வரலாற்றுப் பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளை

வரலாற்றுப் பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளை (National Trust for Historic Preservation) வாசிங்டன் டி. சி. இல் உள்ள, தனியார் நிதியுடன் இயங்கும் இலாபநோக்கற்ற அமைப்பு ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவில் வரலாற்றுப் பாதுகாப்புத் துறையில் செயற்படுகிறது. உறுப்பினர் உதவியில் இயங்கும் இந்த அமைப்பு, அமெரிக்காவில் உள்ள பல வகைப்பட்ட வரலாற்றுக் கட்டிடங்கள், அயல்கள், மரபுரிமைகள் ஆகியவற்றை அதன் திட்டங்கள், வளங்கள், பரிந்துரைகள் ஆகியவற்றினூடாகப் பாதுகாப்பதற்கு உதவுமுகமாக 1949 இல் காங்கிரசு உரிமைப்பட்டயம் மூலம் நிறுவப்பட்டது.

வரலாற்றுப் பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளை
சுருக்கம்NTHP
உருவாக்கம்காங்கிரசின் சட்டம், அக்டோபர் 26, 1949
வகைஇலாப நோக்கற்றது, உறுப்பினர் உதவுவது
தலைமையகம்வாசிங்டன், டி.சி., ஐக்கிய அமெரிக்கா
உறுப்பினர்கள்
ஏறத்தாழ 750,000
தலைவர்
இசுட்டெபனி கே. மீக்சு
மைய அமைப்பு
அறங்காவலர் சபை
வலைத்தளம்www.preservationnation.org

மேலோட்டம்

தொகு

அமெரிக்காவின் வரலாற்று இடங்களைப் பாதுகாப்பதில் தலைமைத்துவம் வழங்குவதன் மூலமும்; தேசிய கொள்கை உருவாக்கப் பணிகளில் ஈடுபடுவதுடன் தமது உள்ளூர் அலுவலகங்கள் ஊடாகவும், தேசிய பூங்கா சேவை, மாநில வரலாற்றுப் பாதுகாப்பு அலுவலகங்கள், உள்ளூர் வரலாற்றுப் பாதுகாப்புக் குழுக்கள் போன்ற பங்காளிகள் ஊடாகவும் பரப்புரைகளை மேற்கொள்வதன் மூலமும், உள்ளூர் வரலாற்றுப் பாதுகாப்பாளர்களுக்கு ஆற்றல் வழங்குவதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.[1]

வாசிங்டன் டி. சி. இல் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த அமைப்பின் கள அலுவலகங்கள் பாசுட்டன், நியூயார்க் நகரம், சார்லசுட்டன், நாசுவிலி, சிக்காகோ, ஊசுட்டன், டென்வர், பொயிசு, லாசு ஏஞ்சல்சு, சான் பிரான்சிசுக்கோ, கான்பி (ஒரிகோனில் உள்ள போர்ட்லாந்துக்கு அண்மையில்), சீட்டில் ஆகிய இடங்களில் உள்ளன.[2] இந்த அமைப்பு அறங்காவலர் சபையினால் நிர்வாகம் செய்யப்படுகிறது. இதன் தற்போதைய தலைவர் இசுட்டெபனி கே. மீக்சு. தற்போது இவ்வமைப்புக்கு ஏறத்தாழ 750,000 உறுப்பினர்களும் உதவுபவர்களும் உள்ளனர்.[3]

பரப்புரைகளை முன்னெடுப்பதற்கும் அப்பால், பாதுகாப்புத் தலைமைத்துவ மன்றத்தினூடாகக், கட்டுரைகள், ஆய்விதழ்கள், விடய ஆய்வு, மாநாடுகள், பயிற்சிகள் போன்ற கல்வி வளங்களையும் இந்த அமைப்பு வழங்குகிறது. இது, பிரிசெர்வேசன் (Preservation) என்னும் சஞ்சிகை ஒன்றை வெளியிடுவதுடன், "பிரிசெர்வேசன்நேசன்" (PreservationNation) என்னும் வலைப்பூ ஒன்றையும் நடத்தி வருகிறது.

தேசிய அறக்கட்டளையின் தற்போதைய பணி, வரலாற்று இடங்களின் தகவமை மீள்பயன்பாடு ஊடாகப் பேண்தகு சமுதாயங்களைக் கட்டியெழுப்புவதையும்; பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட களங்களைப் பாதுகாப்பதன் மூலம் பண்பாட்டுப் பல்வகைமையைக் காப்பதையும்; பொது நிலங்களில் உள்ள வரலாற்று இடங்கள் தொடர்பில் கூடிய பொறுப்பாண்மையுடன் செயற்படுவதையும், வரலாற்றுச் சொத்துக்களின் மேலாண்மையில் புதுமுறைகளை முன்னெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. National Trust for Historic Preservation. "What We Do." PreservationNation.org. Retrieved 2014-01-15.
  2. National Trust for Historic Preservation. "Field Offices." PreservationNation.org. Retrieved 2014-01-15.
  3. National Trust for Historic Preservation. "A Brief History of the National Trust." PreservationNation.org. Retrieved 2014-01-15.