வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள்/17
தேவநேயப் பாவாணர் (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.
தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென உலகிற்குப் பறைசாற்றியவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று வாதிட்டவர். மொழி ஞாயிறு தேவநேயப்பாவணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.