வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/3

கலிலேயக் கடல் என்றும் கெனசரேத்து ஏரி என்றும் அழைக்கப்படுகின்ற பெரும் நீர்த்தேக்கம் இசுரயேல் நாட்டில் உள்ளது. மனித இதயம் போன்ற வடிவம் கொண்ட இந்த ஏரிப் பகுதியில்தான் இயேசு கிறித்துவின் பணி பெரும்பாலும் நிகழ்ந்தது. விவிலிய வரலாற்றில் இந்த ஏரி சிறப்பான பங்கு வகிக்கிறது. இசுரயேல் நாட்டில் நல்ல தண்ணீர் கொண்ட ஏரிகளுள் மிகப் பெரியதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு பணிசெய்த காலத்திலேயே கலிலேயக் கடல் மிகவும் பேர் போன இடமாக இருந்தது. கடலோர நெடுஞ்சாலை என்னும் பெயர்கொண்ட வணிகப் பாதை அவ்வழியே சென்று, எகிப்தையும் வடக்கு அரசுகளையும் இணைத்தது. அந்த ஏரிக்கரையில் உரோமையர் பல நகர்களை நிறுவினர். இயேசு பலமுறை இக்கடலுக்கு வந்துள்ளார். இந்த ஏரிக்கரையில் மீனவர் குடியிருப்புகள் பல இருந்தன. அங்கு வாணிகம் சிறப்பாக நடைபெற்றது. இயேசு தமது முதல் திருத்தூதர்களை அழைத்தபோது, இக்கடலில்தான் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இவ்வாறு, மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்சென்றவர்கள் திருத்தூதர்கள் பேதுருவும் அவர்தம் உடன்பிறப்பு அந்திரேயாவும், மற்றும் யோவான், அவர்தம் உடன்பிறப்பு யாக்கோபும் ஆவர். கலிலேயக் கடலருகில் அமைந்த ஒரு மலையில்தான் இயேசு ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றியதாக மத்தேயு நற்செய்தியாளர் குறித்துள்ளார்.