மேளகர்த்தா இராகங்களின் வரலாறு

மேளகர்த்தா இராகங்களின் வரலாறு 1550 இல் ராமாமாத்தியா இயற்றிய சுவரமேளகலானிதி என்னும் நூலில் இருந்து தொடங்குகின்றது. ராமாமாத்தியா விசயநகரப் பேரரசில் அவைப் புலவராக இருந்த கள்ளிநாதரின் பேரர் எனக் கருதப்படுகின்றார் [1] இவரே மேளகர்த்தா என்னும் முறைக்குத் தந்தை என்பார்கள். மேளம் என்பது முறைப்படி அடுக்கப்பட்ட கட்டமைப்பு என்னும் பொருள் கொண்டது. பின்னர் கோவிந்த தீட்சிதர் சங்கீத சுதா என்னும் நூலை ஆக்கினார். கடைசியாக கோவிந்த தீட்சதரின் மகன் வேங்கடமகி, 17ம் நூற்றாண்டில் எழுதிய சதுர்த்தண்டிப் பிரக்காசிகை என்னும் நூலில்தான் தற்பொழுது பரவலாக அறியப்படும் மேளகர்த்தா இராகம் அமைப்பு கூறப்பட்டுள்ளது. அவருக்குப்பின் வாழ்ந்த கோவிந்தாச்சாரியார் என்பவர் இயற்றிய சங்கிரக சூடாமணி என்னும் நூலில் இருந்தும் மேளகர்த்தாக்களின் வரலாறு அறிய முடிகின்றது.

மூன்று பிரிவுகள் தொகு

72 மேளகர்த்தாக்களையும் மூன்று பிரிவுகளாக வெங்கடமகி பிரித்திருக்கிறார். தனது காலத்தில் பிரசித்தமாக இருந்த 19 மேள கர்த்தாக்களை கல்பித மேளகர்த்தக்கள் என்றும், மிகுதி 53 மேளகர்த்தாக்களில் சீக்கிரத்தில் பிரசித்திக்கு வரக்கூடியவற்றை கல்ப்யமான மேளகர்த்தாக்கள் என்றும், பிற்காலத்தில் பிரசித்திமாக வரக்கூடியவற்றை கல்பயிஷ்யமான மேளகர்த்தாக்கள் என்றும் பிரித்திருக்கிறார்.

இராகங்களின் பெயர்கள் தொகு

அனைத்து மேளகர்த்தாக்களுக்கும் அவர் பெயர்கள் கொடுக்கவில்லை. 100 வருடங்களுக்கு பின் தஞ்சை துளசி மகாராஜாவினால் எழுதப்பட்ட சங்கீத சாராம்ருதம் எனும் விடயம் காணப்படுகிறதே தவிர 72 மேளகர்த்தாக்களுக்கு பெயர்கள் காணப்படவில்லை. கிரம, ஸம்பூர்ண, ஆரோகண, அவரோகண முறையுடன் கூடிய மேளங்களைக் குறிக்கும் கனகாங்கி - ரத்னாங்கி பெயர் தொகுதியானது சங்கீத சாராம்ருதத்திற்கு பிற்காலத்தில் ஏற்பட்டது. கோவிந்தாச்சாரியார் இயற்றிய சங்கிரக சூடாமணி எனும் சமஸ்கிருத இசை நூலில் முதன் முதலில் இப்பெயர்த் தொகுதியைக் காண்கிறோம். புராதன காலம் தொட்டு மேளத்துக்கும் அதற்குகந்த இராகத்திற்கும் ஏற்பட்டுள்ள நுட்பமான வித்தியாசத்தை இம்முறையில் காப்பாற்றப் பட்டிருப்பதால் தியாகராஜ சுவாமிகள் முதலிய மகான்கள் கனகாங்கி - ரத்னாங்கி கானமூர்த்த பத்ததியையே அனுசரித்தனர்.

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. ஆக்சுபோர்டு மியூசிக் ஆன்லைன் (Oxford Music Online); M.S. Ramaswami Aiyar (Cidambaram, 1932), Svaramelakalānidhi, ed. and trans.