ராஜபுதன ஓவியப் பாணி

ராஜபுதன ஓவியப் பாணி என்பது, இந்தியாவின் ராஜபுதனப் பகுதியில் உருவாகி வளர்ந்த ஒரு ஓவியப் பாணியாகும். இது 18 ஆம் நூற்றாண்டில் ராஜபுதனத்து அரசவைகளில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஒவ்வொரு ராஜபுதன அரசுக் காலத்திலும், பாணிகள் சிறிதளவு வேறுபட்டிருந்த போதிலும், சில பொது அம்சங்களை இவை கொண்டிருந்தன.

18ஆம் நூற்றாண்டு காலப் பகுதியைச் சேர்ந்த ராஜபுதன ஓவியம் ஒன்று.

ராஜபுதன ஓவியங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சார்ந்த நிகழ்வுகள், கண்ணனுடைய வாழ்க்கை, அழகிய நிலத்தோற்றங்கள், மனிதர் போன்ற இன்னோரன்ன கருப்பொருட்களைக் கொண்டவையாக விளங்குகின்றன. இவ்வகை ஓவியங்களுக்குப் பெரிதும் விரும்பப்பட்ட ஊடகமாக சிற்றோவியங்கள் (Miniature) விளங்கின. இவை, பல நூல்களின் கையெழுத்துப் பிரதிகளிலும் காணப்படுகின்றன. அரண்மனை, கோட்டை ஆகியவற்றின் சுவர்களிலும் கூட இவ்வகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இவ்வோவியங்களில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள், கனிமங்கள், தாவரங்கள், சிப்பி ஓடுகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டன. சில சமயங்களில், பெறுமதியான கற்கள், பொன், வெள்ளி போன்ற உலோகங்களும் இவ்வகை ஓவியங்களில் பயன்பட்டுள்ளன. இவ்வகை ஓவியங்களுக்கான நிறங்களை ஆக்குவது நீண்ட வழிமுறைகளைக் கொண்டது. சில நிறங்களை ஆக்குவதற்குப் பல வாரங்கள் ஆகக்கூடும். மிக மெல்லிய தூரிகைகளையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.

16 ஆம் நூற்றாண்டிலிருந்து முந்நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதியூடாக வளர்ந்து வந்த இந்த ஓவியப் பாணியில், பல பிரிவுகள் உள்ளன. இவற்றுள், மேவார் வகை, புண்டி-கொட்டா கலம் வகை, ஜெய்ப்பூர் வகை, பிக்கானெர் வகை, கிஷென்கர் வகை, மார்வார் வகை, ராகமாலா வகை என்பன குறிப்பிடத் தக்கவை.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜபுதன_ஓவியப்_பாணி&oldid=1927140" இலிருந்து மீள்விக்கப்பட்டது