லென்சின் விதி

(லென்சு விதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லென்சின் விதி (Lenz's law) தூண்டு மின்னோட்டத்தின் திசையை அறிவதற்குப் பயன்படும் விதியாகும். இது, மின்காந்தத் தூண்டலின் மூலம் தூண்டப்படும் மின்னியக்க விசையின் திசையை வரையறுக்கிறது. இவ்விதி, ஆற்றல் அழிவின்மைத் தத்துவம்யின் அடிப்படையில் உள்ளது. லென்சின் விதி, ஹைன்ரிக் எமில் லென்சு என்ற ஜெர்மானிய இனத்தைச்சேர்ந்த உருசிய இயற்பியலாரால் உருவாக்கப்பட்டது. இவ்விதி இவரின் பெயரினால் 1834 ஆம் ஆண்டு முதல் குறிப்பிடப்படுகிறது.[1]

ஹைன்ரிக் எமில் லென்சு

லென்சு விதியின் கூற்று பின்வருமாறு:

ஒரு மின்சுற்றில் மின்னியக்க விசை தூண்டப்படும் போது, தூண்டப்பட்ட மின்னோட்டம் அதை உண்டாக்கக் காரணமாயிருந்த காந்தப்பாய்வின் மாற்றத்தை எதிர்க்கும் முறையில் அமையும். (அல்லது)
(காந்தப்புல மாற்றத்தினால் ஒரு கம்பிச்சுருளில் உருவாகும்) தூண்டு மின்னோட்டத்தினால் ஏற்படும் காந்தப்புலம், அது உருவாவதற்குக் காரணமாயிருந்த (காந்தப்புல) மாற்றத்தை எதிர்க்கும் விதத்தில் அமையும். (அல்லது)
ஒரு கம்பிச்சுருளில் உருவாகும் தூண்டு மின்னோட்டம், அதை உருவாக்கிய மாற்றம் அல்லது காரணத்தை எதிர்க்கும் வகையில் பாயும்.

வரையறை

தொகு

லென்சின் விதி பரடேயின் விதியின் மூலம் நிறுவப்படும். இரண்டு விதிகளையும் இணைத்தால்,

 

இங்கு,

V தூண்டப்பட்ட மின்னியக்க விசை,
N சுற்றுகளின் எண்ணிக்கை,
Φ சுற்றுடன் தொடர்புடைய மொத்தப் பாயம்
dΦ/dt நேரத்துடனான காந்தப்பாய மாற்றம்.

லென்சின் விதி இங்கு (-) குறியினாற் தரப்படுகிறது.[2]

ஆற்றல் அழிவின்மை விதியிலிருந்து விளக்கம்

தொகு

லென்சு விதி ஆற்றல் அழிவின்மை விதிக்கு (law of conservation of energy) உட்பட்டு உள்ளது.[3] தூண்டல் மின்னியக்க விசை எந்திர ஆற்றலின் விளைவால் தோன்றுகிறது. ஒரு காந்தத்தைக் கம்பிச் சுருளுக்குள் எடுத்துச் செல்லும்போது லென்சின் விதிப்படி, காந்தம் எடுத்துச் செல்லும் விசையின் திசைக்கு எதிர்த் திசையில் ஒரு விசை தோன்றி, காந்தத்தின் மீது வேலை செய்கிறது. இந்த வேலையே மின்னாற்றலாக மாறி மின்னோட்டமாகச் செல்லுகிறது. இந்த மின்னாற்றல் கம்பிச் சுருளில் வெப்பமாக மாறி, மறைகிறது. மாறாக, காந்தத்தை எடுத்துச் செல்லும் விசையின் திசையில் விசை தோன்றியிருப்பதாகக் கொண்டால், இவ்விசை காந்தத்தின் இயக்கத்துக்குத் துணையாக இருந்து, காந்தம் வேகமாக கம்பிச்சுருளை நோக்கி நகர துணை புரியும். அதனால் மின்னோட்டம் முடிவிலியாக வளரும். மேலும் இயக்க ஆற்றலும் மின்னாற்றலும் புறவேலையின்றி தோன்றுவதாக அமையும்; ஆனால் இது நடைபெறமுடியாத ஒரு நிகழ்வு என்பதால் தூண்டல் மின்னோட்டம் அதைத் தோற்றுவிக்கும் செயலை எதிர்க்கும் திசையில் இருக்கும் என்பது உண்மையாகிறது.

நுட்பியற் சொற்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Lenz, E. (1834), "Ueber die Bestimmung der Richtung der durch elektodynamische Vertheilung erregten galvanischen Ströme", Annalen der Physik und Chemie, 107 (31), pp. 483–494. A partial translation of the paper is available in Magie, W. M. (1963), A Source Book in Physics, Harvard: Cambridge MA, pp. 511–513.
  2. Giancoli, Douglas C. (1998). Physics: principles with applications (5th ed.). pp. 624.
  3. Schmitt, Ron. Electromagnetics explained. 2002. Retrieved 16 July 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லென்சின்_விதி&oldid=3923941" இலிருந்து மீள்விக்கப்பட்டது