ரூபர்ட்சுலாந்து

ரூபர்ட்சுலாந்து (Rupert's Land) அல்லது இளவரசர் ரூபர்ட்டின் நாடு (Prince Rupert's Land) பிரித்தானிய வட அமெரிக்காவில் அட்சன் விரிகுடாவை உள்ளடக்கிய நிலப்பகுதியாகும். இப்பகுதிக்கு 1670 முதல் 1870 வரை 200 ஆண்டுகளுக்கு அட்சன் விரிகுடா நிறுவனம் உரிமையாளராக இருந்தது. இங்கு வாழ்ந்த பல்வேறு தொல்குடிகள் இதனை எதிர்த்துவந்தபோதும் தனது உரிமையை இந்நிறுவனம் நிலைநாட்டியிருந்தது. இப்பகுதியின் பெரும்பகுதி கனடாவின் அங்கமாக இருந்தபோதும் சிறியதோர் பகுதி அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ளது. அட்சன் விரிகுடா நிறுவனத்தின் முதல் ஆளுநரும் முதலாம் சார்லசின் மருமகனுமான ரைன் இளவரசர் ரூபர்ட்டின் பெயரால் இப்பகுதி அறியப்படுகின்றது. திசம்பர் 1821இல் அட்சன் விரிகுடா நிறுவனத்தின் ஏகபோகம் ரூபர்ட்ச்லாந்திலிருந்து அமைதிப் பெருங்கடல் கடற்கரை வரை விரிவுபடுத்தப்பட்டது.

ரூபர்ட்சுலாந்து நிலப்படம்
ரூபர்ட்சுலாந்தின் கொடி - கொடியிலுள்ள HBC என்ற எழுத்துக்கள் அட்சன் விரிகுடா நிறுவனம் என்பதைக் குறிக்கின்றது.

கனடாவில் ரூபர்ட்சுலாந்தில் முழுமையான மானிட்டோபா, பெரும்பாலான சஸ்காச்சுவான், தெற்கத்திய ஆல்பர்ட்டா, தெற்கத்திய நூனவுட், மற்றும் வடக்கத்திய ஒன்ராறியோ, கியூபெக் பகுதிகளும் அடங்கும். தற்கால ஐக்கிய அமெரிக்காவில் மினசோட்டா, வடக்கு டகோட்டா மாநிலங்களின் பகுதிகளும் மொன்ட்டானா, தெற்கு டகோட்டா மாநிலங்களின் சிறிய பகுதிகளும் அடங்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபர்ட்சுலாந்து&oldid=2568699" இலிருந்து மீள்விக்கப்பட்டது