வலைவாசல்:கொழும்பு/முகவுரை

கொழும்பு (ஆங்கில மொழி: Colombo, சிங்களம்: කොළඹ) இலங்கையின் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலை நகரமும் ஆகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்களில் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், கி. பி. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியதாகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் கிறிஸ்தோபர் கொலம்பசை நினைவுகூரும் வகையில் "கொலோம்போ" என மாற்றப்பட்டது. கொழும்பின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396ஆகக் காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு, இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகும். கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50'இல் அமைந்துள்ளது.