மேல்கோட்டை
மேல்கோட்டை (ஆங்கிலம்: Melukote ), (கன்னடம்: ಮೇಲುಕೋಟೆ)இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுக்காவில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். மேல்கோட்டையில், செல்வநாராயணர் கோயிலும், குன்றின் மீது யோகநரசிம்மர் கோயிலும் அமைந்துள்ளது.
மேல்கோட்டை | |
---|---|
நகரம் | |
நாடு | India |
மாநிலம் | கர்நாடகம் |
மாவட்டம் | மாண்டியா |
ஏற்றம் | 900 m (3,000 ft) |
மொழிகள் | |
• ஆட்சி மொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 571431 |
தொலைபேசி குறியீட்டு எண் | 08232 |
வாகனப் பதிவு | KA-11 |
பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், மைசூரிலிருந்து 51கி.மீ., பெங்களூரிருந்து 133கி.மீ தொலைவில் அமைந்துள்ள பசுமையான வயல்கள் சூழ்ந்த அழகிய மலை கிராமம். கர்நாடகத்தின் வைணவத்தலைமை பீடமாகக் கருதப்படும் இவ்வூருக்கு திருநாராயணபுரம் என்றும் பெயருண்டு.
வரலாறு
தொகு12ம் நூற்றாண்டு முற்பகுதியில் சோழர்கள் ஆட்சியில் வைணவ மகாசாரியர் ஸ்ரீ இராமானுசர் இங்கு பன்னிரண்டு வருடம் தங்கியிருந்துள்ளார். அவரின் முயற்சியால் மண்ணில் புதையுண்ட செல்லப்பிள்ளை (கன்னடத்தில் செலுவ நாராயணா) கோயில் அடையாளங் காணப்பட்டு ஹொய்சாள அரசன் விஷ்ணுவர்த்தன் என்பவன் உதவியோடு நிர்மாணம் செய்து "திருநாராயணபுரம்" என அழைக்கும்படி அருளினார்.
ஆனால் இவர் இங்கு வரும் முன்பே, மலைமேல் பிரகலாதனால் பிரதிஷ்டை செய்ததாகப் புராணங்கள் சொல்லும் நரசிம்மர் கோயில் பிரபலமாகவே இருந்துவந்துள்ளது.
இராமானுசர் தாம் தங்கியிருந்த காலத்தில் நியமித்த தினசரி, வாராந்திர, மாதந்திர, வருடாந்திர வழிபாட்டு நியமங்களையே இன்றும் இக்கோயிலில் பின்பற்றப்படுகிறது.
வைரமுடி சேவை
தொகுஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி, திருமலை பிரம்மோற்சவம், காஞ்சிபுரம் கருடசேவை போல வைணவார்களால் பெரிதும் போற்றப்படும் மிகப்பெரிய திருவிழா "மேல்கோட்டை வைரமுடி சேவை" யாகும்.
குறைந்தபட்சம் நான்கு லட்சம் பக்தர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் இத்திருவிழா, மாண்டியா மாவட்ட நிர்வாகத்தால் மிகுந்த ஏற்பாடுகளுடன் நடத்தப்படுகிறது. அன்றைய நாளில் கருடன் கொணர்ந்த வைரத்தாலான கிரீடம் செல்லப்பிள்ளைக்கு சாற்றப்பட்டு, தங்கத்தாலான கருடன் மீது மாடவீதிகளில் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருள செய்யப்படுகிறது. வைரமுடியை பகலில் காண இயலாது என்ற நம்பிக்கையின்கண் இவ்வைரமுடி சேவை இப்போதும் இரவுப்பொழுதிலே தொடங்கி விடியும் முன் முடிக்கப்பட்டுவிடுகிறது. மேலும் வைரமுடி சாற்றும் போதும் பிரதான அர்ச்சகர் தன் கண்களை மெல்லிய துணியால் கட்டியப்பின்னரே வைரமுடியை அதற்குண்டான பெட்டியிலிருந்து வெளியில் எடுக்கிறார்.
கருடனுக்கு வைநதேயன் என்ற பெயரும் உண்டு. எனவே கருடனால் கொணரப்பட்டது "வைநதேய முடி" என்றழைக்கப்பட்டு, "வைநமுடி" என சுருங்கி பின்னர் "வைரமுடி" என மருவியுள்ளது.
திருக்குலத்தார் உற்சவம்
தொகுசாதிபேதங்களை எதிர்த்த ஸ்ரீ இராமானுசர் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை திருக்குலத்தார் (திருமகளின் பிள்ளைகள்) என அழைத்தத்தோடு அவர்களுக்கு வழிபாட்டிலும் சமூகத்திலும் சமமான இடமளித்தார். ஒருமுறை உற்சவ மூர்த்தியான செல்லப்பிள்ளையை தில்லி முகலாய மன்னனிடமிருந்து ஸ்ரீ இராமானுசர் மீட்டுக் கொண்டுவரும் வழியில் எதிர்ப்பட்ட கொள்ளைக்கூட்டம் கூட்டத்திடமிருந்து இப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி உற்சவ மூர்த்தியையும் ஸ்ரீ இராமானுசரையும் காத்தனர். இதற்கு நன்றி நவிலும்வண்ணம் வைதீக எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இராமானுசரின் ஆணைக்கிணங்க, அவர்கள் கோவிலுக்குள் தொழும் உரிமையையும் இன்றும் தேர்த்திருவிழாவின் அடுத்த நாளிலிருந்து மூன்று நாட்கள் "திருக்குலத்தார் உற்சவம்" மிகப் பிரம்மாண்டமாய் கொண்டாடப்பட்டு வருகிறது.[1]
மற்ற தகவல்கள்
தொகுஇங்கிருக்கும் கல்யாணி தீர்த்தம் எனும் அழகிய குளம் பழமையான மண்டபங்கள் சூழ அழகுடன் காட்சித்தருகிறது. திருத்தொண்டனூர், ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகியன அருகில் இருக்கும் வைணவத் தலங்களாகும்.
இந்த கிராமத்தில் உள்ள அந்த ஊரின் தெரு முழுக்க தமிழ்மணம். அக்ரஹாரத்தின் பெரும்பாலான வீடுகளில் பெயர்ப்பலகைகள், "ஸ்ரீரங்கம் ராகவாச்சாரி, ஸ்ரீரங்கம் சீனிவாச அய்யங்கார்" என்றும் ஸ்ரீரங்கம் என்று ஊரின் பெயரும் பலரது வீட்டில் தமிழிலேயே இன்றும் எழுதப்பட்டிருக்கிறது. சோழர்கள் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைணவர்களின் வாழ்க்கை சிக்கலானதும் அங்கிருந்து பல குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. அவற்றில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேல்கோட்டைக்கு வந்தன. அந்தக் குடும்பங்களில் ஒன்றுதான் ஜெயலலிதாவின் தாத்தா குடும்பமும். அவர் இந்த ஊர் கோயிலில் அர்ச்சகராக இருந்தார். பிரபல திரைப்பட நடிகை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைஜெயந்தி மாலாவுக்கும் பூர்வீகம் இந்த மேல்கோட்டை தான்[2].