வனமோகினி
வனமோகினி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பகவானின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எஸ். எஸ். கோக்கோ, கே. தவமணி தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வனமோகினி | |
---|---|
இயக்கம் | பகவான் |
தயாரிப்பு | என். விஸ்வநாத ஐயர் |
கதை | கதை: பகவான் |
இசை | ராம் சித்தால்கர் |
நடிப்பு | சந்துரு (யானை) எம். கே. ராதா எஸ். எஸ். கோக்கோ கே. கொளத்து மணி டி. வி. கிருஷ்ணசாமி கே. தவமணி தேவி எம். எல். இந்திரா கமலா கே. டி. சக்குபாய் காமடியன் அம்பி கிருஷ்ணாபாய் |
ஒளிப்பதிவு | கே. ராமசந்தர் டி. கே. கோபால் |
படத்தொகுப்பு | விஜயகுமார் |
வெளியீடு | திசம்பர் 24, 1941 |
நீளம் | 16009 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படம் த ஜங்கில் பிரின்செசு என்ற ஹாலிவுட் திரைப்படத்தை ஒட்டித் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் நடித்த டொரத்தி லமூர் நடித்த பாத்திரத்தில் தவமணி தேவி அதே வகையான சாரம் அணிந்து நடித்திருந்தார். தமிழ்த் திரைப்படம் ஒன்றில் பெண்கள் இவ்வாறு அணிவது முதல் தடவையாக இருந்தது[1]. வனமோகினி திரைப்படம் பின்னர் 1957 ஆம் ஆண்டில் அதே பெயரில் சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்டது.
கதைச் சுருக்கம்
தொகுஅடர்ந்த காட்டுப் பிரதேசம். அங்கே குழந்தைகளுக்குச் சமான நாகரிகமல்லாத பாமரக் காட்டு மனிதர்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்களின் அறியாமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட பூசாரி (கே. கொளத்து மணி) கன்னிப்பெண்களைக் காளிக்குப் பலி கொடுத்து வந்தார். பல ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தன் மாமனைத் தேடிக்கொண்டு அரசகுமாரன் (எம். கே. ராதா) தன் படைகளுடன் அதே காட்டுக்கு வருகிறான். பூசாரியின் கொடுமைக்குப் பயந்து வனமோகினி (கே. தவமணி தேவி) என்னும் பெண் சந்துர் என்ற யானையின் உதவியுடன் குகை ஒன்றில் வசித்து வருகிறாள். அரசகுமாரன் அவளைச் சந்தித்துக் காதல் கொள்கிறான். பூசாரியின் கொடுங்கோன்மை அரசகுமாரனுக்குத் தெரிகிறது. காட்டுவாசிகளைப் பூசாரியிடம் இருந்து காப்பாற்ற நினைக்கிறான். இதையறிந்த பூசாரி அரசகுமாரனுக்குப் பல துன்பங்களை இழைத்து வனமோகினியையும் பிடித்துக் கொண்டு செல்கிறான். அரசகுமாரன் வனமோகினியைக் காப்பாற்றச் சென்று தானும் அகப்பட்டுக் கொள்கிறான். அங்கிருந்து அவன் ஒருவாறு தப்பி, தனது மாமனையும் விடுவித்து, வனமோகினியையும் திருமணம் புரிகிறான்.
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்தில் 10 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பல பாடல்களை தவமணி தேவி பாடினார். இவற்றில் அலை மோதுதே அலை மோதுதே ஏதும் அறியாது என்மனம் என்ற தவமணி தேவியின் பாடல் அக்காலத்தில் புகழடைந்தது. இதனால் இவர் சிங்களத்துக் குயில் என அழைக்கப்பட்டார். பாடல்களை யானை வைத்தியநாதையர் இயற்றினார். பாடல்களுக்கு இசையமைத்தவர் மகாராட்டிரத்தைச் சேர்ந்த ராம் சித்தால்க்கர். இவர் பின்னர் சி. இராமச்சந்திரா என்ற பெயரில் பல படங்களுக்கு இசையமைத்துப் புகழடைந்தார்.
- உயர்வோமே உல்லாசம் பெறுவோமே
- அலை மோதுதே அலை மோதுதே ஏதும் அறியாது என்மனம்
- விடவே மாட்டேனே நானவனை
- நீந்தி நீந்தி நீராடுவேன் நானே
- இனிமேல் ஏக போகம் பெறுவேன்
- என்ன ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
- நித்திரை வல்லையே நிலாவும் வீணாகுமே
- மாயமிதே இந்த மானில வாழ்வினில்
- மாறி மாறி வருங்காலமே
- நித்ய நிரந்தரி நீ எங்கள் தாய் அந்தோ
மேற்கோள்கள்
தொகு- ↑ கை, ராண்டார் (28 மே 2011). "Blast from the Past – Vana Mohini 1941". த இந்து. http://www.thehindu.com/arts/cinema/article2057112.ece. பார்த்த நாள்: 26 December 2011.