வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள்/15
கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் (அக்டோபர் 10, 1921 - மார்ச் 21, 2008) ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். சச்சிதானந்த என்ற பெயரிலும், ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார். யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை, மாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை (தும்பளை), தெய்வானைப்பிள்ளை (மாவிட்டபுரம்) ஆகியோருக்குப் பிறந்தவர் சச்சிதானந்தன். மகாவித்வான் நவநீதகிருஷ்ண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேசுவரா கல்லூரி (1938-1940) ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். தந்தையாரிடம் வானியலும் சோதிடமும் சிவப்பிரகாச தேசிகரிடமும் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடமும் பாலசுந்தரக்குரக்களிடமும் சமக்கிருதக்கல்வியும் பயின்றார். மதுரைத் தமிழ்ப் பண்டிதர் பட்டமும் பெற்றார். 1971 ஆம் ஆண்டில் லண்டனில் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். 2001 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை உடையவர்.