்பில் உருவாகும் கைவினை பொருட்களை வாங்க அமெரிக்கா மறுத்தது. இது சர்வதேச அளவில் உய்குர் மக்களுக்கு நீதி கிடைக்க உதவியது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகா_ராஜகோபாலன்&oldid=3658996" இலிருந்து மீள்விக்கப்பட்டது