வலைவாசல்:கிறித்தவம்/கிறித்தவ நபர்கள்/4
இயேசு கிறிஸ்தவ சமயத்தின் மைய நபரும், கிறிஸ்தவர்களால் கடவுளின் மகனாக வழிபடப்படுபவரும் ஆவார். கிறிஸ்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், கிறித்தவ விவிலியத்திலுள்ள பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா (திருப்பொழிவு பெற்றவர், மீட்பர், இரட்சகர்) என்றும் நம்புகின்றனர். மேலும், சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த இயேசு, சாவை வென்று மீண்டும் உயிர்பெற்றெழுந்ததாகவும், அவர் மூலமாகக் கடவுள் மனித இனத்தைப் பாவத்திலிருந்து விடுவித்ததாகவும் ஏற்கின்றனர். கிறித்தவம் அல்லாத இசுலாம் மற்றும் பஃகாய் போன்ற சமயங்களும் இயேசுவை ஒரு முக்கியமான இறைத்தூதராகக் கருதுகின்றன. இசுலாமிய மதத்தவர் இயேசுவைக் கடவுள் அனுப்பிய முக்கியமான இறைத்தூதர் என்றும் இறையடியார் என்றும் ஏற்றுக்கொண்டாலும், அவரைக் "கடவுளின் மகன்" என்று ஏற்பதில்லை. இயேசு என்னும் சொல் Iesus என்று அமைந்த இலத்தீன் வடிவத்திலிருந்தும், அதற்கு மூலமான Ἰησοῦς (Iēsoûs) என்னும் கிரேக்க வடிவத்திலிருந்தும் பிறக்கிறது. இந்த வடிவங்களுக்கு அடிப்படையாக இருப்பது எபிரேயப் பெயர். அது எபிரேய மொழியில் יְהוֹשֻׁעַ (Yĕhōšuă‘, Joshua) எனவும், எபிரேய-அரமேய மொழியில் יֵשׁוּעַ (Yēšûă‘) எனவும் அமைந்ததாகும். கடவுள் (யாவே) விடுதலை (மீட்பு) அளிக்கிறார் என்பதே இயேசு என்னும் சொல்லின் பொருள். கிறித்து (கிறிஸ்து) என்னும் சொல் திருப்பொழிவு பெற்றவர் (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்னும் பொருளுடையது. அதன் மூலம் Χριστός (Christós) என்னும் கிரேக்கச் சொல். அது எபிரேய மொழியில் மெசியா מָשִׁיחַ (Messiah) என்று வழங்கப்படும் சொல்லின் மொழிபெயர்ப்பாகும்.