மைத்தி நேபாள்
மைத்தி நேபாள் (Maiti Nepal, நேபாளம்: माइती नेपाल) என்பது நேபாளத்திலுள்ள ஒரு சமூக சேவை அமைப்பாகும். இதனைத் தொடங்கியவர் சமூக சேவகரான அனுராதா கொய்ராலா என்பவர்.[1] நேபாளத்தில் இருந்து ஆண்டுக்கு 10,000 முதல் 15,000 பெண்கள் வரை நைச்சியமாக ஏமாற்றப்பட்டு, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பாலியல் தொழில் செய்ய முறைகேடாக அனுப்பப்படுகிறார்கள் என்பது அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் ஒரு கணக்கெடுப்பு ஆகும்.[2] 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவரது 'மைத்தி – நேபாள்' அமைப்பு இதுவரை 12,000த்துக்கும் மேற்பட்ட நேபாளப் பெண்களை பாலியல் தொழிலிருந்து காப்பாற்றியிருக்கிறது. காப்பாற்றப்பட்ட பெண்கள் பலரையும் அவரவர் பெற்றோர் வசம் ஒப்படைத்துள்ளது. இந்த சேவைக்காக அனுராதா கொய்ராலா, 2006, ஆகஸ்ட் 26-ல் உயரிய சர்வதேச விருதான Peace Abbey Courage of Conscience Award விருது பெற்றிருக்கிறார்.[3] சி.என்.என். இணையத்தளம் மூலமாக 2010 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[4] [5] [6]
உருவாக்கம்
தொகு'மைத்தி' என்ற நேபாளச் சொல்லுக்கு 'தாய்' என்பது பொருள். ஆங்கிலம்கற்பிக்கும் ஆசிரியராக இருந்த கொய்ராலா இளம் வயதில் ஒரு முறைகேடான உறவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் இவர். எப்படியோ அந்த உறவிடமிருந்து விடுதலை பெற்றபிறகு, அதுவரை தான் ஆசிரியத் தொழிலில் சம்பாதித்திருந்த பணத்தைக் கொண்டு ஒரு சிறிய கடை தொடங்கினார். சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட தன்னைப் போன்ற பெண்களையே பணிக்கும் அமர்த்தினார். 1990களின் தொடக்கத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் கொய்ராலாவைத் தொடர்புகொள்ள 'மைத்தி' உருவானது. பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது, தேவைப்பட்டால் சட்டரீதியான பாதுகாப்பு வழங்குவது, பாலியல் தொழிலில் சிக்கிக் கொண்ட அப்பாவிப் பெண்களுக்கு மறுவாழ்வு என்று மைத்தி தனது செயற்பாடுகளை உருவாக்கிக் கொண்டது.
சேவைகள்
தொகுகாவல் துறையினர் துணைகொண்டு பாலியல் விடுதிகளை சோதனை செய்து பெண்களை மீட்பது, இந்திய-நேபாள எல்லையில் ரோந்து மூலமாக நடக்கும் மனித வணிகத்தை தடுப்பது போன்ற பணிகளில் மைத்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்று மைத்திக்கு கிளைகள் இந்தியாவிலும், நேபாளத்திலும் ஏராளமாக உண்டு. மறுவாழ்வு முகாம், காத்மாண்டுவில் மட்டுமே இருக்கிறது. நம்பிக்கை மொத்தத்தையும் இழந்து, நோய்கண்டு, சிறுகுழந்தைகளோடு அல்லது கர்ப்பமடைந்த நிலையில் என்று பாலியல் முகாமிலிருந்து வெளியே வரும் பெண்கள் பலரும் நிச்சயமற்ற எதிர்காலத்தோடு வாழ வழியின்றி நிர்க்கதியாக தவிக்கிறார்கள். குறிப்பாக மனரீதியாக உடைந்துப்போயிருக்கிறார்கள்.
மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சை, பழைய தொழிலில் ஏதேனும் வழக்குகள் இருந்தால் சட்டரீதியிலான அறிவுரை மற்றும் சட்ட நடைமுறைகள் என்று அனைத்துமே அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
மறுவாழ்வு
தொகுமீட்கப்படும் பெண்களில் சிலரை மட்டுமே அவர்களது குடும்பம் ஏற்றுக் கொள்கிறது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் இதர பாலியல் நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் நிலை பரிதாபமானது. இவர்களுக்காகவே ஒரு சிறப்பு முகாம் மைத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இன்று இங்கே கிட்டத்தட்ட 400 பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மறுவாழ்வு வழங்கப்படுகிறது. நிறைய ஆசிரியர்களும், மருத்துவர்களும், பணியாளர்களும் இவர்களுக்கு சேவை செய்ய தேவைப்படுகிறார்கள். இங்கே பணிபுரியும் பணியாளர்களில் பலரும் 'மறுவாழ்வு' பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க இருந்து, இன்று மைத்திக்கு குவிந்துவரும் நிதியால் இவ்வமைப்பு இயங்க முடிகிறது. அமெரிக்கா அரசாங்கம் இந்நிறுவனத்திற்கு 2010 ஏப்ரல் மாதம் 500,000 டாலர் நிதி வழங்கியது.[7]
விழிப்புணர்வு
தொகுஅனுராதா கொய்ராலாவும், மறுவாழ்வு வாழும் சுமார் ஐம்பது பெண்களும் அடிக்கடி சமூகப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். பாலியல் கடத்தல் குறித்து நகர்ப்புற விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் அவ்வப்போது நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமன்றி இந்திய – நேபாள் எல்லையில் ரோந்து நடத்தி, கடத்தப்படும் குழந்தைகளில் ஒரு நாளைக்கு நான்கு பேரையாவது மீட்கிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Anuradha Koirala named CNN Hero of the Year 2010". The Money Times. November 21, 2010 இம் மூலத்தில் இருந்து 25 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101125152007/http://www.themoneytimes.com/featured/20101121/anuradha-koirala-named-cnn-hero-year-2010-id-10142419.html. பார்த்த நாள்: 25 February 2011.
- ↑ http://www.luckylookonline.com/2010/10/blog-post_07.html
- ↑ The Peace Abbey Courage of Conscience Recipients List. peaceabbey.org
- ↑ http://www.blog.rsayan.com/2010/11/cnn-real-hero.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Anuradha Koirala – Protecting the Powerless. Edition.cnn.com. Retrieved on 2012-05-20.
- ↑ "Anuradha wins CNN Heroes Award 2010". CNN Edition. 2012-03-23. http://edition.cnn.com/2010/LIVING/11/21/cnnheroes.hero.of.year/index.html.
- ↑ "U.S. asks Nepal to meet the May deadline for new constitution". The Hindu. April 27, 2010. http://beta.thehindu.com/news/international/article411210.ece. பார்த்த நாள்: 3 May 2010.