ராமாயணமா கீமாயணமா (நூல்)

ராமாயணமா? கீமாயணமா? என்ற நூல் எம். ஆர். ராதாவால் எழுதப்பட்டது. இது டிசம்பர், 1954ம் ஆண்டு பாரதி அச்சகம், குடந்தை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதன் புதிய பதிப்பை அன்பு அச்சகம், மதுரை 2008ம் ஆண்டு வெளியிட்டது.

எம்.ஆர் ராதா முன்னுரை

தொகு

அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார், சாஸ்திரி, சர்மாக்களின் மூல(சமசுகிருத) மொழிபெயர்ப்புக்கள் அறிஞர்களின் சொல்லோவியங்கள், ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள், இத்தகைய அடிப்படையிலேயே எழுந்ததுதான் என் ராமாயண நாடகம். வினா விடுத்தவர்களுக்கும் விடைபகரும், நோக்கமே உருவானது இச்சிறு நூல். ஐயப்பாடுடைய அக்ரகாரங்களுக்கு ஆதாரம். வேதனைப்படும் ஆத்தீக நண்பர்களுக்கு விளக்கம். விருப்பு வெறுப்பின்றி நடு நிலைமை வகித்து இதைப்படிக்கின்ற வாசகர்கள் கூறட்டும் இது ராமாயணமா? கீமாயணமா என்று? முடிவை மக்களிடம் விட்டு விடுகின்றேன்.

நூலைப்பற்றி பெரியார்

தொகு

நடிகவேள் எம்.ஆர் இராதா அவர்களால் நாடகரூபமாய் நடிக்கப்படும் இராமாயணம் என்னும் நாடகத்தைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.அவர் நாடகத்தில் நடிக்கும் பாகங்கள் குறிப்புகள் அவ்வளவும் அனேகமாக வால்மீகி இராமாயணம் என்னும் நூலில் காணப்படும் உண்மைகள். இந்த உண்மைகளை மக்கள் அறியாமல் இருக்க வேண்டுமென்றே பலர் மறைத்தும், திரித்தும், அடியோடு புது விடயங்களை புகுத்தியும் வந்ததினால் பெரும்பாலான மக்களுக்கு ராமாயண உண்மைத் தத்துவம் தெரியாமல் போய்விட்டது. நான் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இராமாயண ஆராய்ச்சி செய்து அதன் தன்மையையும் உண்மையையும் சொற்பொழிவாலும் பத்திரிக்கையாலும் ஆராய்ச்சி நூல் என்பதினாலும் மக்களுக்கு வெளியிட்டு வந்ததினாலும் அவை மக்களிடையில் சாதாரணமாக பரவுவதற்கு முடியாமல் போய்விட்டது. இப்போது நடிகவேள் ராதா அவர்கள் பெரும்பாலும் எனது ஆராய்ச்சிக்கருத்துக்களையே தழுவி நாடகரூபமாக்கி நடிக்க முன்வந்திருப்பதானது மிகவும் பாராட்டத்தக்கதாகம் என்பதோடு இதுவரையும் யாரும் செய்யமுடியாத இக்காரியத்தை இவரே முதலாக நடிக்க முன்வந்த இவரது துணிவையும் நான் பாராட்டுகின்றேன்.

நூலைப்பற்றி அண்ணா

தொகு

நடிகவேள் இராதா நடத்தும் இராமாயணம் நாட்டிலே இன்று ஏற்பட்டிருக்கும் இன எழுச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. வால்மீகியின் ராமாயணத்தை மெருகளிப்பதாக கூறிக்கொண்டு கம்பன் தமிழகத்தாருக்கு ஓர் கரைபடிந்த காவியத்தைத் தந்து சென்றான். அதன் பயனாக இராமாயணம் கலாச்சார போரின் விளைவாக ஆரிய காவியங்களின் உண்மைகளும், தன்மைகளும் விளக்கப்பட்டு வருகின்றன. இதற்கு உறுதுணையாக ராதாவின் ராமாயணம் அமைந்திருக்கிறது. இன எழுச்சியும் மனத்துணிவும் நடிப்புத் திறனும் ஒருங்கே அமையப்பெற்ற நடிகவேள் இராதா அவர்கள், இந்த நாடகம் மூலம் நாட்டு விடுதலைக் கிளர்ச்சிக்கு சிறந்த தொண்டாற்றுகிறார் என்று மகிழ்ந்து பாராட்டுகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமாயணமா_கீமாயணமா_(நூல்)&oldid=3381150" இலிருந்து மீள்விக்கப்பட்டது