யாவோ ரிபெய்ரோ (வரலாற்று எழுத்தாளர்)

யாவோ ரிபெய்ரோ (Joao Ribeiro) போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலத்தில் கொழும்பில் படைத் தலைவர் பதவியில் இருந்தவர். கொழும்புக் கோட்டையை ஒல்லாந்தர் கைப்பற்றிய போது அங்கிருந்து பிற படையினருடன் கோவாவுக்குச் சென்று, பின்னர் யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்த படையினருடன் சேர்ந்து கொண்டார். யாழ்ப்பாணக் கோட்டையையும் ஒல்லாந்தர் முற்றுகையிட்ட போது அதற்குள் இருந்த ரிபெய்ரோ, போர்த்துக்கேயப் படையினர் ஒல்லாந்தரிடம் சரணடைந்தபோது அங்கிருந்து பத்தேவியாவுக்கு அனுப்பப்பட்டார். 1680ல் தனது அனுபவங்களை உட்படுத்தி இலங்கைத் தீவின் வரலாற்றுத் துன்பியல் (Fatalidade Historica da ilha de Ceilao) என்னும் தலைப்பில் ஒரு நூலை எழுதினார்.

யாவோ ரிபெய்ரோ (வரலாற்று எழுத்தாளர்)
தொழில்படைத் தலைவர், எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்இலங்கைத் தீவின் வரலாற்றுத் துன்பியல் (Fatalidade Historica)

வரலாறு

தொகு

இளமைக்காலம்

தொகு

யாவோ ரிபெய்ரோ 1622 ஆம் ஆண்டு மே மாதம் போர்த்துக்கலின் தலைநகரமான லிசுபனில் பிறந்தார். பேய்ரா மாகாணத்தில் உள்ள விசியூ என்னும் இடத்தைச் சேர்ந்த இவரது தந்தையார் டொமிங்கோ ரிபெய்ரோ ஒரு ஏழை ஆனால் நேர்மையானவர். தாயார் கிரேசியோ டெ அராகோ. இது தவிர யாவோ ரிபெய்ரோவின் இளமைக் காலம் குறித்து வேறு தகவல்கள் கிடைக்கவில்லை.[1]

இலங்கையில் ரெபெய்ரோ

தொகு

1640 மார்ச் மாதத்தில் லிசுபனில் இருந்து வைசுராய், கவுன்ட் அவெய்ராசு தலைமையில் புறப்பட்ட படையில் ஒரு படை வீரனாக யாவோ ரிபெய்ரோ இணைந்து கொண்டார். செப்டெம்பர் 19ம் தேதி அனைவரும் கோவாவை அடைந்தனர். இரண்டு வாரம் கழித்து, நீர்கொழும்புக் கோட்டையை மீளக் கைப்பற்றும் நோக்கில் இடம்பெற்ற போரில் துணைக்கு அனுப்பப்பட்ட 400 பேர் கொண்ட படையில் ஒருவராக யாவோ ரிபெய்ரோ இலங்கைக்கு அனுப்பப்பட்டார். தொடர்ந்து வந்த 18 ஆண்டுகள் ரிபெய்ரோ இலங்கையிலேயே பணியாற்றினார். இக்காலத்தில் கண்டி இராச்சியத்துக்கு எதிராகவும், ஒல்லாந்தருக்கு எதிராகவும் இடம்பெற்ற பல போர்களில் இவர் பங்குபற்றினார். சாதாரண படைவீரனாக இருந்து, படிப்படியாக கப்பித்தானாக உயர்ந்தார்.[2]

1656ம் ஆண்டில் கொழும்புக் கோட்டையை ஒல்லாந்தர் முற்றுகை இட்டபோது இடம்பெற்ற போரில் இவர் காயப்பட நேர்ந்தது. கோட்டை ஒல்லாந்தரிடம் வீழ்ச்சியடைந்தபோது உயிர் தப்பிய சிலருடன் ரிபெய்ரோவும் நாகபட்டினத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து கால்நடையாக அனைவரும் கோவாவைச் சென்றடைந்தனர். அங்கிருந்து மீண்டும் இலங்கையில் போர்த்துக்கேயரின் இறுதிக் கோட்டையான யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டார். 1658ல் யாழ்ப்பாணக் கோட்டையும் ஒல்லாந்தரால் முற்றுகையிடப்பட்டது. 1658 யூன் மாதத்தில் போர்த்துக்கேயப் படைகள் ஒல்லாந்தரிடம் சரணடைந்தன. போர்க்கைதியான ரிபெய்ரோ பத்தேவியாவுக்கு அனுப்பப்பட்டார். ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர் கப்பலேறிய ரிபெய்ரோ 1660ம் ஆண்டு போர்த்துக்கலைச் சென்றடைந்தார்.[3]

ஐரோப்பியப் போர்களில்

தொகு

இலங்கையில் போர்க் கைதிகளாகப் பிடிபட்டுத் திரும்பியவர்களை ஒன்று சேர்த்து அரச கடற்படையின் ஒரு படைப் பிரிவை உருவாக்கியபோது ரிபெய்ரோவும் அதில் இணைந்துகொண்டார். ஐரோப்பாவில் இடம் பெற்ற பல்வேறு போர்களிலும் கலந்துகொண்டு சாதைனைகள் புரிந்த ரெபெய்ரோவுக்கு 27 ஆண்டுத் தொடர்ச்சியான சேவைக்குப் பின்னர் பிரபுப் பட்டம் வழங்கப்பட்டது. மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து பிரபுப்பட்டம் பெறும் அளவுக்கு உயர்ந்தது குறிப்பிடத் தக்கதாகும்.[4]

1668ல் எசுப்பெயினுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர், அத்திலாந்திக்குத் தீவான மதெய்ராவின் தலைநகரான புஞ்சலில் இருந்த படையின் கட்டளைத் தளபதியாக ரிபெய்ரா பணியேற்றார். அக்காலத்தில், ரிபெய்ராவுடன் இலங்கையில் பணியாற்றிப் பின்னர் கடற்கொள்லையருடன் இடம்பெற்ற போர் ஒன்றில் இறந்துவிட்ட தோழர் ஒருவரின் சகோதரியைச் சந்தித்தார். டோனா பெலிப்பா கட்டனோ என்னும் பெயர் கொண்ட இப்பெண் பிரபுத்துவ குடும்பம் ஒன்றில் பிறந்தவர். தொப்பி செய்பவர் ஒருவரின் மகனாகப் பிறந்த ரிபெய்ரோ இப்போது போதிய அளவுக்கு உயர்ந்துவிட்டதாலும், அப்பெண்ணின் தந்தையும், சகோதரரும் போர்களில் இறந்துவிட்டதாலும், இருவரும் மணம் செய்துகொண்டனர்.[5]

இறுதிக்காலம்

தொகு

தனது இறுதிக் காலத்தில் மிகுந்த சமயப் பற்றுள்ளவராகளாக விளங்கிய யாவோ ரெபெய்ரோ 1693ம் ஆண்டில் காலமானார்.[6]

எழுத்துப் பணி

தொகு

40 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவையின் பின்னர் 1680ல் ஓய்வு பெற்று மீண்டும் லிசுபனுக்குச் சென்ற ரிபெய்ரோவுக்குத் தன்னுடைய அனுபவங்களையும் எண்ணங்களையும் நூலாக எழுதுவதற்கு வாய்ப்புக் கிட்டியது. 1685ல் Fatalidade Historica da ilha de Ceilao என்னும் நூலை அவர் எழுதி முடித்தார். இந்நூலை அவர் போர்த்துக்கலின் அரசரான இரண்டாம் டொம் பெட்ரோவுக்குச் சமர்ப்பணம் ஆக்கினார்.[7] இந்த நூல் நீண்டகாலம் அச்சு ஏறாமலேயே இருந்தது. இதல் மூல மொழியான போர்த்துக்கேய மொழிப் பதிப்பு 1836 இலேயே முதன் முதலாக வெளியானது. ஆனாலும், இதற்கு முன்பே 1701 ஆம் ஆண்டில் சுருக்கமான பிரெஞ்சு மொழிப் பதிப்பு ஒன்று வெளியானது. இதை அடிப்படையாகக் கொண்ட ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று 1847 ஆம் ஆண்டில் History of Ceylon என்ற பெயரில் இலங்கை குடிசார் சேவையைச் சேர்ந்த ஜார்ச் லீ என்பவரால் வெளியிடப்பட்டது.[8] 1836ல் முழுமையான போர்த்துக்கேய மொழி நூல் வெளியான பின்னர், அதை அடிப்படையாகக் கொண்டு அதன் முழுமையான ஆங்கில மொழி பெயர்ப்பு ஒன்றை, The Historic Tragedy of the Island of Ceilao என்னும் தலைப்பில், பி. ஈ. பீரிஸ் வெளியிட்டார்.[9]

குறிப்புகள்

தொகு
  1. C. R. Boxer, Captain João Ribeiro and His History of Ceylon, 1622-1693 in The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, No. 1/2 (Apr., 1955), pp. 1-12, Royal Asiatic Society of Great Britain and Ireland. p. 2.
  2. C. R. Boxer, 1955, p. 2
  3. C. R. Boxer, 1955, p. 2.
  4. C. R. Boxer, 1955, p. 2, 3.
  5. C. R. Boxer, 1955, p. 3.
  6. C. R. Boxer, 1955, p. 5.
  7. C. R. Boxer, 1955, p. 4.
  8. Capt. Joao Ribeiro (1847). History of Ceylon. Government Press, Colombo.
  9. Ribeiro, Joao., (Translator: Pieris, P. E.), The Histiric Tragedy of the Island of Ceilao, Asian Educational Services, New Delhi, 1999. p. viii.