வங்காலை மத்திய மகா வித்தியாலயம்

வங்காலை மத்திய மகா வித்தியாலயம் 1900 இற்கு முற்பட்ட காலத்தில் கத்தோலிக்கக் கலவன் என்ற பெயரில் மிகச்சொற்ப மாணவர்களைக் கொண்டு ஒரு குடிசையில் ஆரம்பிக்கப்பட்டது ஒரு பள்ளியாகும். இதில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டது. ஏடும் எழுத்தாணியும் இவர்கள் கல்வி கற்கும் கருவிகளாகும். திண்ணைப் பாடசாலைகளில் கல்வி வளர்த்த தலைமை ஆசிரியர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சூசைப்பிள்ளை அவர்களும் அதனைத் தொடர்ந்து பண்டிதர் கபிரியேற்பிள்ளை வாத்தியாரும் மிகச் சிறப்பாக கல்விக்கு வித்திட்டுள்ளனர். பண்டிதர் கபிரியேற்பிள்ளையோடு சேர்ந்து வந்காலையின் முதல் ஆசிரியப் பெண்மணியான சலோமையா. லீனா அவர்களும் நீண்ட காலமாக நற்சேவையாற்றி வந்துள்ளனர்.

1931 ஆண்டில் எஸ்.பர்ணபாஸ் குலாஸ், 226 மாணவர்களையும் நான்கு ஆசிரியர்களையும் அரைப்பகுதி கற்சுவரால் ஆன கட்டிடத்தில் இப்பாடசாலையை இயக்கி வந்துள்ளார்.

இவர் 1963 ம் ஆண்டு வரையான கூடிய காத்திற்கு வங்காலைக் கல்விப்பணிக்கு தன்னை அர்ப்பணித்துள்ளார். ௦01.05.1935 வரை வங்காலை கத்தோலிக்க பாடசாலையானது வங்காலை ஆண்கள் பாடசாலை, வங்காலை கிறீஸ்து இராசா கன்னியர் பாடசாலை எனப் பிரிக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது. அருட்தந்தை சூசைதாசன் நல்லையா அடிகளாரின் வேண்டுகோளின் படி 1935ல் திருக்குடும்ப கன்னியர்கள் எமது பங்கிற்கு வந்து கல்விப்பணியில் ஈடுபட்டனர்.இதன் பின்பு கிறீஸ்து இராசா கன்னியர் பாடசாலையை இவர்கள் பொறுப்பேற்று நடாத்தினார்கள்.

ஆண்கள் பாடசாலையானது புனித ஆனாள் பாடசாலையாக மாற்றப்பட்டது.1944ல் நடைபெற்ற 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் ஆண் பெண் இருபாலரிலும் இருந்து ஆறு மாணவர்கள் திறமை சித்தி பெற்று எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரிக்கு அரச செலவில் கல்வி கற்க தெரிவாகினர். ஆயினும் அப்போதிருந்த மதத் தடை காரணமாக அவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப் படவில்லை.பின்னர் இத் தடை நீக்கப்பட்டதால் தொடர்ந்து பல ஆண்டுகள் இப் புலமைப் பரிசில் பெறும் மாணவர்கள் உயர் கல்வி கற்கும் வாய்ப்பினை எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயத்திலும், புனித சவேரியார் கல்லூரியிலும் பெற்றனர். ஏனெனில் 1960ம் ஆண்டு வரை எமது பாடசாலை ஓர் உதவி நன்கொடை பெறும் ஆரம்ப பாடசாலையாகவே ஆங்கில பாதிரியாராலும் யாழ் மேற்றிராசனத்தாலும் வளர்த்து வரப்பட்டது.

பின்னர் 1960ல் இலங்கை அரசினால் இவ்வகைப் பாடசாலைகளை அரசுடமையாக்கி முகாமையை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடு பூராகவும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்த வகையில் வங்காலைப் பாடசாலையும் அரசுடமையாக்க எடுத்த முயற்சிக்கு ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்புக் காட்டப்பட்டது. இதற்கான நியாயங்களும் எடுத்து முன்வைக்கப்பட்டது. ஆயினும் அரசு தனது நிலையில் இருந்து சற்றும் தளராது கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி சில உறுதி மொழிகளை வழங்கியது. 1960 மார்கழி மாதத்தில் இலங்கை அரசினால் அங்கிகரிக்கப்பட்ட பாடசாலையாக மாறியது.ஆயினும் பாடசாலை தரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஈழத்தின் பல பாகங்களிலும் மகாவித்தியாலயங்களும் மத்திய வித்தியாலயங்களும் உருவாகி கொண்டிருந்த வேளையில் இந்த பாடசாலை அதே தரத்தில் காணப்பட்டமையானது பெற்றோர் மற்றும் பெரியோர் மத்தியில் கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதனால் இக் காலப் பகுதியில் கிராமசபைத்தலைவர் உ. சம்சோன்.மிராண்டா அவர்கள் தலைமையில் அதிபர் திருச்செல்வம் அவர்களின் நெறிபடுத்ததாலும் முன்னார் அதிபர்கள் தொ.மக்சிமஸ்.லெம்பேட் திரு.பி. சவிரியான் லெம்பேட், மற்றும் சீ. ஞானப்பிரகாசம். லெம்பேட், ப. அபியாஸ். சோசை செ. இம்மனுவேல்.குரூஸ் ஆகியோர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.யு.அழகக்கோன் அவர்கள் அனுசரனையுடன் அன்றைய கல்விப்பணிப்பாளர் நாயகத்தைச் சந்தித்து கலந்துரையாடி இந்த பாடசாலையை தரமுயர்த்த முயற்சித்தனர். இம் முயற்சி 1968.01.05 ல் வெற்றியளித்தது. 1974.07.31 வரை எஸ். அதிரியான்.மார்க் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றிருந்தார். இவரது காலத்தில் 1972.06.12.இல் கல்வியமைச்சின் மேலதிக நிரந்தர செயலாளர் மு.ர்.ஆ. சுமதிபால அவர்களால் சம்பிரதாய பூர்வமாக உயர்தர கலைப்பிரிவு புனித ஆனாள் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது. இம் மாணவர்கள் 1975 ல் பல்கலைக்கழகம் சென்று எமது பாடசாலையின் பெயரைத் தடம் பதித்தனர். அதன் பின்னர் 1978.05.02 வரை எஸ்.சூசையப்புபீரிஸ் அவர்களும் அவர்களைதொடர்ந்துமுன்னாள் மன்னார் கல்வி பணிப்பாளர் எஸ். வேதநாயகம் அவர்களும் கல்விப்பணியை மேற்கொண்டு நடத்தினர். இதனை தொடர்ந்து தொ.மக்சிமஸ் அதிபராக பாடசாலையை பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரைக் காலமும் தனித்து இயங்கி வந்த பாடசாலைகளான புனித ஆனாள் ஆண்கள் பாடசாலையையும் வங்காலை கிறிஸ்து இராசா பெண்கள் பாடசாலையையும் 1981.10.01 முதல் புனித ஆனாள் மகாவித்தியாலயம் என்ற பெயரில் ஒன்றினைந்து இயங்கத் தொடங்கியது. ஆலயப்பகுதியில் காணப்பட்ட இப் பாடசாலை தற்போது காணப்படும் புதிய இடத்திற்கு மாற்றம் பெறுவதற்கான சிந்தனை துளிர்க்கத் தொடங்கியது. இதன் பயனாக திரு.தொ.மக்சிமஸ்.லெம்பேட் அவர்களின் அயராத முயற்சியால் அப்போதைய அமைச்சர் செ.இராஜதுரை அவர்களது முன்னாள் மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் பி.சூசைதாசன்.சோசை ஆகியோரின் பரிந்துரையாலும் நாம் தற்போது காணும் 100’ஒ 20’ கொண்ட முதலாவது மாடிக்கட்டிடத் தொகுதிக்கான அரச நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றது. இதற்கான அடிக்கல் அன்றைய வீடமைப்பு அமைச்சர் ஜனாப் எம்.எச்.முகம்மது அவர்களால் நாட்டப்பட்டது.

சதுப்பு நிலமாகக் காணப்பட்ட இப்பகுதியின் ஒரு பகுதியில் தனியார் குடிமனை காணப்பட்டமையினால் இதனை அப்புறப்படுத்தி முழுப்பரப்பையும் பாடசாலைக்கு எடுக்கும் திட்டத்தில் குடியிருப்பாளருக்கு (மாசில்லா குரூஸிற்கு) ; நஷ்ட ஈடும் வேறுக் காணியும் வழங்கப் பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. புதிய மேல்மாடி அமைக்கும் திட்டத்திற்கான நிதி பற்றாக்குறையாக காணப்பட்டமையினால் ஆலய நிதியின் மூலம் அத்திவாரமும், ஊர் மக்கள் சிரமதான பணி மூலமும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டன. இவ் வேலையின் அன்றைய ஆலய சபையாரும் பங்குத்தந்தை அருட் மேரிபஸ்ரியான் அவர்களும் முன்னின்று உழைத்தனர். அத்துடன் பங்கு இளைஞர்கள் ஊர் பெரியோர்கள் யாவரும் அயராது பாடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவரது பணியை தொடர்ந்து அதிபர் எப். சவிரியான்.லெம்பேட் அவர்கள் எமது பாடசாலையின் கல்விப்பணியை 1984.05.18 வரை வெற்றிகரமாக கொண்டு நடாத்தினர். இக் காலப்பகுதியில் டிலாசால் சபை அருட்சகோதரர் கிறிஸ்ரி டோரஸ் தமது கல்விப்பணியை எமது பாடசாலையில் ஆற்றி வந்தார். இவரைத் தொடர்ந்து 1985.06.01 வரையும் உவில்பிரட்.சோசை அவர்கள் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு பொறுப்பேற்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து 1987.01.25 வரை ஏ.ஒஸ்பிஸ்.குருஸ் அவர்கள் பாடசாலையின் கல்விப்பணியை பொறுப்பேற்று மேற்கொண்டிருந்தார். இவரது காலத்தில் பாடசாலையில் வணிகப்பிரிவும் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டு உயர்தரப் பிரிவு மேலும் விரிவாக்கப்பட்டது.

இம் மாணவர்கள் 1987 ல் முதல்தடவையாக வணிகத்துறையில் தோற்றி பல்கலைக்கழகம் சென்று வணிகத்துறையிலும் இந்தபாடசாலையின் பெயரை நிலைநிறுத்தினர். அத்துடன் அரசாங்கத்தின் கல்வி மறுசீரமைப்பு கொள்கையில் வளப்பயன்பாட்டினை உச்சமாக பயன்படுத்ததக்க வகையில் கொத்தணிப் பாடசாலை முறை ஆரம்பிக்கப்பட்டது. இக் கொத்தணிப் பாடசாலையின் மையப் பாடசாலையாக எமது பாடசாலையும் அதன் முதல் அதிபராக ஏ.ஒஸ்பிஸ்.குருஸ் அவர்களும் செயற்பட்டார். இவரது காலத்தில் புதிய பாடசாலைவளாகத்தில் விஞ்ஞான ஆய்வு கூடத்துக்கான 80’ஒ20’ கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பாடசாலையின் பௌதீக வளம் விரிவாக்கப்பட்டது.

1987.01.25 ஏ.ஒஸ்பிஸ் குருஸ் அவர்கள் இளைப்பாறியதைத் தொடர்ந்து பிரதி அதிபர் சி. திபூசியஸ். பீரிஸ் அவர்களால் பாடசாலை பொறுப்பேற்று நடாத்தப்பட்ட போது, இந்த மகாவித்தியாலயம் புதிய இடத்திற்கு 1987.05.07 ல் சம்பிராயபூர்வமாக மாற்றப்பட்டது. 1988.01.02 இலிருந்து புதிய அதிபராக எஸ்.செபமாலை அவர்கள் பொறுப்பேற்றதுடன் கொத்தணி அதிபராகவும் திறமையாக செயற்பட்டார். இக் காலத்தில் எமது பாடசாலை விளையாட்டு,கல்விச செயற்பாடுகளில் முன்னேற்றமடைந்து வந்தது. இவர் 1990.05.15 இல் இடமாற்றம் பெற்றதைத் தொடர்ந்து பி.எமில்.குலாஸ் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இக்காலப்பகுதியில் உள்நாட்டு யுத்தம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டமையால் எமது கிராமத்தில் உள்ள மக்கள் இந்தியா, மடு, மன்னார்த் தீவு ஆகிய பகுதிகளில் இடம் பெயர்ந்தனர். பாடசாலையும் இங்கு இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தற்காலிகமாக இப்பாடசாலை 1991.01.09 முதல் மன்.தாழ்வுபாடு றோ.க.த.க. பாடசாலையில் சிறிது காலம் இயங்கியது.

பின்னர் சனிவிலேஜ் பகுதியில் ஓலைக் கொட்டகையில் தனியாக இயங்கத் தொடங்கியது. கல்வியைக் கண்ணாகக் காத்து வந்த எம் மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் 1992.08.22 அன்று இரவு பாடசாலைக் கொட்டகைக்கு இனம் தெரியாத நபர்களால் தீ இட்டுக் கொழுத்தப்பட்டது. இச்செயலானது எமது கல்வியின் ஆர்வத்தை மேலும் அதிகரித்ததுடன் எமது மண்ணிற்கு மீண்டும் வர வேண்டும் என்ற தணியாத தாகத்தை ஏற்படுத்தியது.இதன் விளைவாக 1993.01.25 ல் அதிபர் பி.எமில்.குலாஸ் அவர்களின் தலைமையில் மீளவும் கல்வி நடவடிக்கை எமது தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் உயர் தர விஞ்ஞான பிரிவும் ஆரமபி;க்கப்பட்டு உயர்தரபிரிவின் சகல துறைகளையும் கொண்ட பாடசாலையாக திகழ்ந்தது.இவரது காலத்தில் 90’ஒ 25’ கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1994.07.11 ல் இவரின் இடமாற்றத்தினை தொடர்ந்து எஸ்.சூசையப்பு லெம்பேட் அவர்கள் பாடசாலையின் அதிபராக கல்விப்பணியாற்றியிருந்தார்.இவரது காலத்தில் 1994.09.23 மன்.புனித.ஆனாள் மகாவித்தியாலயம்,மன்.புனித.ஆனாள் மத்திய மகாவித்தியாலயம் ஆக தரமுயர்த்தப்பட்டது.

1995.07.25 ல் இவர் இடமாற்றப்பட்டதை தொடர்ந்து 1995.08.01 ல் ஆ.பங்கிராஸ்.சோசை அவர்கள் பொறுப்பேற்றார். இவரது காலத்தில் 1995ல் உயர் தர பரீட்சைக்கு விஞ்ஞான, கணித பிரிவுகளில் தோற்றி பல்கலைக்கழக மருத்துவ துறைக்கும், பொறியியல் துறைக்கும் மாணவர்கள் முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டு எமது பாடசாலையின் பெயரை நிலைநிறுத்தி வெற்றி; கொண்டனர். இவரது பணிக்காலத்தில் 1997.10.06ல் ரஜனி ஆரோக்கியநாயகம் அவர்கள் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டு சிறந்த பணிகளை ஆற்றியிருந்தார். புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையும் இவர் பெறுகின்றார்.இவர் இடமாற்றம் பெற்றதும் தொடர்ந்து ஆ.பங்கிராஸ்.சோசை அவர்கள் அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரசாங்கத்தின் புதிய சீர்திருத்தத்திற்கு அமைய 1999.02.01 ல் எமது மத்திய மகாவித்தியாலயம் சிரேஷ்ட,கனிஷ்ட பாடசாலையாக பிரிக்கப்பட்டு ஓரே வளாகத்தில் இயங்கியது. இக்காலத்திpல் கனிஷ்ட பாடசாலை அதிபராக திரு.சூ.றெமிஜியஸ் பீரிஸ் அவர்களும் சிரேஷ்ட பாடசாலைக்கு ஆ.பங்கிராஸ்.சோசை அவர்களும் பொறுப்பேற்றிருந்தனர். திரு.ஆ.பங்கிராஸ் சோசை அவர்கள் சிரேஷ்ர பாடசாலையில் இருந்து 2000.06.05 ல் இளைப்பாறிய போது பிரதி அதிபராக இருந்த டிலாசால் சபை அருட்சகோதரர் ச.இ.றெஜினோல்ட் அவர்கள் பாடசாலைப் பொறுப்பை ஏற்றார். இவரது காலத்தில் எமது பாடசாலையின் அதிபர் அலுவலகம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு திருத்தப்பட்டது. தொடர்ந்து எஸ்.றெமிஜியஸ் அவர்கள் சிரேஷ்ர பாடசாலைக்கு அதிபராகவும், திரு.கி.மரியான்.கூஞ்ஞ அவர்கள் கனிஷ்ர பாடசாலைக்கு அதிபராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். கி.மரியான்.கூஞ்ஞ அவர்கள் காலத்தில் 100’ஒ 20’ கொண்ட மேல்மாடித் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அரசாங்க சுற்றறிக்கைக்கு அமைய 2002.06.01ல் சிரேஷ்ட, கனிஷ்ட பாடசாலைகள் ஒன்றிணைக்கப்பட்டு கி.றெமிஜியஸ்.பீரிஸ் அவர்கள் அதிபராக தொடர்ந்து செயற்பட கி.மரியான்.கூஞ்ஞ அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றார். எஸ். றெமிஜியஸ்.பிரீஸ் அவர்கள் 2002.05.19ல் இடமாற்றம் பெற்றதைத் தொடர்ந்து 2002.05.29 ல் இருந்து சி.திபூசியஸ்.பிரீஸ் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றார்.

பின்னர் மன்னார் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப்பணிப்பாளராகக் கடமை புரிந்த எல்.மாலினி வெனிற்றன் எமது பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது காலத்தில் குடிநீர் வசதி,மலசலக்கூட தொகுதி ஆகிய பாடசாலையின் அடிப்படைத்தேவைகள் யுனிசெவ் நிறுவன உதவியுடன் ஓரளவு பூரணப்படுத்தப்பட்டது. அத்துடன் நெக்கோட் நிறுவன உதவியுடன் நவீன நூலகத்தொகுதியும் மூன்று வகுப்பறைத் தொகுதியும் கொண்ட புதிய கட்டிடம் 2004.01.18 ல் வடக்கு கிழக்கு மாகாண நெக்கோட் நிறுவன பணிப்பாளருமாகிய எஸ்.மரியதாசன்.குரூஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 2005ல் திறந்து வைக்கப்பட்டது.1998,1999 ம் ஆண்டு உயர்தர மாணவர்களால் சேகர்க்கப்பட்ட நிதியைக் கொண்டு முன்புற நுழைவாயில் வளையி அமைக்கப்பட்டு 2004.01.18 ல் திறந்து வைக்கப்பட்டது.சம காலங்களில் மன்னார் மாவட்டம் மன்னார்,மடு என்ற இருகல்வி வலயங்களாக பிரிக்கப்பட்டு மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளராக எம்.ஆபேல். றெவ்வல் அவர்களும்,மடு வலயக்கல்விப் பணிப்பாளராக ஏ.திபூசியஸ்.குரூஸ் அவர்களும் கடமையாற்றினர். அவர்கள் இருவரும் எமது கிராமத்தைப் பிறப்பிடமாக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது பாடசாலையின் கல்வி வரலாறு பல நூற்றாண்டிற்கும் மேற்பட்டதாகும். இக் காலத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர்களும்,பிற இடத்து ஆசிரியர்களும் எமது கிராமத்தை சேர்ந்த ஆசிரியர்களும் கல்வித் தூண்களாக நின்று தமது அளப்பரிய அர்ப்பண சேவையை எமக்கு அளித்துள்ளார்கள். குறிப்பாக திருக்குடும்ப கன்னியர் சபையைச் சார்ந்த அருட்சகோதரிகளான மொனிக்கா, யான்மேரி, இமல்டா, கொன்ஸ்சப்ரா பசில், வலன்ரைன், கொன்சன்ரைன், சென்போல், அன்று அனற், கில்டாகாட், எவரஸ்டா, பிபியானா, அவர்களையும் எமது கல்வி சமூகம் நினைவு கூறுகின்றது.

இக்காலத்தில் பல அரச உயர் அதிகாரிகள்,கல்வி உயர்அதிகாரிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், பொறியியலாளர்கள், தொழில் நிர்வாகமானிகள், சட்டவாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அரச அலுவலகர்கள்,சமயத்தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், அரசியல் வாதிகள், சமூக அலுவலர்கள் என பலரை உருவாக்கிய தனது கம்பீரமான தோற்றத்துடன் நிமிர்ந்து நிற்கின்றது.

உசாத்துணை நூல்கள்

தொகு
  • நெய்தல் நில மன்னர்கள், கலாநிதி ஏ.எஸ்.சோசை, விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம், சிறப்பு மலர்: புனித ஆனாள் ஆலயம் - வங்காலை.
  • கலாநிதி ப.புஸ்பரட்ணம் (2003), பண்டைய இலங்கையில் பரதவர் சமூகம், சில தொல்லியல் சான்றுகள், தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, (யாழ் பல்கலைக்கழகம்).
  • Nguhrpupah; K.K.Pillay (1975): A Social History of the Tamils (Madras University)

வங்காலை.com www.voiceofmannar.com பரணிடப்பட்டது 2018-11-14 at the வந்தவழி இயந்திரம்