ராஜ்குமார் சுக்லா

இந்திய விடுதலைப் போராட்டம்

ராஜ்குமார் சுக்லா 1875 ஆம் ஆண்டு பீகாரின் முர்லி பீத்வார்வா கிராமத்தில் (சாம்பியா, மேற்கு சம்பரன்) பிறந்தார். சுதந்திர இந்தியாவுக்கான போராட்டத்தின் போது மகாத்மா காந்தியுடன் இணைந்து செயல்பட்ட புகழ்பெற்ற இந்திய கிராமவாசி ஆவார். தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு காந்தியடிகளின் முதல் அரசியல் போராட்டமான சம்பாரண் விவசாயிகளின் உரிமைகளுக்கான போராட்டத்திற்கு அவரை அந்த இடத்துக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்றுவர் இந்த போராட்டமானது இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுகமாக இருந்தது.

காந்தியின் நெருங்கிய சகாக்களான (அமர்ந்துள்ளவர்கள்) ராஜேந்திர பிரசாத் & அனுகிரா நாராயண் சின்ஹா ஆகியோருடன் சாம்பரன் சத்தியாகிரகிகள்

வரலாறுதொகு

ராஜ்குமார் சுக்லாவுக்கு 5 ஏக்கர் நிலம் இருந்தது. அப்பகுதியின் மற்ற விவசாயிகளைப் போல அவரும் அவுரி பயிர் வைக்குமாறு அதிகாரவர்கத்தால் கட்டாயப்படுத்தப்பட்டார். இந்தக் கட்டாயச் சாகுபடிக்கு எதிராக விவசாயிகளைத் திரட்டும் முயற்சியில் ஷேக் குலாம் என்ற உள்ளூர் நண்பருடன் ஈடுபட்டார். மாவட்ட ஆட்சியருக்கு மனுக்களை அனுப்பிப் பார்த்தார். வேலைநிறுத்தத்துக்குக் கூட ஏற்பாடுகளைச் செய்தார். இதையடுத்து, அவுரி சாகுபடியாளர்களை பிரிட்டிஷ் அரசு ஏவிய போலீஸ்காரர்களும், தோட்ட அதிபர்களும் சேர்ந்து தாக்கினர். தோட்ட அதிபர்களுக்கு எதிராக சுக்லா வழக்கு தொடர, இதற்கு பாட்னா வழக்கறிஞர்கள் உதவ முன்வந்தனர். ஐரோப்பிய மேலாளர் ஒருவருடன் சச்சரவில் ஈடுபட்டதற்காக 1914 இல் சுக்லாவைச் சில காலம் சிறையில் அடைத்தது பிரித்தானிய அரசு. முதல் உலகப் போர் சமயத்தின்போது, அவுரிக்குத் தேவை அதிகமானதால், அதிக பரப்பளவில் அவுரி சாகுபடி செய்யுமாறு விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். கான்பூரிலிருந்து வெளிவந்த ‘பிரதாப்’ என்ற இந்தி செய்தித்தாளில் அவ்வப்போது இதைக் கண்டித்து கட்டுரைகள் எழுதிவந்தார் சுக்லா. அப்பத்திரிக்கையின் ஆசிரியரான கணேஷ் சங்கர் வித்யார்த்தி தென்னாப்பிரிக்காவில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்காக அந்நாட்டு அரசுக்கு எதிராக காந்தியடிகள் போராடிய விவரத்தை தெரிவித்தார்.[1]

1916 திசம்பரில் லக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாட்னா வழக்கறிஞர்கள் பிரஜ்கிஷோர் பிரசாத், ராஜேந்திர பிரசாத் ஆகியோருடன் சுக்லாவும் கலந்துகொண்டார். அவுரி சாகுபடியாளர்களின் பிரச்சினைகளைப் பற்றி மாநாட்டுக்கு வந்திருந்த தலைவர்களான பால கங்காதர திலகர், மதன்மோகன் மாளவியா ஆகியோரிடம் எடுத்துரைத்தனர். நாட்டின் சுதந்திரத்துக்காக நடத்தும் போராட்டத்தை அது திசைதிருப்பிவிடும் என்று கருதி அவ்விருவரும் அந்தப் பிரச்சினையில் ஆர்வம் செலுத்தத் தயங்கினர். இருந்தாலும், பிகாரில் அவுரி சாகுபடியை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுவதைக் கண்டிக்கும் ஒரு தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின் மீது பேச வேண்டும் என்று காந்திஜிக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த விவகாரம் குறித்து முழுதாக ஏதும் தெரியாமல் பேச முடியாது என்று அவர் மறுத்துவிட்டார். அதற்குப் பிறகு ராஜ்குமார் சுக்லா, காந்திஜியிடம் சென்று, ஒரு முறை சம்பாரணுக்கு வந்து விவசாயிகளின் நிலைமையை நேரில் ஆராயுமாறு வேண்டுகோள் விடுத்தார். இக்கோரிக்கையை இப்போது தன்னால் ஏற்க முடியாது என்று காந்திஜி மறுத்துவிட்டார். அவருடைய உதவியைப் பெறுவதில் விடாப்பிடியாக முயற்சிகளை மேற்கொண்டார் சுக்லா.

சாந்தாரில் காந்திதொகு

காந்தி 1917 ஏப்ரல் மாத இரண்டாவது வாரத்தில் தன் தேசியவாத சகாக்களான இராசேந்திர பிரசாத், அனுகுரா நாராயண் சின்ஹா, ப்ராஜ்கிஷோர் பிரசாத் ஆகியோருடன் சாம்பரன் வந்தார் இதன்பிறகு சம்பரன் சத்தியாக்கிரகம் துவங்கியது.[2]

இவரது 125 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், 2000 ஆம் ஆண்டில் அஞ்சல்துறை அஞ்சல் தலையை வெளியிட்டது.[3]

இதையும் காண்கதொகு

சம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள்

மேற்கோள்கள்தொகு

  1. ராமசந்திர குஹா (21 ஏப்ரல் 2017). "ராஜ்குமார் சுக்லா நமக்குச் செய்தது என்ன?". கட்டுரை. தி இந்து. 21 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. Brown, Judith Margaret (1972). Gandhi's Rise to Power, Indian Politics 1915-1922: Indian Politics 1915-1922. New Delhi: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் Archive. பக். 384. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-09873-1. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-09-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-04-21 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்குமார்_சுக்லா&oldid=3578156" இருந்து மீள்விக்கப்பட்டது