வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/10

தாலந்துகள் உவமை என்பது இயேசு சொன்ன சிறு கதைகளுள் ஒன்று. கடவுள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள திறமைகளை சரியாக பயன்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள்பட இக்கதையை இயேசு மக்களுக்கு கூறினார். இறைவன் அளித்த திறமைகளை சரியாக பயன்படுத்துவோர்க்கு இறைவன் மென்மேலும் திறமைகளை வழங்குவான். அவற்றை பயன்படுத்தாதவர்களிடம் இருக்கும் திறமையும் மங்கிப் போகும் என்னும் பொருள் பட இயேசு கூறிய "உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்" என்பதை முக்கிய குறிக்கோள் வசனமாகக் குறிப்பிடலாம். இது புனித விவிலியத்தில் மத்தேயு 25:14-30 இல் எழுதப்பட்டுள்ளது. இங்கு தாலந்துகள் என்பது "talanton" என்ற கிரேக்கச் சொல்லின் நேரடி எழுத்துப் பெயர்ப்பாகும். இது கிறிஸ்துவுக்கு முன்னரான காலந்தொடங்கி கிரேக்கம், உரோம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட நிறை மற்றும் நாணயத்தின் அலகாகும். இச்சொல்லே பின்னர் பழைய ஆங்கிலத்தில் "talente" என மருவி இன்று "Talents" எனவும் மருவி திறமை என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. முதலில் உருவான விவிலியத் தமிழ் மொழிபெயர்ப்புகள் இச்சொல்லை தாலந்து என மொழிபெயர்த்தன. இது தமிழ் பேசும் கிறித்தவரிடையே "கடவுளின் கொடைகள்" என்ற பொருள்பட வேரூன்றி விடவே பின்னர் வந்த தமிழ் விவிலிய மொழி பெயர்ப்புகளும் தாலந்து என்ற இதே சொல்லையே கையாள்கின்றன