என்றி லொங்குவில் மேன்சல்
பேரருட்திரு என்றி லொங்குவில் மேன்சல் (Henry Longueville Mansel, பொ. ஆ. 1820-1871) ஆங்கிலேய தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.[1] இவர் இங்கிலாந்து திருச்சபையைச் சார்ந்த ஒரு மதகுருவாகவும் விளங்கினார். என்றி மேன்சல் இங்கிலாந்தில் நார்த்தாம்டன்சையரில் உள்ள காசுகுரோவு என்னுமிடத்தில் கி.பி. 1820 இல் பிறந்தார். ஆக்சுபோர்டு புனித ஜான் கல்லூரியில் பயின்றார். அக்கல்வி நிலையத்திலேயே பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார்.
சர் வில்லியம் ஆமில்ட்டன் என்னும் ஸ்காட்லாந்து தத்துவ அறிஞரின் கொள்கைகளை மேன்சல், வியப்புறும் வகையில் விளக்கிக்கூறிப் புகழ்பெற்றார். மேன்சலின் தத்துவ நூல்களில் பெரும் பகுதி, மக்களின் கருத்துகளுக்கும் அவர்கள் அனுபவத்திற்குமிடையே உள்ள உறவைப் பற்றி விளக்கமாக உள்ளது. நுண்பொருள் கோட்பாட்டியல் பற்றிய இவருடைய கட்டுரை, பிரிட்டானியக் கலைக்களஞ்சியத்தில் உள்ளது. இவர் மேலும் பல நூல்களை இயற்றிப் புகழ்பெற்றுள்ளார். இறைவனின் இயல்பு மனித மனத்திற்கு அப்பாற்பட்டது என்று இவர் கூறியதை இவர் காலத்திலேயே தத்துவ வல்லுநர் பலர் மறுத்துள்ளனர். மனிதனுக்கு இறைவனிடத்தில் நம்பிக்கை வேண்டும் என்ற கருத்தை இவர் மிகுதியாக வற்புறுத்தி வந்தார்.[2] இவர், பிறந்த இடத்திலேயே பொது ஆண்டு 1871 இன் யூலை முதல் நாளில் இறந்தார்.
சான்றுகள்
தொகு- ↑ வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி பதினான்கு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். பக்கம்-125
- ↑ ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Mansel, Henry Longueville". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 17. (1911). Cambridge University Press.
வெளியிணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் என்றி லொங்குவில் மேன்சல் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- குட்டன்பேர்க் திட்டத்தில் என்றி லொங்குவில் மேன்சல் இன் படைப்புகள்
- ஆக்கங்கள் என்றி லொங்குவில் மேன்சல் இணைய ஆவணகத்தில்
- Internet Archive book by Henry Longueville Mansel