லங்காராம

(லங்காராமய இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லங்காராம என்பது இலங்கையின் பண்டைய தலைநகரமான அனுராதபுரத்துக்கு அண்மையில் கல்கெபக்கட என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு தாதுகோபுரம் ஆகும். இது வட்டகாமினி அபய (வலகம்பா) என்னும் அரசனால் கிமு முதலாம் நூற்றாண்டில் கட்டுவிக்கப்பட்டது. இத் தாதுகோபுரத்தின் பழைய வடிவம் பற்றி எதுவும் தெரியவில்லை. தற்போதுள்ள தாதுகோபுரம் பிற்காலத்தில் பெருமளவு திருத்தத்துக்கு உள்ளான வடிவம். இதனைச் சுற்றி பழங்காலத்துத் தூண்களின் அழிபாடுகள் காணப்படுகின்றன. இவை அமைந்துள்ள விதத்தில் இருந்து, அக்காலத்தில் இத் தாதுகோபுரத்தை மூடி "வட்டதாகே" என அழைக்கப்படும் ஒரு வட்ட வடிவிலான கட்டிடம் இருந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. தாது கோபுரத்தைச் சூழவுள்ள மேடை நிலத்திலிருந்து 10 அடி (3 மீட்டர்) உயரத்தில் உள்ளது. தாதுகோபுரம் 45 அடி (14 மீட்டர்) விட்டம் கொண்டது. சூழவுள்ள மேடையின் விட்டம் 1332 அடி (406 மீட்டர்).

லங்காராம தாதுகோபுரம்.
"எத் பொக்குண" (யானைக் குளம்).

இதன் பழைய பெயர் சிலசோப கந்தக்க சைத்திய என்பது. கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அனுராதபுரத்தைத் தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்தனர். அக்காலத்தில் வட்டகாமினி அபய சிலசோப கந்தக்க என்னும் இடத்தில் ஒளித்து இருந்தானாம். கிமு 103 ஆம் ஆண்டில் அவன் தமிழ் மன்னர்களிடம் இருந்து அனுராதபுரத்தைக் கைப்பற்றிய பின்னர் தான் மறைந்திருந்த இடத்தின் பெயரால் இத் தாதுகோபுரத்தைக் கட்டுவித்ததாகச் சொல்லப்படுகிறது.

யானைக் குளம்

தொகு

இந்தத் தாதுகோபுரத்துக்கு அருகில் "எத் பொக்குண" எனச் சிங்கள மொழியில் அழைக்கப்படும் யானைக் குளம் உள்ளது. இது பழங்காலத்தில் மனிதரால் கட்டப்பட்டது. இதன் நீளம் 159 மீட்டரும் அகலம் 52.7 மீட்டரும் ஆகும். 9.5 மீட்டர் ஆழம் கொண்ட இக்குளம் 75,000 கனமீட்டர் நீரைக் கொள்ளக்கூடியது. இதற்கான நீர், பெரியகுளம் எனப்படும் குளத்தில் இருந்து நிலக்கீழ் கால்வாய்கள் மூலம் கொண்டுவரப்படுகின்றது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக் கால்வாய்கள் இன்னும் பயன்படும் நிலையில் உள்ளன.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லங்காராம&oldid=3227263" இலிருந்து மீள்விக்கப்பட்டது