லதா படா

இந்திய பரதநாட்டிய கலைஞர் மற்றும் நடன அமைப்பாளர்

லதா படா (Lata Pada) [1] என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு கனடியர் ஆவார். இந்தியாவில் பிறந்து கனடாவில் குடியுரிமை பெற்ற ஒரு கனடியர் ஆவார். பரதநாட்டிய கலைஞராகவும் ஒரு நடன இயக்குநராகவும் திகழ்ந்த இவர் 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் நாள் பிறந்தார்[2]. தெற்காசிய நடனத்தை நிகழ்த்தும் தொழில்முறை நடன நிறுவனமான சம்பிரதாய நடன நிறுவனத்தை இவர் நிறுவினார். இந்நிறுவனத்தின் கலை இயக்குநராகவும் இவரே பணிபுரிந்தார். இந்த நடன நிறுவனம் வட அமெரிக்காவில் உள்ள ஒரே தெற்காசிய நடனப்பயிற்சிப் பள்ளியாகும். இங்கிலாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் நடன ஆசிரியர்கள் சமூகத்துடன் இந்நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது [3][4]. 1990 ஆம் ஆண்டில் லதா ஒரு நடன நிறுவனத்தை நிறுவினார். உலகெங்கிலும் பரதநாட்டிய நடனத்தை ஒரு கலை வடிவமாகக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டு தான் இந்த நிறுவனத்தை நிறுவியதாக லதா கூறியுள்ளார்[5][6]. கனடாவில் தெற்காசிய பாரம்பரிய நடனத்தில் செல்வாக்கு மிக்க ஒரு நபராக லதா இருந்தார் [7].

லதா படா
Lata Pada
(ಲತಾ ಪಾದ)
பிறப்புலதா
7 நவம்பர் 1947 (1947-11-07) (அகவை 76)
மும்பை, இந்தியா
தேசியம்Indian
குடியுரிமைகனடியன்
கல்விகலைமாமணி கல்யாணசுந்தரம் மற்றும் பத்மபூசன் கலாநிதி நாராயணன்
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை எல்பின்சிடோன் கல்லூரி
பணிநடனம், நடன அமைப்பாளர்
அறியப்படுவதுபரதநாட்டியம்
விருதுகள்கனடா ஆணைக்குழுவின் உறுப்பினர் விருது, ராணி இரண்டாம் எலிசபத் வைர விழா பதக்கம்
வலைத்தளம்
www.sampradaya.ca

இளமைக்காலம் தொகு

1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி கல்வியறிவு மிகுந்த ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகளின் மூத்தவராக லதா பிறந்தார் [8]. இராயல் கடற்படையில் இவரது தந்தை ஒரு மின்சார பொறியியலாளராக பணிபுரிந்தார். தாயார் காப்பீட்டு நிர்வாகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இந்திய நடனத்தைத் தொடர விரும்பிய லதா தனது விஞ்ஞானப் படிப்பைக் கைவிட்டார். முதல் கணவர் விசுணு படா, லதாவை கனடாவின் மானிட்டோபா மாகாணத்திலுள்ள தாம்சன் நகரத்திற்கு அழைத்துச் சென்றார். விசுணுபடா அங்குள்ள இங்கோ நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். குடும்ப கடமைகளுடன் தனது சமூக வாழ்க்கை மற்றும் கலைத் தொழிலையும் இணைத்து செயல்பட லதாவுக்கு இந்நகரம் உதவியது. இந்த சுரங்க நகரத்தில் குடியேறிய முதல் இந்திய குடும்பம் இவர்கள் குடும்பமாகும்.

கல்வி தொகு

லதா மும்பையில் உள்ள எல்பின்சுடோன் கல்லூரியில் கல்வி பயின்றார் [9]. பின்னர் கலைமாமணி கல்யாணசுந்தரம் மற்றும் பத்மபூசன் கலாநிதி நாராயணன் ஆகிய குருக்களிடம் நடனம் கற்றார். ஒன்ராறியோவின் டொராண்டோவிற்கு அருகிலுள்ள மிசிசாகாவில் லதா வாழ்ந்தார். இங்கு புவியியலாளர் விசுணு படா 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். 17 ஆம் வயதில் கனடாவில் இவருடைய திருமணம் நடந்தது. லதாவின் கணவர் விசுணு புவியியலில் மெக்கில் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராவார். விசுணு இந்தியாவுக்கு வந்தபோது லதாவைப் பார்க்க நேர்ந்து திருமண பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கனடாவுக்கு வந்த பின்னர் லதா படா ஒரு மகளிர் சங்கத்தில் உறுப்பினராகி பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

இந்தோனேசியாவில் தொகு

லதாவும் அவரது கணவர் விசுணு படாவும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒண்டாரியோவிலுள்ள சட்பறியில் குடியேறுவதற்கு முன்பு இந்தோனேசியாவுக்குச் சென்றனர். தன் கணவர் மற்றும் இரண்டு மகள்களை பார்த்துக்கொள்வதற்காகவும் நடனம் கற்பித்தல் பணியிலும் தனது வாழ்க்கையை லதா அர்ப்பணித்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு வந்து தனது நடன குருவிடம் தவறாமல் நடனப் பயிற்சி பெற்றார். 1985 ஆம் ஆண்டு பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்காக நடனப் பயிற்சி பெறுவதற்காக குடும்பம் வருவதற்கு முன்னதாகவே பயணம் செய்துவந்து லதா நடனப் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். விடுமுறைகாலத்திற்காக இவரது குடும்பம் பின்னர் இந்தியா வந்து இவருடன் இணைந்து கொள்வதாக இருந்தது. ஆனால் இவரது கணவர் மற்றும் மகள்கள் டெல்லிக்கு வருவதற்காக பயணம் மேற்கொண்ட ஏர் இந்தியா விமானம் 182 பயங்கரவாத சதித்திட்டத்தில் விபத்துக்குள்ளாகி குடும்பத்தினர் இறந்தனர். இத்துயரத்தை மறக்க லதா தன் வாழ்வை நடனத்தின் பக்கம் திரும்பினார். இறைவன் எனது கணவரை எடுத்துக் கொண்ட பின்னரும் நான் ஒரு மனைவியாக வாழ்வதா? அவன் என் குழந்தைகளை எடுத்துக் கொண்ட பிறகும் நான் ஒரு தாயாக இருப்பதா? என்ற கேள்விகள் லதாவின் மனதை பெருந்துயரத்தால் எரித்தன. இத்துன்பத்தை மையமாக வைத்து தீயால் வெளிப்படுகிறேன் என்ற ஒரு நடனத்தை உருவாக்கினார். [10]. 1997 ஆம் ஆண்டில் கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தில் நுண்கலைகள் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்[11].

பரதநாட்டிய வாழ்க்கை தொகு

தனது 13 ஆம் வயதில் லதா நடன அரங்கேற்றம் செய்தார். கனடாவுக்கு குடிபெயர்ந்த ஒரு வருடத்தில் 1965 ஆம் ஆண்டில் தனியாக தன் நடன பயணத்தை தொடங்கினார். இந்தோனேசியாவில் வாழ்ந்தபோது இவரது பயணம் பாரம்பரிய நடனத்தை சார்ந்து இருத்தது. ஆனாலும் லட்டா பல ஆண்டுகளாக குறுக்கு-கலாச்சார கழகம் மற்றும் பிற நடனங்களுக்கு தனது நடனத்தை அளித்தார். 1979 ஆம் ஆண்டில் அவர் கனடா திரும்பினார். லதாவின் தனி நடனங்களில் பரத நாட்டியம் ஒரு பாரம்பரிய வடிவத்திலும் சமகால பாணியிலும் இடம்பெற்றது. 1990 ஆம் ஆண்டில், டொராண்டோ, ஒண்டாறியோ, மற்றும் அருகிலுள்ள மிசிசாகாவில் சம்பிரதாய நடன அகாடமியில் லதா சம்பிரதய நடன படைப்புகளை நிறுவினார். சம்பிரதாய நடன நிறுவனத்தில் பாரம்பரிய நடனங்களையும், தனி மற்றும் குழும நடனக் கலைகளையும் நடத்தினார். இந்நிறுவனம் கல்வி மற்றும் சமூக நலன்களிலும் ஈடுபட்டது.

விடுமுறைக்காக இந்தியப் பயணம் தொகு

1985 ஆம் ஆண்டில் லதா படாவும் இவரது குடும்பத்தினரும் இந்தியாவுக்கு ஒரு நீண்ட விடுமுறைக்காக பயணம் செல்ல முடிவு செய்தனர். லதா மட்டும் பரதநாட்டியப் பாடல்களுக்கான நாட்டியம் கற்க முன்னதாகவே இந்தியாவுக்கு புறப்பட்டு வந்தார். கணவரும் குழந்தைகள் ஆர்த்தியும் பிருந்தாவும் பின்னர் வந்து லதாவுடன் இணைந்து கொள்வதாக அவர்களது பயணத்திட்டம் அமைந்திருந்தது. ஆனால் சூன் மாதம் 23 ஆம் தேதி இம்மூவரும் பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் 182 குண்டுவெடிப்பில் சிதறியதில் மூவரும் இறந்தனர். விபத்து தொடர்பாக கனடா அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகள் லதாவுக்கு திருப்தியளிக்கவில்லை.

பெண்களின் அடையாளத்தை மையமாகக் கொண்ட நடனங்கள் தொகு

லதா படாவின் நடன தயாரிப்புகளில் இடம்பெற்ற பல்வேறு கருப்பொருள்களில் பெண்கள் மற்றும் அவர்களின் அடையாளத்தை முன்னிலைப்படுத்தும் இரண்டு தயாரிப்புகள் பாராட்டத்தக்கவையாகும்.

  • திரிவேணி என்ற நடனம் சீதா, திரௌபதி மற்றும் அகல்யா ஆகியோரை மையப்படுத்திய நடனமாகும்.
  • சோகராப் மிராச் என்ற நடனம் தலிபான் ஆட்சியின் கீழ் ஆப்கானிய பெண்களின் அனுபவங்களைப் பற்றியதாகும்.

விருதுகள், பாராட்டுக்கள் தொகு

  • லதா படா கனடா ஆணைக்குழுவின் உறுப்பினராக 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். ஒரு நடன இயக்குனர், ஆசிரியர், நடனக் கலைஞர் மற்றும் கலை இயக்குநராக பாரதநாட்டியத்தின் வளர்ச்சிக்கு இவர் அளித்த பங்களிப்புகளுக்காகவும் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவிற்காகவும் இப்பபதவி இவருக்கு வழங்கப்பட்டது[12] . லதா அண்மையில் டொராண்டோவின் யார்க் பல்கலைக்கழக நடன பட்டப்படிப்பில் ஒரு துணை பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

ஏர் இந்தியா 182 என்ற ஆவணப்படத்தின் நேர்காணல்களில் இவரும் இடம்பெற்றார்[13]

 
மும்பையின் மாதுங்காவிலுள்ள சண்முகாணந்தா அரங்கம்
  • நடனத் துறையில் சிறந்த பங்களிப்புகாக இந்திய அரசாங்கம் லதாவுக்கு பிரவாசி பாரதிய சம்மன் விருதை 2011 ஆம் ஆண்டு வழங்கி சிறப்பித்தது.
  • கனடாவில் இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்ட முதலாவது கலைஞர் லதா படா என்பது சிறப்பாகும்[14][15]
  • கனட அரசின் வரிசை அமைப்பில் தகுதிக்கான இரண்டாவது மிக உயர்ந்த மரியாதை பெற்றவராவார்.

கனடாவில் தெற்காசிய நடனத்தை ஊக்குவிப்பதில் சிறந்து விளங்கியதற்காக, 2012 ஆம் ஆண்டு சூன் 18 ஆம் தேதி லதாவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் வைர விழா பதக்கம் வழங்கப்பட்டது[16].

குருவுக்கு அஞ்சலி தொகு

நாட்டிய குரு சீறீ கல்யாண சுந்தரம் பிள்ளையின் 80 வது பிறந்த நாளை கொண்டாட மும்பையிலுள்ள சண்முகானந்தா மண்டபத்தில் குருவுக்கு அஞ்சலி என்ற மரியாதைக்குரிய விழாவை ராசராசேசுவரி பரத நாட்டிய கலா மந்திர் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் ஆம் தேதி அன்று மாலை 6-30 மணிக்கு ஏற்பாடு செய்தது. ஏற்பாடு செய்த விழாக்குழுவில் லதா படாவும் ஓர் உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள் தொகு

  1. Nartaki, Interview, May, 2001, Lata Pada - Choreographer
  2. "Biography". பார்க்கப்பட்ட நாள் 2009-02-11.
  3. Walker, Susan. "Call it South Asian dance HQ." The Toronto Star. 30 May 2008.
  4. Kopun, Francine. "When the only thing left is hope." The Toronto Star. 25 August 2007.
  5. "“B2” a collaboration between Sampradaya Dance Creations and Ballet Jorgen பரணிடப்பட்டது 2020-05-20 at the வந்தவழி இயந்திரம்." Harbourfront Centre. Retrieved on 10 December 2008.
  6. " Sampradaya Dance Creations பரணிடப்பட்டது 2012-03-04 at the வந்தவழி இயந்திரம்." Canada Council for the Arts. Retrieved on 10 December 2008.
  7. "Daring and innovative." The Telegraph. Retrieved on 10 December 2008.
  8. "Resource guide, By dance reborn-By Keith Garebian". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-06.
  9. "P-196 பரணிடப்பட்டது 2016-08-16 at the வந்தவழி இயந்திரம்." Air India Commission, Government of Canada. 17 September 2007. Retrieved on 24 June 2009.
  10. "'If you take away my children, am I still a-mother'". Archived from the original on 2017-12-08. பார்க்கப்பட்ட நாள் 2020-02-06.
  11. Fields in Motion: Ethnography in the Worlds of Dance, edited by Dena Davida, Revealed by fire-Lata Pada's Narrative of Transformation-Susan Mcnaughton P-381, Chapter 20
  12. "Governor General Announces New Appointments to the Order of Canada". 30 December 2008. Archived from the original on 21 January 2009. பார்க்கப்பட்ட நாள் 1 January 2009.
  13. "Air India 182 Press Kit" (). Air India 182 (film) official website. p. 10/12. Retrieved on 22 October 2014.
  14. New yorku, ' It's a first: South Asian Lata Pada artist receives the Order of Canada published 1 May 2009'
  15. Pravasi Bharatiya Samman
  16. ZOOMERTV, Lata Pada Awarded Queen Elizabeth II Diamond Jubilee Medal, 27 June 2012

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லதா_படா&oldid=3774691" இலிருந்து மீள்விக்கப்பட்டது