விடுதலைப் பயணம் (நூல்)

புதிய ஏற்பாட்டில் இரண்டாவது நூல்
(யாத்திராகமம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) (Exodus) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இரண்டாவது நூலாக இடம்பெறுவதாகும்.[1][2]

மோசே பத்துக் கட்டளைகளை அளித்தல். ஓவியர்: ரெம்ப்ராண்ட் (1606-1669). ஆம்ஸ்டர்டாம், ஓலாந்து.

நூல் பெயர்

தொகு

ஒடுக்கப்பட்ட இசுரயேல் மக்கள் எகிப்து நாட்டினின்று விடுதலை பெற்றது மீட்பு வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமாகும். கடவுளே முன்வந்து தம் மக்களின் அடிமைத்தளையை அறுத்து, விடுதலை நோக்கி அவர்களை அழைத்துச் சென்ற மாபெரும் பாஸ்கா நிகழ்ச்சியை விடுதலைப் பயணம் என்னும் இந்நூல் விரித்துரைக்கின்றது. அவர்கள் விடுவிக்கப்பட்டு, கர்த்தர் வாக்குதத்தம் பண்ணின தேசத்திற்கு மேற்கொண்ட நெடுந்தூர யாத்திரை, மோசேவினால் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டதால் இந்நூல் யாத்திராகமம் என்றும் வேதாகமத்தின் பழைய பதிப்புகளில் குறிப்பிடப்படுகிறது.

இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் "Sh'moth" அதாவது "பெயர்கள்" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் "exodos" (ἔξοδος, = புறப்படுகை) என்பதாகும்.

விடுதலைப் பயணம் யூத சமய நூல் தொகுப்பான தோராவில் இரண்டாம் நூலாக உள்ளது. எபிரேய விவிலியத்திலும் அது இரண்டாவது அமைந்த நூல் ஆகும். அது முதல் நூலாகிய தொடக்க நூலின் தொடர்ச்சியாக வருகிறது

நூலின் உள்ளடக்கம்

தொகு

ஆண்டவராகிய கடவுள் தாம் நல்கவிருக்கும் வளநாட்டை நோக்கி இசுரயேல் மக்களைப் பேராற்றலோடு மோசேயின் மூலம் அழைத்துச் செல்கின்றார். வழியில், சீனாய் மலையடியில் அவர்களோடு உடன்படிக்கை செய்து, பத்துக் கட்டளைகளை வழங்கி, தமது உரிமைச் சொத்தாகிய அவர்களைத் தமக்கே உரிய அரச குருத்துவ இனமாகப் புனிதப்படுத்துகின்றார். ஆயினும், அம்மக்கள் இவ்வுடன்படிக்கையை மீறும்பொழுது, அவர்களைத் தண்டித்துத் தூய்மையாக்கி மீண்டும் ஏற்றுக் கொள்கின்றார். இந்நிகழ்ச்சிகள் இந்நூலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இசுரயேல் மக்களின் சமய அமைப்புகளை நெறிப்படுத்துமாறு கடவுள் தரும் பல்வேறு ஒழுங்குமுறைகள் இந்நூலின் பிற்பகுதியில் காணப்படுகின்றன.

நூலின் மையக் கருத்துகள்

தொகு

விடுதலைப் பயணம் நூலில் 40 அதிகாரங்கள் உள்ளன. இந்த நூலைக் கீழ்வரும் பல பகுதிகளாகப் பிரித்து அவற்றில் அடங்கியுள்ள கருத்துக்களை வரிசைப்படுத்தலாம்:

  1. தொடக்க நூலில் கூறப்பட்ட வரலாறு விடுதலை பயணத்தில் தொடர்கிறது. யோசேப்பும் அவர்தம் சகோதரர்களும் தம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதால் எகிப்துக்குச் செல்கின்றனர். அங்கே குடியேறுகின்றனர். தொடர்ந்து, இசுரயேலர் எகிப்தில் பலுகிப்பெருகி, பெருந்திரளான மக்களாக வளர்கிறார்கள். ஆனால் அவர்கள் எகிப்தியரின் ஆட்சியில் அடிமைகளாக வாழ்ந்து கடின வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் (விப 1).
  2. லேவி குலத்தைச் சார்ந்த குடும்பம் ஒன்றில் ஒரு ஆண்குழந்தை பிறக்கின்றது. எபிரேய ஆண்குழந்தைகளை வாழவிடக்கூடாது என்று அரச கட்டளை இருந்த போதிலும் குழந்தையின் தாய் கோரைப்புல்லால் ஒரு பேழை செய்து அதை நைல்நதிக் கரையில் நாணல்களுக்கிடையில் விட்டுவைக்கிறாள். எகிப்து அரசனாகிய பார்வோனின் மகள் ஆற்றில் அக்குழந்தையைக் கண்டெடுத்து அதற்கு "மோசே" என்று பெயரிட்டு அவனைத் தன் மகனாக வளர்க்கிறாள். மோசே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது கடவுளிடமிருந்து ஓர் அழைப்புப் பெறுகிறார். "எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்...அவர்களின் துயரங்களை நான் அறிவேன்...இசுரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காகப் பார்வோனிடம் உன்னை அனுப்புகிறேன்" என்று அறிவிக்கிறார் (விப 2-3).
  3. இசுரயேல் மக்களை விடுவிக்க வேண்டும் என்று மோசே பார்வோனிடம் வேண்டுகிறார். ஆனால் அரசன் மறுக்கிறான். கடவுளின் வல்லமையால் மோசேயும் அவர் சகோதரன் ஆரோனும் அதிசய செயல்கள் பல செய்கிறார்கள். ஆனாலும் பார்வோன் இசுரயேல் மக்களை விடுதலை செய்ய இணங்கவில்லை (விப 4-11).
  4. விடுதலை விழாவாகிய பாஸ்கா எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பது விவரிக்கப்படுகிறது. மக்களின் விடுதலைப் பயணம் தொடங்குகிறது (விப 12).
  5. மக்கள் பாலைநிலத்தைக் கடந்து செல்லும்போது பகலில் மேகத்தூணும் இரவில் நெருப்புத்தூணும் அவர்களுக்கு வழிகாட்டுகின்றன (விப 13).
  6. இசுரயேலரைத் துரத்திவருகின்ற எகிப்தியரின் கைகளிலிருந்து அவர்களைக் கடவுள் காக்கின்றார். வழியில் செங்கடல் திறந்து இசுரயேலருக்கு வழிவிடுகிறது, ஆனால் எகிப்தியர் அக்கடலைக் கடக்க முயன்றபோது நீர் அவர்களைச் சூழ்ந்துகொள்ளவே, அவர்கள் மூழ்கிச் சாகின்றனர். மோசே இறைவனின் வல்லமையை வாழ்த்தி வெற்றிப் பாடல் பாடுகின்றார்; மோசேயின் சகோதரி மிரியாம் வெற்றிப் பாடல் இசைக்கின்றார் (விப 14-15).
  7. தங்களுக்குப் போதிய உணவு பாலைநிலத்தில் கிடைக்கவில்லை என்று மக்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுக்கின்றனர். கடவுள் அதிசயமாக வானிலிருந்து அப்பம் வழங்குகின்றார். மக்கள் அதைக் கண்டு வியந்து அதை "மன்னா" என்று அழைக்கின்றனர். மாலையில் காடைகள் அவர்களுக்கு உணவாகத் தரப்படுகின்றன; பாறையிலிருந்து நீர் புறப்பட்டு மக்களின் தாகத்தைத் தணிக்கிறது (விப 16-17).
  8. மோசே மக்களைத் தொடர்ந்து வழிநடத்துகிறார். நீதிபதிகளை நியமிக்கிறார். சீனாய் மலையில் ஏறிச் சென்று கடவுளின் கைகளிலிருந்து கட்டளைகளைப் பெற்று அவற்றை மக்களுக்கு அளிக்கிறார் (விப 18-20).
  9. மோசே மக்களுக்குக் கடவுள் பெயரால் அளித்த சட்டங்கள் (விப 21-23).
  10. ஆண்டவர் அளித்த சட்டங்களைப் பிரமாணிக்கமாக நிறைவேற்றுவதாக மக்கள் வாக்களிக்கின்றனர். கடவுள் தம் மக்களோடு உடன்படிக்கை செய்துகொள்கின்றார் (விப 24).
  11. வழிபாடு பற்றி மோசேக்கு வழங்கப்பட்ட சட்டங்கள் (விப 25-27).
  12. குருக்களின் உடை பற்றியும் நடத்தை பற்றியும் வழங்கப்பட்ட சட்டங்கள் (விப 29-30).
  13. வாரத்தின் ஏழாம் நாளை ஓய்வு நாளாகக் கடைப்பிடித்தல் பற்றிய சட்டங்கள் (விப 31).
  14. மக்கள் தங்கள் கடவுளாகிய யாவேயை மறந்து, பொன்னால் கன்றின் உருவம் செய்து அதை வழிபடுகின்றார்கள்; இதைக் கண்டு கோபமுற்ற மோசே தம் கையில் தாங்கியிருந்த உடன்படிக்கைப் பலகைகளைக் கீழே போட்டு உடைக்கிறார். மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள் (விப 32).
  15. கடவுள் தம் மக்களோடு உடன்படிக்கையைப் புதுப்பிக்கிறார் (விப 32-34).
  16. உடன்படிக்கைப் பேழை செய்யப்படுகிறது. சந்திப்புக் கூடாரம் எழுப்பப்படுகிறது. குருக்களுக்கான உடைகள் பற்றிய சட்டங்கள் வழங்கப்படுகின்றன் (விப 35-40).

விடுதலைப் பயணம் நிகழ்ந்த காலம் யாது?

தொகு

இப்பொருள் பற்றி அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை. கி.மு. 13ஆம் நூற்றாண்டில் எகிப்து நாட்டை ஆண்ட பார்வோன்கள் முதலாம் சேத்தி (Seti I), இரண்டாம் ராம்செசு (Ramses II) என்போர் ஆவர். இருவருமே பெரிய கட்டடங்களைக் கட்டி எழுப்பினர்; அடிமைகளை வேலைக்கு அமர்த்தினர். அவர்கள் காலத்தின்போது இசுரயேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்திருக்கலாம். எனவே, விடுதலைப் பயணம் கி.மு. 1280ஆம் ஆண்டளவில் நடந்திருக்கலாம் என்பது வரலாற்றாசிரியர்கள் கணிப்பு.

இசுரயேலின் விடுதலைப் பயணம் விடுதலைப் போராட்டங்களுக்கு முன்னோடி

தொகு

இசுரயேலர் எகிப்து அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று கானான் நாட்டில் சென்று குடியேறிய நிகழ்ச்சி பிற்காலத்தில் பல விடுதலைப் போராட்டங்களுக்கு முன்னோடி ஆகியது. அடிமைத் தளைகளை அறுத்தெறுந்து, விடுதலை நோக்கிப் பயணம் செய்யும் குழுக்கள் இசுரயேலரின் அனுபவத்திலிருந்து பாடம் பயின்றனர்.

விடுதலைப் பயணம் நூலிலிருந்து ஒரு பகுதி

தொகு

விடுதலைப் பயணம் 15:1-2, 4-5, 9-10, 11-13)
அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு:
ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;
குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்.
அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன்.
அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்...
பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்;
அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர்.
ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்;
ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன...
எதிரி சொன்னான்: 'துரத்திச் செல்வேன்; முன் சென்று மடக்குவேன்;
கொள்ளைப் பொருளைப் பங்கிடுவேன்; என் மனம் இதனால் நிறைவு கொள்ளும்;
என் வாளை உருவுவேன்; என் கை அவர்களை அழிக்கும்.'
நீரோ உமது காற்றை வீசச் செய்தீர்; கடல் அவர்களை மூடிக்கொண்டது;
ஆற்றல் மிகு நீர்த்திரளில் அவர்கள் ஈயம் போல் அமிழ்ந்தனர்.
ஆண்டவரே, தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவர்?
தூய்மையில் மேலோங்கியவர், அஞ்சத்தக்கவர், புகழ்ச்சிக்குரியவர்,
அருஞ்செயல் ஆற்றுபவர் ஆகிய உமக்கு நிகர் யார்?
நீர் மீட்டுக்கொண்ட மக்களை உம் பேரருளால் வழிநடத்திச் சென்றீர்;
உம் ஆற்றலால் அவர்களை உம் புனித உறைவிடம் நோக்கி வழி நடத்திச் சென்றீர்..."

விடுதலைப் பயணம்

தொகு

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. இசுரயேலர் எகிப்தினின்று விடுதலை பெறல்

அ) எகிப்தில் அடிமைத்தனம்
ஆ) மோசேயின் பிறப்பும் இளமைப் பருவமும்
இ) மோசேயின் அழைப்பு
ஈ) மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் விடுதலை கேட்டல்
உ) பாஸ்கா - எகிப்தினின்று வெளியேறல்

1:1 - 15:21

1:1-22
2:1-25
3:1 - 4:31
5:1 - 11:10
12:1 - 15:21

84 - 108

84 - 85
85 - 86
86 - 89
89 - 100
100 - 108

2. செங்கடல் முதல் சீனாய் மலை வரை 15:22 - 18:27 108 - 113
3. பத்துக் கட்டளைகள் - உடன்படிக்கை நூல் 19:1 - 24:18 113 - 122
4. உடன்படிக்கைக் கூடாரம் - வழிபாட்டு ஒழுங்குமுறைகள் 25:1 - 40-38 122 - 151

மேற்கோள்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலைப்_பயணம்_(நூல்)&oldid=4102958" இலிருந்து மீள்விக்கப்பட்டது