ழ கணினி (Zha Kanini) 2003-06 ஆண்டுக்காலங்களில் முழுமையான தமிழ் இடைமுகப்புடனான கணினி ஒன்றினைத் தமிழ்ச்சமுதாயத்துக்கு ஆக்கியளிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ஓர் செயற்றிட்டமாகும். ழ கணினியின் இலக்காக குனூ/லினக்ஸ் இயங்குதளத்தை முடிந்தவரைத் தமிழ்ப்படுத்துவதாக இருந்தது. ழ கணினிக் குழுமம் இச்செயற்றிட்டத்தினை முன்னெடுத்துச்சென்றது. இதன் முதற்கட்ட அறிமுக நிகழ்ச்சி பெப்ரவரி 1, 2004இல் நிகழ்ந்தது.[1] போதிய வணிக வாய்ப்புகள் இன்றி இதனை பரவலாக்க இயலவில்லை.

திட்டம்

தொகு

தமிழுக்கென்று தனிச்சிறப்பு மிக்க எழுத்தாக உள்ள என்ற எழுத்தையும் கணினி என்ற சொல்லையும் இணைத்து இத்திட்டத்திற்கு ழ-கணினி என்று பெயரிடப்பட்டது. இதற்கான குழுமத்தின் உறுப்பினர்களாக மா. சிவக்குமார், ஜெயராதா நடராஜன், சி.கே. சாந்தகுமார் மற்றும் கே. எம் லீனா ஆகியோருடன் எழுத்தாளர் சுஜாதா இணைந்து செயல்பட்டார். கேடிஈ சூழலில் உள்ள ஆங்கிலச் சொற்றொடர்களைத் தமிழாக்க மற்ற உறுப்பினர்களுக்கு துணை நின்றதுடன், அதற்காக தன்னார்வலர்களை ஓரிடத்தில் சேர்த்து அவர்களை வழி நடத்துவது, இம்முயற்சியில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பது என்று சுஜாதா திட்டத்திற்கு ஊக்கமளித்தார். தனது எழுத்துலக செல்வாக்கைக் கொண்டு தான் எழுதும் கட்டுரைகளில் ழ-கணினித் திட்டம் பற்றிப் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி வந்தார்.

சுஜாதா ஆனந்த விகடனில் ஞாயிறுதோறும் மொழிபெயர்க்க விடுத்த வேண்டுகோளுக்கிணங்க 45 தன்னார்வலர்கள் ஒருசேர பங்களிக்க முன்வந்தனர். சயராதா தாம் பணியாற்றிய டிஷ்நெட் டிஎஸ்எல் நிறுவனத்தின் உலாவுமையமொன்றில் 20 கணினிகளை இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்[2]. எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி, இலயோலாக் கல்லூரி மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்காற்றினர்.[2] ஆறு மாதங்களில் 100,000 சொற்றொடர்கள் தமிழாக்கப்பட்டன.பெப்ரவரி 1,2004இல் ஓப்பன் ஆபிஸ், கேடிஈ, மற்றும் தமிழ் விசைப் பலகை அடங்கிய முதல் குறுந்தட்டு வெளியானது.

தமிழ் திறந்த நிரல் இயக்கம்

தொகு

உலகில் உள்ள அத்தனை இலவச மென்பொருள்களையும் தமிழில் தரவேண்டும் என்ற நோக்குடன் 1997களில் தமிழ் திறந்த நிரல் இயக்கம் உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களின் முயற்சியால் துவங்கியது. இவர்களில் தமிழ் லினக்சு யாகூ மடற்குழுமத்தில் பரணிடப்பட்டது 2006-07-08 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர்களாக இருந்து கேடியி வசீகரன் குழுவினர், ஜீனோம் தினேஷ் நடராஜன் குழுவினர், சிவராஜ் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர் முக்கியப் பங்காற்றினர். இவர்களது முயற்சியால் தமிழ் லினக்ஸ் துவங்கியது. இதன் தொடர்ச்சியே ழ கணினித் திட்டமாக அமைந்தது.

இந்த மடற்குழு உரையாடல்களில் தன்னார்வலர்களின் பலமணி நேர உழைப்பை சுஜாதாவை முன்னிறுத்துவதால் ழ கணினிக் குழு பின்னுக்குத் தள்ளுவதாக வெங்கட் குற்றம் சாட்டினார்.[3] தொடர்ந்து நடந்த விவாதங்கள் மற்றும் முக்கியமானவர்களின் பணி இடமாற்றம் காரணமாக இத்திட்டப்பணி சுணங்கியது. இருப்பினும் ஜெயராதா நடராஜன் போன்றோரின் தொடர்ந்த முயற்சியில் இந்திய மொழிகளிலேயே அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட கேடீஈ இடைமுகமாக தமிழ் விளங்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "ழ கணினி அறிமுகம் - 1". பெப்ரவரி 2, 2004. பத்ரி சேஷாத்ரி. பார்க்கப்பட்ட நாள் சூலை 24, 2012.
  2. 2.0 2.1 "Zha-Kanini". திசம்பர் 17, 2009. அன்டனி. பார்க்கப்பட்ட நாள் சூலை 24, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "கணிப் பொருள்: ழ கணினி". 13 ஆகஸ்ட், 2010. கணிப் பொருள் வலைப்பதிவு - மா. சிவகுமார். பார்க்கப்பட்ட நாள் சூலை 24, 2012.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ழ_கணினி&oldid=3931786" இலிருந்து மீள்விக்கப்பட்டது