ராடன் விஜயன்

(ராடென் விஜயன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராடன் விஜயன் நாராரியன் சங்கிராமவிஜயன், முடிக்குரிய பெயரில் கர்த்தராயச செயவர்த்தனன் என்றெல்லாம் அழைக்கப்படுபவன் மயபாகித் சாம்ராச்சியத்தை அமைத்தவனும், 1293–1309 வரை வாழ்ந்தவனுமான சாவக அரசன் ஆவான்.[1] "நகரகிரேதாகமம்", "பரராத்தன்" முதலான பழம்நூல்கள், இவன் வரலாற்றைக் கூறுகின்றன. மொங்கோலியப் பேரரசன் குப்லாய் கானுக்கெதிரான இவன் வெற்றியும் சாவக வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.

ராடன் விஜயன்
மயபாகித் பேரரசன்
மாலொருபாகன் வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ள ராடன் விஜயன். சண்டி சிம்பிரிங்கில் கிடைத்த சிற்பம்.
ஆட்சிமயபாகித் பேரரசு: 1294–1309
முடிசூட்டு விழா1294
பின்வந்தவர்செயநகரன்
அரசிபரமேசுவரி திரிபுவனா
துணைவர்காயத்திரி ராஜபத்தினி
மனைவிகள்
  • இந்திரேசுவரி (தாரா பெதாக்)
  • பிரச்சினபராமிர்தா
  • நரேந்திர துகிதா
முழுப்பெயர்
கர்த்தராஜச செயவர்த்தனன்
அரச குலம்இராயச வம்சம்
இறப்பு1309
மயபாகித்
சமயம்சைவம், சாவக நெறி

வரலாறு

தொகு

பரராத்தன் சொல்வதன் படி, இவன் சிங்கசாரி அரசனான மகிச செம்பகனின் மைந்தனாவான். புத்தக இராச்சியராச்சியம் எனும் நூல் சொல்வதன்படி, அவன் மகிச செம்பகனின் மகள் வழிப் பேரனாவான். நகரகிரேதாகமத்தின் படி, மகிச செம்பகனின் மகன் "டியா சிங்கமூர்த்தி"யின் மைந்தனாக இவன் சொல்லப்படுகின்றான். நகரகிரேதாகமம், விஜயன் மறைந்து ஐம்பதாண்டுகளுக்குப் பின் (1365) எழுதப்பட்டதால், அது சொல்வதே சரியானதென்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

1290களில், செயகாதவாங்கன் எனும் கேடிரி அரசன், சிங்கசாரிப் பேரரசுக்கு எதிராகச் செய்த கிளர்ச்சியில், சிங்கசாரியின் பேரரசன் கர்த்தநாகரன் கொல்லப்பட்டதுடன், அவனது மருகன் ராடன் விஜயன், சிங்கசாரிக்குத் திக்கதிபனாயிருந்த ஆரிய வீரராசனுடன் மதுராத் தீவுக்குத் தப்பிச் சென்றான். அங்கிருந்து பலமிகுந்த நாடொன்றைக் கட்டியெழுப்பத் திட்டமிட்ட விஜயன், அதற்கு ஆரிய வீரராசன் உதவினால், அவனுக்கும் சாவகத்தைப் பங்கிடுவதாக ஒப்பந்தம் செய்துகொண்டான். விஜயனால் அதன் பின் அமைக்கப்பட்ட மயபாகித் அரசில், ஆரிய வீரராசன் மைந்தர்கள் "ரங்கலாவே", லெம்பு சேரன், நம்பி ஆகியோர், சேனாதிபதிகளாகவும் முதலமைச்சர்களாகவும் விளங்கினர். விஜயன் வாக்களித்தபடியே, மதுராத் தீவும் அதன் சுற்றயல் பகுதிகளும் ஆரிய வீரராசனுக்கு வழங்கப்பட்டன.

கிழக்கு யாவாக்கு 1292 இல் படையெடுத்து வந்த குப்லாய் கானின் மொங்கோலியப் படையுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட விஜயன், செயகாதவாங்கனின் ஆட்சியின் கீழிருந்த சிங்கசாரி அரசை முற்றுகையிட்டான். 1293 இல் செயகாதவாங்கன் தோல்வியுற்று வீழ்ந்தபோது, எதிர்பாராதவிதமாக விஜயன் மொங்கோலியப் படையைத் தாக்கலானான். தம் நாட்டுக்கொவ்வாத காலநிலையாலும், கொள்ளை நோய்களாலும் ஏற்கனவே பலமிழந்துபோயிருந்த மொங்கோலியப் படைகள் சாவகத்திலிருந்து பின்வாங்க வேண்டியதாயிற்று..[2] இதன்பின்னர், "கர்த்தராயச செயவர்த்தனன்" எனும் பெயருடன் மயபாகித் எனும் புதிய பேரரசின் சக்கரவர்த்தியாக, தன்னை முடிசூடிக் கொண்டான் ராடன் விஜயன்.[3]:201,232-233

குடும்பம்

தொகு

சிங்கசாரியின் வீழ்ச்சிக்கு முன்பு, விஜயன் கர்த்தநாகரனின் இளைய மகளான காயத்திரி ராஜபத்தினியை மணமுடித்திருக்கிறான். எனினும் மயபாகித்தை அமைத்தபின்னர், அவளது மூன்று சகோதரியரையும் கூட மணந்திருக்கிறான். அவர்களில் மூத்தவளான பரமேசுவரி திரிபுவனா, பட்டமகிஷியாக அமர்ந்ததுடன், அவளது மைந்தனான "செயநகரன்", கேடிரி அரசின் இளவரசனாக 1295இல் முடிசூட்டப்பட்டிருக்கின்றான்.[3]:201 பிரச்சினபராமிர்தா, நரேந்திர துகிதா ஆகியோர் விஜயனின் ஏனைய இரு மனைவியர். இவர்கள் நால்வரும் தவிர, மலாய அரசிலிருந்து கர்த்தநாகரன் கவர்ந்து வந்த இந்திரேசுவரியையும் விஜயன் மணந்துகொண்டான். இப்படி ஐந்து தேவியரைக் கொண்டிருந்த போதும், "சண்டி சிம்பிங்" கோயிலில் மாலொருபாகனாகச் சித்தரிக்கப்படும் விஜயனின் இருபுறமும் மரபுக்கேற்ப இருதேவியரே காட்டப்பட்டிருக்கின்றனர். அவர்களில் ஒருத்தி காயத்திரி என்றும் மற்றவள் இந்திரேசுவரி அல்லது திரிபுவனா என்றும் நம்பப்படுகின்றது.

இந்திரேசுவரிக்கு செயநகரனும், காயத்திரிக்கு திரிபுவன விஜயதுங்கதேவி, ராஜதேவி என்று இரு பெண்களும் பிறந்தனர். செயநகரன் விஜயனின் மறைவுக்குப் பின், மயபாகித்தின் இரண்டாவது பேரரசனாக முடிசூடிக் கொண்டான்.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Slamet Muljana, 2005, Runtuhnya Kerajaan Hindu-Jawa dan Timbulnya Negara-negara Islam di Nusantara, Yogyakarta: LKiS, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9798451163.
  2. "Beginning of the Mongol Collapse," Columbia University, [Asian Topics Online http://afe.easia.columbia.edu/mongols/china/china4_a.htm].
  3. 3.0 3.1 Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824803681.

மேலும் பார்க்க

தொகு


முன்னர்
மயபாகித் பேரரசு
1294–1309
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராடன்_விஜயன்&oldid=2759813" இலிருந்து மீள்விக்கப்பட்டது