வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று

(வலிதாக்கிய காங்கிறீட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இழுவிசைகளின் கீழ் கூடிய பலம் கொண்ட உருக்குக் கம்பிகள் முதலானவற்றை உரிய முறையில் சாதாரண காங்கிறீற்றுக்குள் வைத்துக் கட்டுவதன் மூல காங்கிறீற்றின் இழுவைப் பலம் அதிகரிக்கப் படலாம். இவ்வாறான காங்கிறீற்றே வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று (reinforced concrete) எனப்படுகின்றது.

ஒரு கழிவுநீர் பம்ப் செய்யும் நிலையத்துக்கான அத்திவாரக் காங்கிறீற்று வலுவூட்டப்படுவதற்காக அமைக்கபட்டுள்ள வலுவூட்டற்கம்பிகள்

சாதாரண காங்கிறீற்று அதிக அழுத்த விசைகளைத் (compression force) தாங்கும் வலிமை பெற்றது. ஆனால் இழுவிசைகளைத் (tensile force) தாங்கும் வலிமை குறைந்தது. இதனால் பெரும் இழுவிசைகளைத் தாங்கவேண்டிய கட்டிடக் கூறுகளில் சாதாரண காங்கிறீற்றைப் பயன்படுத்த முடியாது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகவே வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று உருவாக்கப்பட்டது.

கட்டப்பட்டுள்ள வலுவூட்டற் கம்பி

மரத்தினால் செய்யப்பட்ட ஒரு உத்தரமொன்று அதன் இரண்டு முனைகளில் தாங்கப்பட்டால், அது கீழ்முகமாகச் சிறிது தொய்ந்த நிலையில் ஓய்வடையும். இந் நிலையில் உத்தரத்தின் மேற்பகுதியின் நீளம் குறுக்கமடைவதையும், கீழ்ப்பகுதியின் நீளம் அதிகரித்துக் காணப்படுவதையும் அவதானிக்கலாம். இது அதன் மேற்பகுதியில் அழுத்தவிசையும், கீழ்ப்பகுதியில் இழுவிசையும் தொழிற்படுவதைக் குறிக்கிறது. மர உத்தரத்தின் இடத்தில் சாதாரண கொங்கிறீற்றினால் செய்யப்பட்ட உத்தரமொன்று இருப்பதாக வைத்துக்கொண்டால், உத்தரத்தின் கீழ்பகுதிகளில் உருவாகும் இழுவிசை அப்பகுதிகளில் வெடிப்பை ஏற்படுத்தி, உத்தரம் முறிந்து விழ ஏதுவாகும்.

வலுவூட்டப்பட்ட காங்கிறீற்றுக் கூறுகளில், உருக்குக் கம்பிகளோ, அல்லது கண்ணாடி இழைகள் முதலிய இழைப் பொருட்களோ வைத்துக் கட்டபடுவதன் மூலம் காங்கிறீற்றின் இழுவைப்பலம் அதிகரிக்கப் படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்தொகு