யாழ்ப்பாணக் கோட்டை
யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒல்லாந்த அரசின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் கோட்டை | |
---|---|
பகுதி: யாழ்ப்பாணம் | |
யாழ்ப்பாணம், இலங்கை | |
யாழ்ப்பாணக் கோட்டையின் பிரதான நுழைவாயில் | |
ஆள்கூறுகள் | 9°39′43.648″N 80°0′29.888″E / 9.66212444°N 80.00830222°E |
வகை | பாதுகாப்பு கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | இலங்கை அரசாங்கம் |
மக்கள் அனுமதி |
ஆம் |
நிலைமை | சிதைவடைந்துள்ளது |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1625 |
பயன்பாட்டுக் காலம் |
1625 - |
கட்டியவர் | போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் |
கட்டிடப் பொருள் |
கருங்கல், பாறை |
காவற்படைத் தகவல் | |
தங்கியிருப்போர் | இலங்கை அரச நிர்வாகம் |
போத்துக்கீசர் காலம்
தொகுயாழ்ப்பாண அரசு 1619 இல் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை நல்லூரிலிருந்து அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு கோட்டையையும் கட்டினர்.[1] 1619 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள கோவாவிலிருந்த தலைமையகத்திலிருந்து பிலிப்பே டி ஒலிவேராவுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை 1625 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. 1629 இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், 1637 இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே கத்தோலிக்கத் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், வைத்தியசாலையொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன.[2] போத்துக்கீசரின் யாழ்ப்பாண நகரம் (போர்த்துக்கேயர் குடியேற்றம்) கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது.[3]
ஒல்லாந்தர் காலம்
தொகுயாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ஜூன் 22 இல் கைப்பற்றினர். போர்த்துக்கேயரின் கோட்டையையே ஒல்லாந்ததும் சில ஆண்டுகள் பயன்படுத்தினர். பின்னர் அதனை இடித்துவிட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள். முதலில் ஐங்கோணக் கோட்டையின் உள் அரண்களையும், பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் வெளிச் சுற்று அரண்களையும் கட்டினர்.[4] இக்கோட்டைக்குள் கட்டளைத் தளபதியின் இல்லமும், பிற படை அதிகாரிகளுக்கான இல்லங்களும் இருந்தன. மருத்துவமனை, சிறைச்சாலை என்பன உள்ளிட்ட வேறு பல கட்டடங்களும் இக்கோட்டைக்குள் காணப்பட்டன. இவற்றுடன், கிரேக்கச் சிலுவை வடிவில் அமைந்த தேவாலயம் ஒன்றும் அமைந்திருந்தது.
தற்காலம்
தொகு1984–1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தின் வசமே இருந்து வந்தது. 1989 ஆம் ஆண்டில் இந்திய அமைதிகாக்கும் படை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கோட்டையை முற்றுகையிட்ட புலிகள் பல மாதங்களின்பின் அதனைக் கைப்பற்றிக்கொண்டனர். கைப்பற்றிய சிறிது காலத்தில் மீண்டும் இவ்வாறான நிகழ்வைத் தடுக்க கோட்டையின் பெரும்பகுதி புலிகளின் ஆலோசனையின் கீழ் அழிக்கப்பட்டது. 1995 ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் மீண்டும் கைப்பற்றியபோது இக்கோட்டையின் எச்சங்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்தன.
படங்கள்
தொகு-
சிதைவுற்ற பகுதிகள்
-
முன்னைய தூக்கிலிடும் இடம்
-
கோட்டையின் ஒரு பகுதி
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Antonio Bocarro’s Description of Ceylon (Translated into English by T. B. H. Abeyasinghe), The Journal of the Royal Asiatic Society of Sri Lanka, New Series, Vol XXXIX, Special Number, 1999. pp. 56, 57
- ↑ Ribeiro, Joao., The Histiric Tragedy of the Island of Ceilao (Translated from Portuguese by P. E. Pieris), Asian Educational Services, New Delhi, 1999 (First Published 1909), p. 2013.
- ↑ Antonio Bocarro’s Description of Ceylon, 1999. pp. 57
- ↑ Nelson, W. A., The Dutch Forts of Sri Lanka, Sri Lanka Netherlands Association, Colombo, 2004, p. 82.