பிலிப்பே டி ஒலிவேரா

பிலிப்பே டி ஒலிவேரா 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையிலிருந்த போத்துக்கீசத் தளபதிகளுள் ஒருவர். 1619 இல் இவரின் தலைமையில் வந்த படையினரே யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி அதனைப் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்தனர். இதன் பின்னர் இப்பகுதியின் "கப்டன் மேஜரா"க ஒலிவேராவே நியமிக்கப்பட்டார். கடும் போக்குக் கத்தோலிக்கரான இவர், பிரபலமான நல்லூர்க் கந்தன் கோயில் உட்பட, யாழ்ப்பாணத்திலிருந்த பல இந்துக் கோயில்களை இடிப்பித்தார். நல்லூர் கோயில் அழிக்கப்பட்டது தொடர்பாக குவைறோஸ் பாதிரியார் தானெழுதிய நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

"பிலிப்பே டி ஒலிவேரா பெப்ரவரி 2 ஆம் திகதி நல்லூருக்குச் சென்று இந்துக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பெரிய கோயிலைத் தரைமட்டமாக்கும்படி ஆணையிட்டான். கோயிலை இடியாது விடுவதற்காக, வேண்டியவனைத்தும் தருவதாகவும், வீடுகள் கட்டித்தருவதாகவும் பலமுறை இந்துக்கள் கேட்டுக்கொண்டது, கோயிலை இடிக்கவேண்டுமென்ற அவனது விருப்பத்தை மேலும் அதிகரித்தது. ஏனெனில் அவன் ஒரு மகத்தான கிறிஸ்தவனாவான்."[1].

யாழ்ப்பாண அரசின் கீழிருந்த பகுதிகளின் தலைநகரமாக யாழ்ப்பாண நகரத்தை உருவாக்கியவரும் இவரே. சுமார் எட்டு வருடங்கள் கப்டன் மேஜராக யாழ்ப்பாணத்தை நிர்வகித்துவந்த ஒலிவேரா, 1627 ஆம் ஆண்டு மார்ச் 22 இல் தனது 53 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் இறந்தார்.

பிற சமயங்களின்பால் கடுமையாக நடந்து கொண்டாலும், யாழ்ப்பாணத்தில் ஏழைகளுக்கும், விதவைகள் முதலியவர்களுக்கும் பயன்படும்வகையில் "மிசரிக்கோடியா" என்று அழைக்கப்பட்ட வைத்தியசாலையொன்றைத் தன் சொந்தச் செலவிலேயே கட்டிக்கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எல்லோரும் ஒலிவேராமீது அன்பு கொண்டிருந்ததாகவும், அவரை "பிலிப்பே ராஜா" என்றே அழைத்து வந்ததாகவும் குவைறோஸ் பாதிரியார் குறிப்பிடுகின்றார். 1627 பெப்ரவரி 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை உலுக்கிய சூறாவளியின் போது, அவரது வீட்டில் ஒதுங்கிய மக்கள் மீது அவர் காட்டிய அக்கறையையும் அவர்கள் தொடர்பில் அவர் நடந்துகொண்ட விதம் பற்றியும் குவைறோஸ் உயர்வாகப் பேசியுள்ளார்.

குறிப்புகள் தொகு

  1. Fernao De Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon, (translated by Perera, S.G., from Portuguese), Colombo, 1930, (மறுபதிப்பு: Asian Educational Services Vol II, 1992, New Delhi, p.243)

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பே_டி_ஒலிவேரா&oldid=2811467" இலிருந்து மீள்விக்கப்பட்டது