வடுகநம்பி (VadugaNambi) வைணவ ஆச்சாரியனான இராமாநுசரின் முதன்மை மாணாக்கரில் ஒருவர். கர்நாடகத்தின் மைசூரில் உள்ள சாலகிராமம் என்னும் ஊரில் சித்திரை மாதம், அஸ்வினி நட்சத்திரத்தில் ஆந்திரபூரணர் என்னும் இயற்பெயரோடு பிறந்தவர். தன் குருவாகிய இராமானுசர் மீது கொண்ட அளவில்லா குருபக்திக்காக இவர் பெரிதும் புகழப்பெறுகிறார்.[1]

வடுகநம்பி
பிறப்புஆந்திரபூரணர்
சாலகிராமம், கர்நாடகம்
இறப்புசாலகிராமம், கர்நாடகம்
மற்ற பெயர்கள்வடுகநம்பி

குரு பக்தி தொகு

கிருமிக்கண்ட சோழன் காலத்தில் வைணவர்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையில், கர்நாடகத்தின் திருநாராயணபுரத்திற்கு (தற்போதைய மேல்கோட்டை) வருகைப்புரிந்த இராமானுசர் அருகிலிருக்கும் மிதிலாபுரி சாலகிராமம் (தற்போதைய தொண்டனூர்) எனும் சிற்றூருக்கும் தன் சீடர் குழாத்தோடு வருகைப்புரிந்தார். இராமானுசர் முதலியாண்டான் திருவடி மூலம் தொண்டனூர் ஏரியை புனிதப்படுத்திய வைபவத்தை கேள்வியுற்ற வடுகநம்பி இராமானுசரையும் தன் திருவடிகளால் அவ்வேரியை மேலும் புனிதபடுத்த வேண்டியதோடு அக்கணத்திலிருந்து ஆச்சாரியனாகிய இராமானுசரையே தன் குருவாக மட்டுமல்லாமல் தனக்கு எல்லாமுமாக வரித்துக்கொண்டார். மேலும் அன்றிலிருந்து அந்த ஏரி வைணவர்களால் ஸ்ரீபாத தீர்த்தம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

பின்வரும் மூன்று நிகழ்வுகள் இவரின் குருபக்தியை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது.

இராமானுசருக்காக பால் சூடுபடுத்திக்கொண்டிருக்கையில் திருவரங்கத்து அரங்கநாதன் கோயில் உற்சவராகிய நம்பெருமாள் உலாவந்துக்கொண்டிருந்தார். அவரை சேவிக்க (தொழும்பொருட்டு) இராமானுசர் வடுகநம்பியை "வடுகா..விரைந்து வா..நம்பெருமாள் உலாவந்துக்கொண்டிருக்கிறார். சேவித்துக்கொள்" என அழைத்தார். தாமதமாக வந்த நம்பியை இராமானுசர் கடிந்துக்கொள்ள அதற்கு "உம்பெருமாளை (நம்பெருமாள் - ரங்கநாதன்) சேவிக்கவந்துவிட்டால், எம்பெருமாளுக்கான (இராமானுசர்) சேவையை (பணிவிடை) யார் செய்வது" என்று பதிலளித்தார்.

இராமானுசரோடு திருவரங்கனை சேவிக்க செல்லும்போதெல்லாம், இராமானுசர் அரங்கனின் வடிவழகில் தன்னைப் பூரணமாக ஈடுபடுத்திக்கொள்ள, நம்பியோ தன் ஆச்சாரியனாகிய இராமானுசரின் வடிவழகில் இலயித்துக்கொண்டிருப்பார். இதனை ஒருநாள் கண்ணுற்ற இராமானுசர் "நீண்ட அப்பெரிய கண்கள்..." எனும் ஆழ்வாரின் பாடலைப் பாடி அரங்கனின் கண்ணழகை காணும்படிக் கூற, நம்பியோ திருப்பாணாழ்வாரின் பாடலாகிய "என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே..." என பதிலளிக்க, இவரின் குருபக்தியை பெருதும் மெச்சினார் உடையவர்.

திருக்கோயிலில் தீர்த்தம் பெற்றுக்கொண்ட பின்னர் தலையில் தடவிக்கொள்வது மரபு. அதைப் போலவே தினமும் இராமானுசர் உட்கொண்ட மீதியை பிரசாதம் என உண்ணும் வழக்கமுடைய நம்பி தான் உண்டபின் கை அலம்பாது தன் தலைமீதே பூசிக்கொள்வார்.

இயற்றிய நூல்கள் தொகு

1. யதிராஜ வைபவம் 2. ராமாநுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம் 3. ராமாநுஜ அஷ்டோத்தர சதநாம நாமாவளி

பெருமை தொகு

மணவாள மாமுனிகள் இயற்றிய ஆர்த்தி பிரபந்தத்தில் பின்வருமாறு வடுகநம்பியை புகழ்ந்துரைக்கிறார்.

உன்னையொழிய ஒரு தெய்வம் மற்றறியா
மன்னுபுகழ்சேர் வடுக நம்பி - தன்னிலையை
என்றனக்குநீதந்தெதிராச என்னாளும்
உன்றனக்கெ ஆட்கொள் உகந்து.

மேற்கோள்கள் தொகு

  1. vaduga nambi
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடுக_நம்பி&oldid=2716767" இலிருந்து மீள்விக்கப்பட்டது