இங்கிலாந்தின் முதலாம் சார்லசு

முதலாம் சார்லசு (Charles I, 19 நவம்பர் 1600 - 30 சனவரி 1649[1] இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து இராச்சியங்களின் அரசராக 1625 மார்ச் 27 முதல் 1649 இல்சனவரி 30 கோடரியால் தலை துண்டிக்கப்படும் வரை வரை பதவியில் இருந்தவர்.

முதலாம் சார்லசு
Charles I
அந்தோனி வான் டைக் வரைந்த முதலாம் சார்லசுவின் உருவப்படம் (1636)
இங்கிலாந்து, அயர்லாந்து அரசன்
ஆட்சிக்காலம்27 மார்ச் 1625 - 30 சனவரி 1649
முடிசூட்டுதல்2 பெப்ரவரி 1626
முன்னையவர்முதலாம் ஜேம்சு
பின்னையவர்இரண்டாம் சார்லசு (சட்டப்படி)
இசுக்கொட்லாந்து அரசர்
ஆட்சிக்காலம்27 மார்ச் 1625 - 30 சனவரி 1649
முடிசூட்டுதல்18 சூன் 1633
முன்னையவர்ஆறாம் ஜேம்சு
பின்னையவர்இரண்டாம் சார்லசு
பிறப்பு(1600-11-19)19 நவம்பர் 1600
டம்பெர்ம்லின் மாளிகை, இசுக்கொட்லாந்து
இறப்புசனவரி 30, 1649(1649-01-30) (அகவை 48)
உவைட்ஹோல் மாளிகை, இலண்டன்
புதைத்த இடம்9 பெப்ரவரி 1649
சென் ஜோர்ஜசு சப்பல், வின்சர் மாளிகை, இங்கிலாந்து
துணைவர்பிரான்சின் என்றியெட்டா மரியா
குழந்தைகளின்
பெயர்கள்
மரபுஸ்டுவர்ட் மாளிகை
தந்தைமுதலாம் ஜேம்சு
தாய்டென்மார்க்கின் ஆன்
மதம்ஆங்கிலிக்கம்

சார்ல்சு இசுக்கொட்லாந்தின் ஆறாம் ஜேம்சு மன்னரின் இரண்டாவது மகன் ஆவார். ஆனாலும், தந்தை ஜேம்சு இங்கிலாந்தின் ஆட்சியை 1603 இல் பெற்றதை அடுத்து சார்லசு இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்து, மீதமுள்ள தனது வாழ்க்கையை அங்கேயே கழித்தார்.[2] 1612 இல் ஜேம்சு மன்னரின் மூத்த மகன் இளவரசர் என்றி பிரெடெரிக் இறந்ததை அடுத்து,[3] சார்ல்சு இங்கிலாந்து, ஐயர்லாந்து, இசுக்கொட்லாந்து இராச்சியங்களுக்கு முடிக்குரிய இளவரசராக அறிவிக்கப்பட்டார். 1623 இல் சார்ல்சிற்கு எசுப்பானிய ஆப்சுபூர் இளவரசி ஒருவரைத் திருமணம் செய்து வைக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.[4] பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பிரான்சின் என்றியெட்டா மரியா என்பவரை சார்ல்சு திருமணம் புரிந்தார்.[5]

தந்தையின் இறப்பிற்குப் பின்னர், முதலாம் சார்லசு 1625 இல் மூன்று இராச்சியங்களுக்கும் அரசனாக முடிசூடினார். சார்லசு மன்னரின் சிறப்புரிமை அதிகாரத்தைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து நாடாளுமன்றம் முனைந்ததை அடுத்து சார்லசிற்கும், நாடாளுமன்றத்திற்கும் இடையில் மோதல் வெடித்தது. அரசர்களின் தெய்வீக உரிமையில் நம்பிக்கை கொண்டிருந்த சார்லசு, தனது மனசாட்சியின் படி ஆட்சி முடியும் என நினைத்தார். அரசரின் பல கொள்கைகளை நாடாளுமன்றத்தினர் எதிர்த்தனர், குறிப்பாக நாடாளுமன்ற அனுமதி இன்றி வரி வசூலித்தல், மற்றும் ஒரு கொடுமையான, கேட்பாரற்ற அரசரின் நடவடிக்கைகள் அவருக்கு எதிராகத் திரும்பின. உரோமன் கத்தோலிக்கப் பெண்ணை மணந்தமை, மற்றும் அவரது கத்தோலிக்கம் சார்பான கொள்கைகள் கரஞ்சீர்திருத்தச் சமயவாதிகள் (பியூரித்தான்கள்), மற்றும் கால்வினீஸ்து சீர்திருத்தவாதிகள் அவர் மீது அவநம்பிக்கை கொள்ள வைத்தன.[6] ரிச்சார்டு மொன்டேகு, வில்லியம் லோட் போன்ற உயர் திருச்சபைத் தலைவர்களை அவர் ஆதரித்தாலும், முப்பதான்டுப் போரில் சீர்திருத்தவாதிகளின் சக்திகளுக்கு உதவத் தவறினார்.[7] இசுக்கொட்லாந்து திருச்சபையினர் ஆங்கிலிக்க நடைமுறைகளைப் பின்பற்ற சார்ல்சு கட்டாயப்படுத்தியமை ஆயர்களின் போருக்கு வழிவகுத்தது. இவை அனைத்தும், ஆங்கிலேய, இசுக்கொட்லாந்து நாடாளுமன்றங்களை வலுப்படுத்தவும், மற்றும் அவரது சொந்த வீழ்ச்சிக்கும் மட்டுமே உதவியது.

1642 முதல், இங்கிலாந்து உள்நாட்டுப் போரின் போது சார்ல்சு ஆங்கிலேய, இசுக்கொட்லாந்து நாடாளுமன்றங்களின் இராணுவத்தினருடன் போரில் ஈடுபட்டார். இப்போரில் 1645 ஆம் ஆண்டில் தோல்வியடைந்ததை அடுத்து, சார்ல்சு இசுக்கொட்லாந்துப் படையினரிடன் சரணடைந்தார். அவர்கள் அவரை இங்கிலாந்து நாடாளுமன்றத்திடம் கையளித்தனர். கடத்தியவர்களின் அரசியல்சட்ட முடியாட்சிக் கோரிக்கைக்கு சார்ல்சு இணங்க மறுத்தார். 1647 நவம்பரில் சிறையில் இருந்து தப்பி வெளியேறினார். ஆனாலும், வைட்டுத் தீவில் அவர் மீண்டும் பிடிபட்டார். 1648 இறுதியில் ஆலிவர் கிராம்வெல்லின் புதிய முன்மாதிரியான இராணுவம் இங்கிலாந்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. சார்ல்சு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு 1649 சனவரி 30 கோடரியால் தலை துண்டிக்கப்பட்டார் . இங்கிலாந்தில் முடியாட்சி அகற்றப்பட்டு, பொதுநலவாய இங்கிலாந்து என்ற புதிய குடியரசு அறிவிக்கப்பட்டது. ஆனாலும், 1660 இல் முடியாட்சி மீண்டும் கொண்டு வரப்பட்டு முதலாம் சார்லசுவின் மகன் இரண்டாம் சார்லசு அரசரானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. இக்கட்டுரையில் உள்ள அனைத்துத் திகதிகளும் பழைய யூலியன் நாட்காட்டியில் கொடுக்கப்பட்டுள்ளன.
  2. Carlton 1995, ப. 3; Gregg 1981, ப. 9.
  3. Gregg 1981, ப. 29.
  4. Gregg 1981, ப. 87–89; Quintrell 1993, ப. 11; Sharpe 1992, ப. 5.
  5. Gregg 1981, ப. 114; Hibbert 1968, ப. 86; Weir 1996, ப. 252.
  6. Gregg 1981, ப. 130–131.
  7. Gregg 1981, ப. 131.
  • Carlton, Charles (1995), Charles I: The Personal Monarch (Second ed.), London: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-12141-8
  • Hibbert, Christopher (1968), Charles I, London: Weidenfeld & Nicolson
  • Gregg, Pauline (1981), King Charles I, London: Dent, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-460-04437-0
  • Quintrell, Brian (1993), Charles I: 1625–1640, Harlow: Pearson Education, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-00354-7
  • Sharpe, Kevin (1992), The Personal Rule of Charles I, New Haven & London: Yale University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-05688-5
  • Weir, Alison (1996), Britain's Royal Families: A Complete Genealogy (Revised ed.), London: Pimlico, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7126-7448-5

வெளி இணைப்புகள்

தொகு