யான் தைசோன் பேயார்ட்

யான் தைசு எனப் பொதுவாக அழைக்கப்பட்ட யான் தைசோன் பேயார்ட் (Jan Thyszoon Payart), மட்டக்களப்பில் கட்டளை அதிகாரியாகவும் பின்னர் 1640 தொடக்கம் 1646 ஆம் ஆண்டு வரை இலங்கையில் ஒல்லாந்தரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளின் ஆளுனராகவும் இருந்தார்[1]. இப்பதவியை வகித்த இரண்டாவது நபர் இவராவார்.

இவர் ஆளுனராக இருந்தபோது, முன்னர் போத்துக்கீசரிடம் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றிய நீர்கொழும்புக் கோட்டையை நவம்பர் 9 ஆம் தேதி மீண்டும் போத்துக்கீசர் கைப்பற்றிக்கொண்டனர். தொடர்ந்து காலியையும் கைப்பற்றுவதற்கான முயற்சிகளைப் போத்துக்கீசர் எடுத்து வந்தனர். அதுவும் பிடிபடக்கூடிய நிலை இருந்தது. ஒப்பந்தப்படி ஒல்லாந்தருக்கு உதவவேண்டிய நிலையில் இருந்த கண்டியரசர் எவ்வித உதவியும் செய்யவில்லை. கொடுக்கவேண்டிய கறுவாவையும் கொடுக்காதிருந்தார். உண்மையில் இப்போது போத்துக்கீசர், ஒல்லாந்தர் இருவரையுமே கண்டியரசர் எதிரிகளாகவே பார்த்தார்[1].

1642 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் போத்துக்கீசருக்கும் ஒல்லாந்தருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது எனினும் 1644 வரை இலங்கையில் போர் நடைபெற்று வந்தது. இக்காலத்தில் நீகொழும்பை மீண்டும் ஒல்லாந்தர் கைப்பற்றினர். ஐரோப்பாவில் ஏற்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து, இலங்கை தொடர்பிலான சமாதான ஒப்பந்தமும் கோவாவில் கைச்சாத்தானது. இது கண்டியரசருக்குப் பாதகமானதாக இருந்தாலும், அவர் ஒல்லாந்தர் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களைக் குழப்பத்துக்குத் தூண்டிவிடுகிறார்[2]. என தைசோன் பேயார்ட் சந்தேகித்தார்.

கண்டியரசருடன் போர்

தொகு

மேற்குறித்த சூழலில் கண்டிமீது படையெடுக்க தைசோன் பேயார்ட் முடிவு செய்தார். 1645 மே மாதம் இவர் கண்டி மீது போரை அறிவித்தார். ஆனால் ஒல்லாந்தர் இப்போரில் தோல்வியுற்றனர். முறையாக ஆராயாமல் போர் செய்ய எடுத்த முடிவுக்காக ஏப்ரல் 1646ல் தைசோன் பேயார்ட் பதவியிலிருந்து அகற்றபட்டுப் பத்தேவியாவுக்குத் திருப்பி அழைக்கப்பட்டார்[2]..

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Blaze, L. E., 1933. பக். 155
  2. 2.0 2.1 Blaze, L. E., 1933. பக். 156

உசாத்துணைகள்

தொகு
  • Blaze, L. E., History of Ceylon, Asian Educational Services, New Delhi, 2004 (The first Edition Published by: The Christian Literature Society for India and Africa Ceylon Branch, Colombo, 1933)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யான்_தைசோன்_பேயார்ட்&oldid=3118430" இலிருந்து மீள்விக்கப்பட்டது