யோனா (நூல்)

திருவிவிலிய நூல்

யோனா (Jonah) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

யோனா இறைவாக்கினர். ஓவியர்: மைக்கிலாஞ்சலோ போனரோட்டி. ஆண்டு: 1511. காப்பிடம்: சிஸ்டைன் சிற்றாலயம், வத்திக்கான்.

யோனா நூல் பெயர்

தொகு

யோனா என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் יוֹנָה‎ (Yona, Yônā) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்திலும் இலத்தீனிலும் இந்நூல் Ionas என்று உள்ளது. இப்பெயரின் பொருள் "புறா" என்பதாகும். வடக்கு நாடாகிய இசுரயேலில் பணியாற்றிய கி.மு. சுமார் 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இறைவாக்கினராக யோனா சித்தரிக்கப்படுகிறார் (காண்க: 2 அரசர்கள் 14:25). அவரைக் கதாபாத்திரமாகக் கொண்டு அமைந்த நூல் யோனா ஆகும்.

யோனா நூலின் உள்ளடக்கம்

தொகு

நினிவே மாநகர் மக்கள் நெறி கெட்டவராய் வாழ்ந்து, பாவச் சேற்றில் உழன்று கொண்டிருந்தனர். ஆகவே, அந்நகருக்கு அழிவு வரப்போகிறது என்று அறிவிக்க, கடவுள் யோனாவை அனுப்பினார். ஆனால் முதலில் கடவுளின் விருப்பத்தை ஏற்க யோனா முன் வரவில்லை. மாறாக, நினிவே நகருக்கு எதிர்த்திசையிலிருந்த தர்சீசுக்கு ஓடிப் போக முனைந்தார். எனவே யோப்பா துறைமுகம் சென்று அங்கு ஒரு கப்பலில் ஏறி, அதில் இருந்தவர்களோடு தர்சீசுக்குப் பயணமானார். கடலில் ஒரு பெருங்காற்று வீசியது. கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது. இத்தீங்கு ஏற்பட யார் காரணம் என்றறிய சீட்டுப் போட்டார்கள். யோனாதான் குற்றவாளி என்று தீர்மானித்து, அரைகுறை மனத்தோடு அவரைத் தூக்கிக் கடலில் எறிந்தார்கள்.

தம்மை விட்டுத் தப்பி ஓட நினைத்த யோனாவைக் கடவுள் மறக்கவில்லை. அவர் கடலில் மூழ்கிச் சாகாவண்ணம் கடவுள் ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிட ஏற்பாடு செய்கிறார். அந்த மீனின் வயிற்றில் யோனா மூன்று இரவும் மூன்று பகலும் கழித்தார். அதன்பின் யோனாவை அம்மீன் உயிருடன் கரையில் கக்கியது.

இரண்டாம் முறையாகக் கடவுள் யோனாவிடம், நினிவேக்குப் போய் அந்நகர மக்கள் மனம் மாறாவிட்டால் அழிந்துபடுவர் என்னும் செய்தியை அறிவிக்க அனுப்புகிறார். அரைகுறை மனத்தவராய் யோனா நினிவே நகருக்குச் சென்றார். அவர் வழியாகக் கடவுள் அளித்த செய்தியைக் கேட்ட நினிவே மக்கள் எல்லாரும் மனம் மாறி நோன்பு இருந்தார்கள். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதைக் கண்ட கடவுள் அவர்கள் மேல் இரக்கம் கொண்டு அவர்களைத் தண்டிக்கவில்லை.

கடவுளின் கருணைக்கு அளவும் இல்லை; எல்லையும் இல்லை. கனிவு காட்டுவதில் நல்லார் பொல்லார் என்று அவர் வேற்றுமை பாராட்டுவதும் இல்லை. அவரது வாக்கைக் கேட்டு மனம் மாறும் அனைவர்க்கும் அவர் மன்னிப்பு அருள்கின்றார். அடித்தலைவிட அணைத்தலே அவரது இயல்பாகும். பாவிகளின் அழிவையல்ல, அவர்களது மனமாற்றத்தையே கடவுள் விரும்புகின்றார்.

நினிவே மக்களும் யோனா அறிவித்ததைக் கேட்டு மனம் மாறிக் கடவுளின் மன்னிப்பைப் பெற்றனர். நினிவே மக்கள் மனம் மாறுவார்கள் என்று யோனா எதிர்பார்க்கவில்லை. கடவுள் அவர்களை அழிப்பார் என்றே அவர் எதிர்பார்த்தார். ஆனால் மக்கள் மனம் மாறியதையும் அதனால் கடவுள் அவர்கள்மேல் இரக்கம் கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டதையும் கண்டு மனம் பொறாத யோனா சினங்கொண்டார்.

சினம் கொண்ட யோனா, தாம் உயிர்வாழ்வதைவிட சாவதே மேல் என்னும் முடிவுக்கு வந்தார். ஆனால் கடவுள் அவரிடம், "நீ இவ்வாறு சின்ங்கொள்வது முறையா?" என்று கேட்கவே, யோனாவும் நகரை விட்டு வெளியேறி, ஒரு பந்தலின் கீழ் அமர்ந்து, நினிவே நகருக்கு நிகழப் போவதைப் பார்ப்பதற்காகப் பந்தலின் நிழலில் அமர்ந்திருந்தார். கடவுளின் திட்டப்படி, ஓர் ஆமணக்குச் செடி வளர்ந்து யோனாவுக்கு நிழல் கொடுத்தது. மறுநாள் அச்செடியை ஒரு புழு அரிக்கவே அது வாடி உலர்ந்து போயிற்று. யோனாவுக்கு அப்பொழுதும் சினம் அடங்கவில்லை. ஆனால், கடவுளோ, தம் இரக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் தம் மீது சினங்கொண்ட யோனா மீதும் கருணை காட்டித் தம் இயல்பை வெளிப்படுத்தினார்.

இக்கருத்துகளை யோனா நூல் நயம்பட எடுத்துக் காட்டுகின்றது.

புதிய ஏற்பாட்டில் யோனா நூலிலிருந்து மேற்கோள்கள்

தொகு

இயேசு கிறிஸ்து இரு இடங்களில் யோனா நூலிலிருந்து மேற்கோள் காட்டித் தம் பணியையும் உயிர்த்தெழுதலையும் அந்நூல் அடையாளமாக முன்னறிவித்ததைக் குறிப்பிட்டார். அப்பகுதிகள்: மத்தேயு 12:38-41; லூக்கா 11:29-30,32.

மத்தேயு 12:38-41
"அப்பொழுது மறைநூல் அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக,
'போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்' என்றனர்.
அதற்கு அவர் கூறியது: 'இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர்.
இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.
யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார்.
அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.
தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள்.
ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள்.
ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!"

லூக்கா 11:29-3,32
"மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது:
'இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர்.
இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.
யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று
மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்...
தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள்.
ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள்.
ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா?!"

யோனா நூலிலிருந்து ஒரு பகுதி

தொகு

யோனா 4:6-11
"கடவுளாகிய ஆண்டவரது ஏற்பாட்டின்படி ஆமணக்குச் செடி ஒன்று அங்கே முளைத்தது.
அது வளர்ந்து யோனாவின் தலைக்கு நிழல் தந்து அவரது மனச்சோர்வை நீக்கியது.
அந்த ஆமணக்குச் செடியைக் கண்டு யோனா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
ஆனால் ஆண்டவரது கட்டளைப்படி மறு நாள் பொழுது விடியும் நேரத்தில்
ஒரு புழு வந்து அந்த ஆமணக்குச் செடியை அரிக்கவே, செடி உலர்ந்து போயிற்று.
கதிரவன் எழுந்தபின் கடவுளின் கட்டளைப்படி, கிழக்கிலிருந்து அனற்காற்று வீசிற்று.
கடும் வெயில் யோனாவின் தலையைத் தாக்கவே அவருக்கு மயக்கம் உண்டாயிற்று.
'வாழ்வதை விடச் சாவதே எனக்கு நல்லது' என்று அவர் சொல்லி,
தமக்குச் சாவு வரவேண்டுமென்று வேண்டிக் கொண்டார்.


அப்பொழுது கடவுள் யோனாவை நோக்கி,
'ஆமணக்குச் செடியைக் குறித்து நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?' என்று கேட்டார்.
அதற்கு யோனா, 'ஆம், முறைதான்;
செத்துப்போகும் அளவுக்கு நான் சினங் கொள்வது முறையே' என்று சொன்னார்.


ஆண்டவர் அவரை நோக்கி,
'அந்தச் செடி ஓர் இரவில் முளைத்தெழுந்து, மறு இரவில் முற்றும் அழிந்தது.
நீ அதற்காக உழைக்கவும் இல்லை, அதை வளர்க்கவுமில்லை.
அதற்கு இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே!
இந்த நினிவே மாநரில் இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.
வலக்கை எது, இடக்கை எது என்று கூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களும்,
அவர்களோடு எண்ணிறந்த கால்நடைகளும் உள்ள இந்த மாநகருக்கு
நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?' என்றார்."

திருக்குரானில் யோனா

தொகு

விவிலியத்தில் வரும் யோனா கதை திருக்குரானிலும் உள்ளது. அங்கே யோனா யூனுஸ் (يونس Yunus) என அழைக்கப்படுகிறார். திருக்குரான், சுரா 37, 139-148 பகுதியில் யோனா பற்றிய குறிப்பு உள்ளது.

யோனா நூலின் உட்பிரிவுகள்

தொகு
பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. யோனாவின் அழைப்பும் கீழ்ப்படியாமையும் 1:1 - 2:1 1357 - 1358
2. யோனாவின் மன்றாட்டு 2:2-10 1358
3. நினிவேயில் யோனா 3:1-10 1359
4. யோனாவின் சினமும் கடவுளின் இரக்கமும் 4:1-11 1359 - 1360
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோனா_(நூல்)&oldid=4041150" இலிருந்து மீள்விக்கப்பட்டது