மல்லேசப்பா மடிவாளப்பா கலபுர்கி

சாகித்திய அகாதமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர்
(ம. ம. கலபுர்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ம. ம. கல்புர்கி, கன்னட எழுத்தாளர் ஆவார். இவர் சாகித்திய அகாதமியின் விருதைப் பெற்றவர்.[1] இவர் நிருபதுங்கா விருது, பம்பா விருது, கர்நாடக மாநில அரசின் சாகித்திய விருது ஆகியவற்றையும் பெற்றவர்.[2]

ம. ம. கல்புர்கி
முழுப் பெயர்மல்லேசப்பா மடிவாளப்பா கல்புர்கி
பிறப்பு1938
யரகல், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு30 ஆகத்து 2015 (அகவை 76–77)
தார்வாட், கருநாடகம், இந்தியா படுகொலை
School/traditionஇலக்கியம்
பிரதான விருப்புகன்னட மொழி

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் கர்நாடகத்தின் பிஜாப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சிந்தகி வட்டத்தில் உள்ள யரகல் என்ற ஊரில் பிறந்தார். கன்னடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஹம்பியில் உள்ள கன்னடப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றியுள்ளார். இவர் 2015ஆம் ஆண்டின் ஆகஸ்ட் முப்பதாம் நாளில் இந்து வலதுசாரி தீவிரவாதிகளால் அவரது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2][3]

சமூகப் பணி

தொகு

ம.ம. கலபுர்கி தொடர்ந்து மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், இந்துத்வா அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும், சாதிய கட்டமைப்புக்கு எதிராகவும் குரல் எழுப்பி வந்தார். 12-ம் நூற்றாண்டில் கருநாடகத்தில் தோன்றிய லிங்காயத சமயநெறியை மிகத் தீவிரமாக பின்பற்றியும், அதைப் பற்றி விரிவாக ஆய்வு செய்தும் வந்தவர்[4].

1989 யில் மார்கா 1 என்ற தனது புத்தகத்தில் லிங்காயத மதத்தின் வசன கவிதைகளைப் பற்றி ஆய்வு செய்து எழுதியிருந்தார். இதில் பசவண்ணரது இரண்டாவது மனைவி நீலாம்பிகை பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார். நீலாம்பிகைக்கும் பசவண்ணருக்குமான உறவு தாம்பத்திய இச்சையற்ற காதலே என அவர் எழுதியிருந்தார். மற்றொரு கட்டுரையில், மற்றொரு வீரசைவ லிங்காயத கவியான சன்னபசவரது பிறப்பைப் பற்றி வரலாற்று சான்றுகளுடன் எழுதியிருந்தார். அதில், பசவண்ணரது சகோதரி நாகாளாம்பிகைக்கும் காக்கையா என்ற பொற்கொல்லருக்கும் நடந்த திருமணத்தின் மூலமாக பிறந்தவரே சன்னபசவர் என அவர் குறிப்பிட்டிருந்தார். ஆரம்ப காலங்களில் சாதிமுறைகளை கடுமையாக எதிர்த்து வந்த வீரசைவ லிங்காயதர்கள், பிற்காலங்களில் அதை கைவிட்டுவிட்டனர். அதனால் தாழ்ந்த சாதியாக கருதப்படும் பொற்கொல்லருக்கு பிறந்தவர் சன்னபசவர் என்ற உண்மையை மறைத்துவிட்டு, தெய்வ அருளால் கன்னி கலையாமல் நாகாளாம்பிகை கருவுற்றார் என சொல்லி வந்தனர். இதனை கலபுர்கி கடுமையாக விமர்சித்ததோடு, உண்மை வரலாற்றை சான்றுகளுடன் எடுத்து வைத்திருந்தார். இதன் விளைவாக, லிங்காயத கோவில் குருக்கள் பலரது எதிர்ப்பையும் சம்பாதித்திருந்தார்.

லிங்காயத சமயத்தில் நுழைந்துவிட்ட விக்கிரக வழிபாடுகளையும், தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களையும் கடுமையாக எதிர்த்து வந்தார். அத்தோடு லிங்காயத சமயமும், இந்து சமயமும் ஒன்றல்ல என்ற கருத்தையும் முன் வைத்திருந்தார்[5]. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்றிருந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதா மீதான ஒரு கருத்தரங்கில் பேசியபோது, உடுப்பி ராஜகோபாலாச்சாரிய அனந்தமூர்த்தி என்ற புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் எழுதிய பெதள பூசே யாக்கே கூடாது (நிர்வாண வழிபாடு ஏன் கூடாது?) என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டி விக்கிரக வழிபாட்டை கடுமையாக சாடியிருந்தார். இதனால் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், ஸ்ரீராம் சேனை போன்ற பல சங்கப் பரிவாரக் குழுக்கள் இவர் மீது கடும் விசனம் கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.[6][7]

எழுதியவை

தொகு
  • நீரு நீரடிசித்து
  • சாரங்கஸ்ரீ
  • கெட்டித்து கல்யாண்
  • மார்கா

விருதுகள்

தொகு
  • கர்நாடக அரசின் சாகித்திய அகாதெமி விருது
  • மத்திய அரசின் சாகித்திய அகாதமி விருது
  • ஜானபாத் விருது
  • யட்சகானா விருது
  • பம்பா விருது
  • நிருபதுங்கா விருது

சான்றுகள்

தொகு