வச்சநாவிக் குடும்பம்

வச்சநாவிக் குடும்பம் (தாவரவியல் பெயர்: Ranunculaceae, இரனன்குலேசியே[1]) இரட்டைவிதையிலைத் தாவரக் குடும்பமாகும். இது 700க்கும் மேற்பட்ட இனங்களைக் கொண்டது. மிதவெப்ப மண்டலத்திலே, முக்கியமாக வடகேரளத்தின் நெடுகிலும் பரவியுள்ளது. இந்தியாவிலே பெரும்பாலும் இமயத்திலே காணப்படுகிறது. இக்குடும்பத்துச் செடிகள் பெரும்பாலும் பலபருவச் சிறுசெடிகள். சில ஒரு பருவம் வாழ்வன. மிகச் சில செடிகளும் கொடிகளும், இரண்டொரு சிறு மரமும் உண்டு.

வேர்

தொகு

விதை முளைக்கும்போது உண்டாகும் முதல் வேராகிய ஆணி வேர் மிக விரைவில் பட்டுப்போகும். பிறகு தண்டிலிருந்து இடம் மாறியுண்டாகும் ஒட்டுவேர்கள் வளரும். பல செடிகளிலே இந்த ஒட்டுவேர்களில் செடிக்கு வேண்டிய உணவுப்பொருள்கள் சேகரிக்கப்பட்டு, அவை கிழங்கு வடிவில் இருக்கும்.

தண்டு

தொகு

பெரும்பாலானவற்றுள் தரைக்குக் கீழே மட்டத்தண்டு உண்டாகும். இது இணைத்தண்டு வகையினது. தண்டின் நுனிக் குருத்து ஓராண்டில் தரைக்குமேல் பூக்கொத்தாக வளர்ந்து கனியுண்டான பிறகு மடிந்துவிடும். அடுத்த ஆண்டில் தரைக்கீழ்த் தண்டின் நுனியருகிலிருக்கும் ஓர் இலையின் கக்கத்திலிருந்து ஒரு குருத்துப் புதிய தண்டாக முன்னுக்கு வளர்ந்து, அது தன் முறையில் பூத்தண்டாக வளர்ந்து முடிவடையும். இவ்வாறு தரையின் கீழே வளர்ந்து செல்லும் தண்டு பல குருத்துக்களின் வளர்ச்சியில் அமைவதாகும் தரைக் கீழ்த்தண்டு பெரும்பாலானவற்றுள் மிகக் குட்டையாக வேரின் அடியில் நெருங்கி வளர்ந்து நின்று வேரோடு வேராகக் காணும். இவ்வித வேரின் அடியிலுள்ள குட்டைத்தண்டு வேர்த்தண்டு எனப்படும். இது பல பருவங்களுக்கு நிலைத்திருக்கும். இதனின்றும் புதிய தண்டுக்கிளைகள் தரைக்குமேல் வளர்ந்து இலைகளையும் பூக்களையும் கொண்டு நிற்கும்.

பெரும்பாலானவற்றுள் இலைகள் மாற்றொழுங்கில் பொருந்தியிருக்கும். சிலவற்றில் எதிரொழுங்கில் இருப்பதுண்டு. சிறுசெடிகள் பலவற்றுள் இலைகள் அடித்தண்டிலைகளாக அடுக்கியிருக்கும். பெரும்பாலானவற்றுள் இலைகள் பல பிரிவுகள் உள்ள தனியிலைகளாகவும் சிற்றிலைகள் உள்ள கூட்டிலைகளாகவும் இருக்கும். சிலவற்றுள் பிரிவில்லாத முழு இலையாக இருக்கும். க்ளெமாட்டிஸ் என்னும் ஒரு சாதி இலைகள் முழு இலைகளாக இருப்பதோடு, அவற்றின் காம்பு நீண்டு பற்றுக்கம்பி போல வேறு ஆதாரங்களுக்குச் சுற்றிக்கொண்டு கொடி மேலே ஏறிப்படர்வதற்கு உதவும்.

பூக்கள் சிலவற்றுள் தண்டின் நுனியில் தனிப்பூக்களாக இருக்கும். சிலவற்றுள் சைம் என்னும் வளராநுனி மஞ்சரிகளாக இருக்கும். பூக்கள் ஒழுங்கான அமைப்புள்ளவை. பூக்காம்பின் முனையாகிய ஆதானம் சிறிதளவோ, பெரிதளவோ நீண்டிருக்கும். அதன்மேல் பூவின் உறுப்புக்கள் வளர்ந்திருக்கும். சிலவற்றில் இவ்வுறுப்புக்கள் திருகலாக அமைந்திருக்கும். சிலவற்றுள் இவை வட்டங்களாக இருக்கும். பலவற்றில் பூக்கள் ஒழுங்கானவை இருபாலின. சூலகம் மேலும் மற்ற உறுப்புக்கள் சூலகம் கீழும் அமைந்திருக்கும்.

இதழ்கள்

தொகு

சிலவற்றில் பல இதழ்கள் திருகலாகப் பொருந்தியிருக்கும். அவையெல்லாம் அகவிதழ்போலப் பெரியனவாகவும் நிறமுள்ளவையாகவும் வளர்ந்திருக்கும். சிலவற்றில் புறவிதழ் வட்டமும் அகவிதழ் வட்டமும் காணப்படும். அகவிதழ் வட்டத்திற்கு மேலேயும் கேசரங்களுக்குக் கீழேயும் உள்ள இடத்திலே பூந்தேன் சுரப்பிகள் வளர்ந்திருக்கும். இவை அகவிதழ்களின் மாறுபாடுகள் எனக் கருதப்படும்.

சூலகம்

தொகு

சூலிலைகள் பல இருக்கும். அவை தனித் தனியாகச் சூலகம் பிரிந்த நிலையில் ஆதானத்தின் மேல் வளர்ந்திருக்கும். ஒவ்வொரு சூலிலைக் குள்ளும் அடியினின்று வளரும் ஒரே சூல் இருக்கும் அல்லது சூலறை உண்டாவதற்குச் சூலிலையின் விளிம்புகள் இரண்டும் கூடும் அடிப்புறமாகிய கீழ்விளிம்புச் சேர்க்கைக்குப் பல சூல்கள் இரண்டு வரிசைகளில் பொருந்தியிருக்கும். சிலவற்றிலே சூலிலைகள் இணைந்து இருப்பதும் உண்டு.

பெரும்பாலானவற்றுள் கனி அக்கீன் என்னும் ஒரு விதையுள்ள வெடியாத உலர்கனியாக இருக்கும். சிலவற்றுள் ஒவ்வொரு தனிச் சூலிலையும் ஒரு முண்டு(பாலிக்கிள்) என்னும் கீழ்விளிம்பிலே வெடிக்கும் உலர் கனியாக இருப்பதுண்டு. மேலும் சிலவற்றுள் இவை சதைக்கனிகளாக வளரும். சிலவற்றுள் இணை சூலக, வெடிகனி ஆக இருக்கும்.

விதைகள்

தொகு

இவைகள் சிறியவை. அவற்றுள் கரு மிகச்சிறியது. முளைசூழ்தசை மிகுதியாக இருக்கும். அதில் எண்ணெய்ப்பொருள் இருப்பதுண்டு. இந்தக் குடும்பத்துச் செடிகளில் பலவற்றிற்கு அழகான பூக்கள் உண்டு. கேசரங்கள் முன்முதிர்வன இவை பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கையுறுவன. பல செடிகளின் வேர்கள் மிக நஞ்சுள்ளவை. பல செடிகள் மருந்தாகப் பயன்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வச்சநாவிக்_குடும்பம்&oldid=3920687" இலிருந்து மீள்விக்கப்பட்டது