அரசியல்சட்ட முடியாட்சி

அரசியல்சட்ட முடியாட்சி அல்லது அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி (Constitutional monarchy) அல்லது குறுகிய முடியாட்சி (limited monarchy) என்பது, ஒரு வகையான அரசியல் முறைமை. இதில், எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத அரசியல்சட்டத்துக்கு அமைய அரசன் அல்லது அரசி நாட்டின் தலைவராக இருப்பார். இது முழுமையான முடியாட்சியில் இருந்தும் வேறு பட்டது. முழுமையான முடியாட்சியில் அரசன் அல்லது அரசியிடமே கட்டற்ற அரசியல் அதிகாரம் இருக்கும் என்பதுடன் அவர்கள் எந்த அரசியல் சட்டத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.

பெரும்பாலான அரசியல்சட்ட முடியாட்சிகள் நாடாளுமன்ற முறையைக் கைக்கொள்கின்றன. இம்முறையில், அரசர் ஒரு சடங்குமுறையான ஆட்சித் தலைவராக இருப்பார். நேரடியாக அல்லது மறைமுகமாக மக்களால் தெரிவு செய்யப்படும் ஒருவர் பிரதம அமைச்சராக இருப்பார். உண்மையான அரசியல் அதிகாரத்தை இவரே செயல் படுத்துவார். கடந்த காலங்களில், அரசர்கள் பாசிச இத்தாலி, பிராங்கோயிய எசுப்பெயின் போன்ற பாசிச, குறைப் பாசிச அரசியல் சட்டங்களுடனும், இராணுவ வல்லாண்மைகளுடனும் சேர்ந்து இயங்கியுள்ளனர்.

தற்காலத்தில் ஆசுத்திரேலியா, பெல்சியம், கம்போடியா, கனடா, டென்மார்க், சப்பான், லக்சம்பர்க், மலேசியா, நெதர்லாந்து, நார்வே, எசுப்பெயின், சுவீடன், தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம் என்பன அரசியல்சட்ட முடியாட்சி முறையைக் கைக்கொள்ளும் நாடுகள் ஆகும்.