ரெனே லென்னக்

பிரெஞ்சு மருத்துவர், இதயத்துடிப்பு மானியைக் கண்டுபிடித்தவர் (1781-1826)

ரெனே லென்னக்(René-Théophile-Hyacinthe Laennec[1] பிரஞ்சில்: [laɛnɛk]; 17 பெப்ரவரி 1781 – 13 ஆகத்து 1826) என்பவர் ஒரு பிரான்சு மருத்துவர் ஆவார். 1816இல் ஸ்டத்தஸ் கோப் என்னும் இதயத்துடிப்பு மானியைக் ‎ கண்டுபிடித்தவர்.

René Laennec
ரெனே லென்னக்
பிறப்பு17 பெப்ரவரி 1781
Quimper, பிரான்சு
இறப்பு13 ஆகத்து 1826
Ploaré, பிரான்சு
குடியுரிமைபிரான்சு
தேசியம்பிரஞ்சு
அறியப்படுவதுஸ்டெத்தஸ் கோப் கண்டுபிடிப்பாளர்

பிறப்பும் வாழ்க்கையும்

தொகு

ரெனே லென்னக் பிரான்சு நாட்டில் பிறந்தவர். இவரது 6 வயதில் தாயை இழந்தார். பாதிரியாரான உறவுக்கார தாத்தா இவரை வளர்த்தார். பிறகு, நான்ட்ஸ் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிற்றுவித்து வந்த வேறொரு உறவுக்காரர் இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார்.

கல்வி

தொகு

இவர் ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய 2 மொழிகளிலும் சிறந்து விளங்கினார். படிப்பிலும் சிறந்த மாணவராக பல பரிசுகளை வென்றார். சிறு வயதிலேயே தன் மாமாவின் வழிகாட்டுதலுடன் மருத்துவம் பயிலத் தொடங்கினார்.

வழக்கறிஞரும், கவிஞருமான இவரது அப்பா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மருத்துவப் படிப்பை நிறுத்தினார். கிரேக்க மொழி பயின்று கவிதைகள் எழுதத் தொடங்கினார். 1799-ல் மீண்டும் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்தார்.

19 வயதில் பாரிஸ் சென்று ‘எகோலே பிராட்டிக்’ ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில் பயின்றார். அங்கு மருத்துவம், அறுவை சிகிச்சைக்கான முதல் பரிசை வென்றார்.

ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல்

தொகு

இவர் 1802-ல் மாணவராக இருந்தபோதே தனது முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். கல்லீரல் நோய்கள், ரத்தத்தில் காணப்படும் நுண்ணுயிர்கள் குறித்து கட்டுரைகள் வெளியிட்டார்.

மருத்துவ அறிவியல் இதழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1804-ல் மருத்துவப் படிப்பை முடித்தார். உடல்கூறு குறித்து பல மாணவர்களுக்குப் பயிற்றுவித்தார்.

1808-ல் அத்தெனி மெடிக்கல் (Athenee Medical) என்று அமைப்பை நிறுவினார். பிறகு அது சொசைட்டி அகாடமிக் டி பாரிஸ் (Societe Academique de Paris) என்ற பிரபல அமைப்புடன் இணைக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் நோய்இயல், உடற்கூறுஇயல் குறித்து பல கட்டுரைகள் எழுதினார்.

மருத்துவர் பணியில்

தொகு

1816-ல் பாரிசில் உள்ள நெக்கர் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றினார். 1822-ல் பிரான்சு கல்லூரியில் மருத்துவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். காசநோய், புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவர் கண்டுபிடித்த நோய்களின் பெயர்கள், சிகிச்சை முறைகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.

ஸ்டெத்தஸ்கோப் கண்டுபிடிப்பு

தொகு

அக்காலத்தில் மார்பில் காதை வைத்துதான் இதயத்துடிப்பு சத்தத்தை மருத்துவர்கள் கேட்டனர். இதனால் சில பெண்களுக்கு இது கூச்சத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியது. இதேபோல மருத்துவரான இவரும் சங்கடம் அனுபவித்தார்.இதனால் மாற்றுவழி கண்டுபிடிக்க முடிவு செய்தார். குழாய் போன்ற நீண்ட மரத் தண்டுகளை வைத்து குழந்தைகள் பேசி விளையாடுவதைக் கண்டார். உடனே மரத்தால் ஆன உருளை வடிவ கருவியை வடிவமைத்தார். பின்னாட்களில் இதை பிரிக்கக்கூடிய மூன்று பகுதிகளால் ஆன கருவியாக மேம்படுத்தினார்.

பிரெஞ்சில் ‘ஸ்டெதஸ்’ என்றால் மார்பு; ‘ஸ்கோப்ஸ்’ என்றால் சோதித்தல். அதனால், தனது கருவிக்கு ஸ்டெதஸ்கோப் என்று பெயரிட்டார். இந்த கருவியின் நம்பகத்தன்மையை துவக்கத்தில் சில மருத்துவர்கள் ஏற்கவிலை என்றாலும் கொஞ்ச காலத்தில் அனைவரும் இதை ஏற்றுக்கொண்டனர். இதன் பிறகு மருத்துவ அறிவியலில் இவரது கண்டுபிடிப்பு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது.

மறைவு

தொகு

மருத்துவராக, கண்டுபிடிப்பாளராக மட்டுமின்றி, சமூகத்துக்கு பல நன்மைகளை செய்துவந்தார். பல அறப்பணிகளிலும் ஈடுபட்டுவந்த லென்னக் 1826இல் தனது 45ஆம் வயதில் காசநோயால் பாதிக்கப்பட்டு மறைந்தார்.

குறிப்புகள்

தொகு
  1. While some sources use the alternative spelling Laënnec, the correct form is Laennec, without the diaraesis, which is not used in Breton names. He did not use the diaraesis in his signature.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெனே_லென்னக்&oldid=3524814" இலிருந்து மீள்விக்கப்பட்டது